அமைப்பு என்றால் என்ன? அது சமூக அமைப்பா? அரசியல் அமைப்பா? பொருளாதார அமைப்பா? கலாச்சார அமைப்பா? அமைப்பின் நோக்கம் என்ன? இலக்கு என்ன? கொள்கை கோட்பாடுகள் என்ன? வடிவம் என்ன? விதிமுறைகள் என்ன? நிர்வாக நடைமுறைகள் என்ன? மக்களை ஏன் அமைப்பாக்க வேண்டும்? அமைப்பாக்க வேண்டிய மக்கள் யாவர்? இன்னும் இவைபோன்ற அடிப்படையான பல்வேறு விவரங்களைத் தேடித் தெளிவு பெறுவதற்கான ஒரு முயற்சிதான் 'அமைப்பாய்த் திரள்வோம்' என்கிற இக்கட்டுரைகள் ஆகும்.
இவை நமது தமிழ்மண் மாத இதழில் 58 மாதங்கள் தொடராக வெளிவந்தன. இத்தொடர் இன்னும் முற்றுப்பெறவில்லை. தவிர்க்க இயலாத காரணங்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்கி இன்னும் ஏராளம் தொடர்ந்து எழுதவேண்டியுள்ளது.
இக்கட்டுரைகளை எழுதவேண்டிய தேவை என்ன ? விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இன்னும் ஒரு அமைப்பாகப் பரிணாமம் பெறவில்லையா ? அமைப்பாகியுள்ளதெனில், அது என்ன வகையான அமைப்பு சமூக அமைப்பா? கலாச்சார அமைப்பா? அரசியல் அமைப்பா? இந்த அமைப்பில் மக்கள் என்போர் யாவர்? இதன் கருத்தியல் என்ன?
இதன் தலைமைத்துவத்தில் கருத்தியலின் பங்கு என்ன? இதற்கு சட்டம் - விதிமுறைகள் உள்ளனவா? பரந்துபட்ட வெகுமக்களை உள்வாங்கியதாக இது அமைப்பாக்கம் பெற்றுள்ளதா? இவை போன்ற ஏராளமான கேள்விகளுக்கும் விளக்கம் தேடும் முயற்சியே இது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஒரு முழுமையான அரசியலமைப்பாக வடிவமைப்பதற்கு ஏற்றவகையில், அதனை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்ட சூழலில், மூன்று முதன்மையான கொள்கை முழக்கங்கள் முன்மொழியப்பட்டன. அவை, "அமைப்பாய்த் திரள்வோம்! அங்கீகாரம் பெறுவோம் ! அதிகாரம் வெல்வோம்!" என்பனவாகும்.
அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டுமெனில், அதற்கு வெகுமக்களின் அங்கீகாரம் வேண்டும்! அத்தகையதொரு அங்கீகாரத்தைப் பெறவேண்டுமெனில், அதற்குரிய அமைப்பாக வெகுமக்கள் அணிதிரளவேண்டும். இந்த அடிப்படையை உணர்த்துவதற்கான ஒரு எளிய முயற்சிதான் இது!
'அதிகாரத்தை வெல்வோம் என்றால், அது அரசியலதிகாரத்தையே குறிக்கும். அரசியலதிகாரம் அல்லது ஆட்சியதிகாரம் என்பது மற்ற அதிகாரங்களுக்கெல்லாம் மேலான வல்லமை கொண்ட உச்சநிலை அதிகாரமாகும். இத்தகைய பேராற்றல் வாய்ந்த அரசியலதிகாரத்தை நோக்கி மக்களை அரசியல் படுத்தும் அமைப்பானது அரசியலமைப்பே ஆகும். எனவே, அரசியல் திகாரத்தை நோக்கி இயங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஓர் அரசியல் இயக்கமே ஆகும். சாதி உள்ளிட்ட சமூகக் கூறுகளை மட்டுமே முன்னிறுத்துகிற சமூக அமைப்போ அல்லது பண்பாட்டுத்தளத்தில் மட்டுமே இயங்குகிற கலாச்சார அமைப்போ அல்ல. அது, சமூகம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் உள்ள அரசியல் கூறுகளைச் செழுமைப் படுத்தி, சனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றி, அரசிய லதிகாரத்தை வென்றெடுப்பதற்கான அரசியலமைப்பே ஆகும்.
ஒரு அரசியலமைப்பைக் கட்டமைத்து வலுப்படுத்தி, வெற்றிகரமாக வழிநடத்த வேண்டுமானால், அதற்கான கொள்கை - கோட்பாடுகளின் அடிப்படையில் அவற்றுக்குரிய பொறுப்பாளர்களையும் மக்களையும் முறையாக அரசியல் படுத்த வேண்டும். அதாவது, கட்சி, கொடி, கொள்கை - கோட்பாடுகள், இலச்சினை மற்றும் சட்டம் - விதிமுறைகள் ஆகியவற்றையெல்லாம் வரையறுப்பதுடன், அவற்றைக் களத்தில் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பாளர்கள் மற்றும்
களப்பணியாளர்கள் யாவரையும் அரசியல்படுத்த வேண்டும். அவர்களை மட்டுமின்றி, இலக்கினை நோக்கி அமைப்பாக்கப்பட வேண்டிய வெகுமக்களையும் அரசியல்படுத்த வேண்டும்.
அரசியல்படுத்துதல் என்பது ஒரு அமைப்பு வழியாகவே நிகழ்த்தமுடியும். ஆதலால், அரசியல்படுத்துதலுக்கு அமைப்பைக் கட்டுவதே முதன்மையான தேவையாகும். அமைப்பைக் கட்டுவதிலிருந்தே மக்களை அமைப்பாய்த் திரட்டிட இயலும். அமைப்பைக் கட்டுவதும், அமைப்பாய்த் திரட்டுவதும் வெவ்வேறானவை என்றாலும், அடிப்படையில் இரண்டும் அரசியல்படுத்துதலேயாகும்.
ஒரு அமைப்பை அல்லது கட்சியை வழிநடத்தக் கூடிய தலைவர்கள், பொறுப்பாளர்கள், களப்பணியாளர்கள் போன்ற யாவரையும் அரசியல் படுத்துவதுதான் 'அமைப்பைக் கட்டும்' செயல்திட்டத்தின் அடிப்படையாகும். அமைப்பை வ்ழி நடத்துவோரை அரசியல்படுத்தாமல் அதனை வடிவாக்கமும் வலுவாக்கமும் செய்ய இயலாது. அவ்வாறு, அரசியல்படுத்தப்பட்ட பொறுப்பாளர்களால் வழிநடத்தப்படும் ஒரு அமைப்பால்தான் அமைப்பாக்கப்பட வேண்டிய மக்களை அடையாளம் காணவும் முடியும்; அவர்களை அரசியல்படுத்தி அணி திரட்டவும் முடியும். இவ்வாறு பரந்துபட்ட வெகுமக்களை அணிதிரட்டி, அரசியல் படுத்தி, அமைப்பாக்குவதுதான், ‘அமைப்பாய்த் திரட்டும்’ செயல்திட்டத்தின் அடிப்படை ஆகும்.
அதாவது, அமைப்பை வழிநடத்துவோரை அரசியல் படுத்துவது 'அமைப்பைக் கட்டும்' செயல்திட்டம் எனில், அந்த அமைப்பை ஏற்றுக்கொள்வோரை அரசியல் படுத்துவது 'அமைப்பாய்த் திரட்டும்’ செயல்திட்டமாகும். சமகாலத்தில் இவ்விரு செயல் திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே 'அமைப்பாய்த் திரள்வோம்' என்கிற மாபெரும் சவாலை எதிர்கொண்டு சாதித்திட இயலும்.
அமைப்பை வழிநடத்துவோர் மட்டுமே அரசியல் படுத்தப்பட்டால், அவர்கள் ஒரு அரசியல் சக்தியாகப் பரிணாமம் பெற்றாலும் அவர்களால் ஒரு குழுவாகத்தான் இயங்கிட இயலும். ஒரு வெகுமக்கள் அமைப்பாக வலுப்பெற இயலாது! எனவே, ஏற்புடைய வெகுமக்களையும் அரசியல்படுத்துவது தான் அமைப்பாக்கச் செயல்திட்டத்தின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும்!
அரசியல்படுத்துதல் என்பது ஒவ்வொரு தனிநபரின் ஆளுமையை மேம்படுத்தி வலுப்படுத்துவதாகும். குறிப்பிட்ட ஒரு கட்சியின் அமைப்புரீதியான விவரங்களையும் அதன் கொள்கை - கோட்பாடுகள் தொடர்பான விவரங்களையும் அறிந்து கொள்வது அல்லது அறியப்படுத்துவது மட்டுமே அரசியல்படுத்துதல் என்றாகாது. அது, குடும்பம், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு தளங்கள் குறித்த புரிதல்களையும் அவற்றின் மீதான நிர்வாகத் திறன்களையும் பெறுவது - பெருக்குவது என்னும் விரிந்த பொருளைக் கொண்டதாகும்!
கட்சி, கட்சிசார்ந்த அரசியல், சமூகம், சமூகம்சார்ந்த அரசியல், பொருளாதாரம், பொருளாதரம்சார்ந்த அரசியல்; கலாச்சாரம், கலாச்சாரம்சார்ந்த அரசியல்; சுற்றுச்சூழல், சுற்றுச் சூழல்சார்ந்த அரசியல் என இவைபோன்ற அனைத்தையும் அரசியல் பார்வையுடன் கூடிய புரிதல்களைப் பெறுவதன் மூலமே, அவற்றின் மீதான நிர்வாகத் திறன்களைப் பெறவும் பெருக்கவும் இயலும்.
கட்சி நிர்வாகம் மட்டுமின்றி குடும்ப நிர்வாகமும் தனிநபரின் ஆளுமையோடு தொடர்புடையதே ஆகும். எனவே, குடும்ப நிர்வாகத்திறனும் அரசியல் படுத்துதலின் ஒரு பகுதியே ஆகும். இவ்வாறு, தனிநபரோடு தொடர்புடைய அனைத்துத் தளங்களுமே தனிநபரின் ஆளுமையைக் கட்டமைப்பதில் உரிய பங்கு வகிக்கின்றன.
எனவே, தனிநபரின் ஆளுமையைக் கட்டமைக்கக்கூடிய அரசியல் படுத்துதல் என்னும் நடவடிக்கைகளைக் கட்சி நிர்வாகம் மற்றும் கட்சி அரசியல் ஆகியவற்றோடு மட்டுமே தொடர்புடையவையென சுருக்கிப் பார்த்தல் கூடாது.
'அமைப்பாக்குதல்', 'அரசியல்படுத்துதல்’ ஆகியவற்றின் தேவையை, கடந்த கால் நூற்றாண்டு கால அரசியல்களம் மிக ஆழமாக எனக்கு உணர்த்தியுள்ளது. ஆகவேதான், களத்தில் மக்களிடம் கற்ற பட்டறிவிலிருந்து, மக்களை அமைப்பாக்கும்போது சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள், தீர்வுகள் போன்றவற்றை, ஒரு நுட்பமான, விரிவான தொடர் உரையாடல்களுக்கான முன்மொழிவாகப் பதிவு செய்துள்ளேன்.
பெரும்பாலும், அமைப்பை வழிநடத்துவோரிடையே எழும் சிக்கல்கள்தாம், அமைப்பாக்க நடவடிக்கைகளுக்கு மிகப்பெரும் சவால்களாக உள்ளன.
ஒரே அமைப்பில், ஒரே களத்தில், ஒரே இலக்கில், ஒரே திசைவழியில், ஒரே சக்தியாகத் திரண்டு செயலாற்றும்போது, தனிநபர்களுக்கிடையில் கருத்து முரண், கருத்தியல் முரண், நடத்தை முரண், நடைமுறை முரண், நட்பு முரண், பகை முரண் போன்ற பல்வேறு வகையிலான முரண்கள் எழுவதும் அவை சிக்கல்களாக மாறுவதும் அவ்வப்போது அவற்றை இலகுவாக-எதிர்கொண்டு வெற்றிகரமாகக் கடந்து முன்னேறிச் செல்வதும் அமைப்பாக்க நடவடிக்கையில் தவிர்க்க இயலாதவையாகும்.
அதாவது, அமைப்பை வெகுமக்களிடையே கொண்டு செல்லவேண்டிய, அதனை வழிநடத்த வேண்டிய 'தலைவர்கள் முதல் தொண்டர்கள்' வரையிலான பொறுப்பாளர்களிடையே எழும் 'தனிநபர்ச் சிக்கல்கள்' தாம், பெரும்பாலும் அமைப்புக்கும் மக்களுக்குமிடையே பெரும் இடைவெளியை உருவாக்குகின்றன. அவற்றை எதிர்கொண்டு தீர்வு காண்பது தான் அமைப்பாக்கத்தின் முன்னுள்ள சவால்களிலேயே முதன்மையானதாகும்.
அத்தகைய தனிநபர்ச் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது? அமைப்பாக்க நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் நேராவகையில் அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
‘மக்கள் - அமைப்பு - கொள்கை - மக்கள்' என்னும் தொடர்நிலை உறவுகளின் அடிப்படையில், மக்கள் நலன்கள் மற்றும் அமைப்புநலன்களை முன்னிறுத்தாமல், 'தனிநபர் – அமைப்பு – கொள்கை - தனிநபர்' என்னும் அடிப்படையில் தனிநபர் நலன்களை மட்டுமே முன்னிறுத்துவோரால் தான், இத்தகைய தனிநபர் முரண்கள் எழுந்து, சிக்கல்கள் வளர்ந்து, இயக்கப்போக்கில் தேக்கம் நிகழ்ந்து, அமைப்புக்கும் மக்களுக்குமிடையே தொடர்புகள் அறுந்து, ஒரு இடைவெளி நேர்ந்திடும் சூழல்கள் உருவாகின்றன.
இவ்வாறு, தனிநபர்ச் சிக்கல்களை உருவாக்குவோர் மீது, அமைப்புவழியிலான 'சட்டம் - விசாரணை - எச்சரிக்கை - தண்டனை' என்னும் அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தீர்வுகாண்பது ஒருவகையிலான வழிமுறையாகும். அதேவேளையில், 'அமைப்பியல் – கருத்தியல் – அரசியல்படுத்துதல் - ஆளுமைவளர்த்தல்' என்னும் அடிப்படையில் அவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தீர்வு காண்பது இன்னொரு வகையிலான வழிமுறையாகும். இந்தவகையிலான வழிமுறைதான் அறிவியல்பூர்வமான, நிறைவான, நிலையான தீர்வுமுறையாகும்.
'தண்டனை' வழிமுறையிலான தீர்வைப் புரிந்து கொள்வதற்கும் ஒத்துழைப்பதற்கும்கூட, 'ஆளுமைவளர்த்தல்' வழிமுறை இன்றியமையாத தேவையாகும். தண்டனை என்பது அமைப்பியலின் ஒரு பகுதியாதலால், அது ஆளுமை வளர்த்தலின் ஒரு அங்கமே ஆகும். தண்டித்தலும் ஒருவகையிலான கற்பித்தல் தான் என்பதால், அதுவும் அரசியல் படுத்துதலே ஆகும். தண்டனை அல்லது ஒழுங்கு நடவடிக்கையானது, அமைப்பையும் அதன் கொள்கைகளையும் பாதுகாப்பதற்காக மட்டுமின்றி, நடவடிக்கைக்குள்ளாகும் ஒருவரின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்காகவும்தான் என்கிற புரிதல் தேவையாகும். அதாவது, ஒழுங்கு நடவடிக்கையின் மூலம், ஒருவர் தான் சார்ந்த அமைப்பின் நிர்வாக நடைமுறைகள், சட்டம் மற்றும் விதிமுறைகள், தனிநபருக்குரிய அதிகாரங்கள் மற்றும் உரிமைகள், இன்னும் இவை போன்ற பிற விவரங்கள் யாவற்றையும் தெளிவுற அறிந்து கொள்ளவும் அமைப்பியல் தொடர்பான அடிப்படைக் கூறுகளைக் கற்றுக்கொள்ளவும் இயலும். இதன்வழி தண்டனைக்குள்ளாகும் நபர் அரசியல் படுத்தப்படுவதால் அவரது ஆளுமைத்திறனும் பெருகும். இவ்வாறு, தண்டனை அல்லது ஒழுங்கு நடவடிக்கையானது அமைப்பியல் குறித்த அரசியல்படுத்துதலை நிகழ்த்துகிறது.
அமைப்பியலைப் போலவே கருத்தியலையும் தெளிவுறக் கற்றுக்கொள்வது, கற்பிப்பது, அரசியல் படுத்துதலில் மிகவும் இன்றியமையாத தேவையாகும். கருத்தியல் என்பது கொள்கை மற்றும் கோட்பாடுகள் எனலாம். கொள்கைகளும் கோட்பாடுகளும் வெவ்வேறானவை அல்ல; ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; ஒன்றுக்குள் ஒன்றாய் உருவாகக்கூடியவை ஆகும்.
கொள்கைகள் என்பவை, அமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களையும் அவற்றுக்கென ஏற்றுக்கொள்ளப்படும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப் படும் அல்லது உள்வாங்கப்படும்.
நோக்குதல் என்பதே நோக்கம் என்றாகிறது. நோக்கம் என்பது எதை நோக்கிப் பயணிப்பது, எதைக் குறிவைத்துச் செயற்படுவது என்கிற ஒரு குறிப்பான நிலைப்பாட்டை அல்லது ஒரு குறிப்பான பார்வையைக் குறிக்கும். அதாவது, ஒரு குறிப்பான - கூர்மையான - குவிமையமான - தெளிவான பார்வையை , அப்பார்வைக்கான கோணத்தைக் குறிப்பதே நோக்கமாகும்.
கோள் என்பது ஒரு புள்ளியை அல்லது ஒரு எல்லையை அல்லது ஒரு இலக்கைக் குறிக்கும். குறிப்பான கோள் என்னும் குறிப்பான புள்ளியோ, குறிப்பான எல்லையோ, குறிப்பான இலக்கோ குறிக்கோள் எனலாம். அத்தகைய குறிக்கோள் என்பது, ஒரு நோக்கத்தைக் குறிவைத்து இயங்கும்போது, அதற்குரிய குறிப்பான எல்லைகளை அல்லது இலக்குகளை எட்டுவதற்கென வெற்றிகரமாக ஆற்றவேண்டிய கடமைகள், நிறைவேற்ற வேண்டிய தேவைகள் போன்ற செயல்திட்டங்களைக் குறிப்பதாகும்.
வழிபடுதல் என்பது வழிபாடு என்றாகிறது.
கோள்படுதல் என்பது கோட்பாடு என்றாகிறது.
குறிப்பிட்ட கோள்கள் என்னும் குறிக்கோள்களை, இலக்குகளை எட்டுவதன் மூலம் இறுதி இலக்கைச் சென்றடை வதற்கேற்ப அமைப்பை, மக்களை வழிநடத்தும் நெறியே கோட்பாடாகும்.
கோட்பாடுகள் என்பவை, நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கென உள்வாங்கப் பெற்ற கொள்கைகளையும் எட்டவேண்டிய இலக்குகளையும் பொறுத்தே வரையறுக்கப்படும் அல்லது ஏற்கப்படும்.
இலக்குகள் என்பவை, அமைப்புக்கான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில், மக்களுக்கான குறுகியகால மற்றும் நீண்டகால தேவைகளை நிறைவேற்றுவது; அவர்தம் நலன்களைப் பாதுகாப்பது போன்ற செயல்திட்டங்களிலிருந்தே அடையாளப்படுத்தப்படும்.
சான்றாக, வேலைவாய்ப்பு என்பது ஒருவரின் தேவையாகிற போது, அதுவே அவருக்கு ஒரு இலக்காகிறது. எனவே, வேலை வாய்ப்பு என்னும் இலக்கை எட்ட கல்வித்தகுதி என்பது தேவையாகிறது. கல்வித்தகுதி ஒரு தேவையாகிறபோது, அதனைப் பெறுவது ஒரு இலக்காகிறது. இவ்வாறு, தேவைகளைப் பொறுத்தே உடனடி இலக்குகள், தொலைதூர இலக்குகள் மற்றும் இறுதி இலக்குகள் உருவாகின்றன.
இவ்வாறு, கல்வியும் வேலைவாய்ப்பும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் தேவைகளாக, இலக்குகளாக அமையும்போது, இடஒதுக்கீடு என்பது அவற்றின் கொள்கையாகிறது. இடஒதுக்கீடு என்னும் கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு, நடைமுறைப்படுத்துவதற்கு, பாதுகாப்பதற்கு சமூகநீதி என்பது அதற்கான கோட்பாடாகிறது.
எனவே, மக்களுக்கான தேவைகள், தேவைகளுக்கான இலக்குகள், அவற்றை நெறிப்படுத்துவதற்கான கொள்கைகள்
மற்றும் கோட்பாடுகள் போன்றவற்றை அமைப்பாளர்களும் மக்களும் கற்றுக்கொள்வது, கற்பிப்பது ஆகியவை அமைப்பாக்க நடவடிக்கைகளில் மிகவும் இன்றியமையாதவையாகும். இத்தகைய நடைமுறைகளே கருத்தியலை அரசியல்படுத்தும் நடவடிக்கையாகும்
அரசியல் படுத்துதல் என்பது அமைப்பியல், கருத்தியல் ஆகியவற்றைப்பற்றி மட்டுமின்றி, அமைப்பாக்கப்படும் மக்களின் வாழ்வியல், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைகள், போராட்டங்கள் மற்றும் அவர்களின் பொது உளவியல் போன்றவற்றை மக்களிடமிருந்தே கற்று, தேவையொட்டி அவற்றை அமைப்பாக்கப்பட வேண்டிய மக்களுக்கும் அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும் கற்பிப்பித்தல் என்பனவற்றையும் உள்ளடக்கியதாகும். இத்தகைய 'கற்றலும் கற்பித்தலும்' சமகாலத்தில் நிகழும் ஒரு தொடர்ச்சியான பயிற்சி முறையே அரசியல் படுத்துதலாகும்.
அரசியல் படுத்துதல் என்னும் இத்தகைய தொடர் பயிற்சிமுறையானது, ஒரு நெடுங்கால செயல்திட்டமாகும். அதாவது, இது குறிப்பிட்ட காலவரம்புக்குட்பட்ட செயல் திட்டமாக இல்லாமல், தேவையின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாகத் தொடரவேண்டியதாகும். குறிப்பாக, காலப்போக்கில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையில், மக்கள் நலன்களுக்கேற்ப கொள்கைகளைச் செழுமைப்படுத்துவதும், அக்கொள்கைக்கான அமைப்பை முறைப்படுத்தி வலுப்படுத்து வதும், அவ்வமைப்பின் முன்னணியினர் மற்றும் அதனைச் சார்ந்த மக்கள் ஆகியோரைப் பக்குவப்படுத்தி அவர்தம் ஆளுமைப்பண்புகளை மேம்படுத்துவதும், அடையவேண்டிய இலக்கை எட்டும் காலம் வரையில் இடையறாது இயங்கியவாறே அமைப்பை வெற்றிகரமாக முன்னோக்கி வழிநடத்துவதும் போன்ற யாவும், ஒரு குறிப்பிட்ட காலவரம்புக்குள் நிறைவேற்றக்கூடியவையல்ல. மாறாக, கற்றல் - கற்பித்தல் என்னும் அரசியல் படுத்துதல் அடிப்படையில், ஒரு நீண்டகால நடைமுறையாக நிகழக் கூடியதாகும்.
இத்தகைய நீண்டகால செயல்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்னும் தீராவேட்கையினின்று பீறிட்டெழுந்த உணர்வுகள், எண்ணங்கள், போராட்டக் களத்தினின்று கற்றுணர்ந்த படிப்பினைகள் ஆகியவை எழுத்துக்களாக வடிக்கப்பெற்று, 'அமைப்பாய்த் திரள்வோம்' என்னும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்காக அமைப்பைக் கட்டுதல், மக்களை அமைப்பாய்த் திரட்டுதல் என்னும் மகத்தான கடமையை நிறைவேற்ற, இத்தொகுப்பு வீரியம் மிக்க உந்துதலையும் வேகம் நிறைந்த ஊக்கத்தையும் அளிக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்.
இதனை விடுதலைச்சிறுத்தைகளுக்காக மட்டுமின்றி, அனைத்து இயக்கங்களின் பார்வைக்கு, களத்திற்கு, புரட்சிகர மாற்றத்திற்கு முன்வைக்கப்படுகிறது.
10.01.2018
சென்னை
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
அமைப்பாய்த் திரள்வோம் - உழைக்கும் மக்களின் விடுதலைக்காக