அமைப்பாய்த் திரள்வோம் நன்றி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 

https://periyarbooks.com/products/amaippaai-thiralvoam

 

 

 

நன்றி நவில்வது மானுடத்தின் நனிசிறந்த நாகரிகம். அது வெறும் சொல் அல்ல; உளம் களிக்கும் உன்னத செயல்! செயல் எனினும், அது 'கடனே' என ஒப்புக்கு ஆற்றப்படும் ஒருவகை சடங்கு அல்ல; மாறாக, மற்றோரை மகிழ்வித்து - மகிழும் மகத்தான பண்பு! மற்றோர் எனில், அது உடனிருந்து, உடனுறைந்து, உடன் மகிழ்ந்து, உடன் இயங்கும் உற்றவர்கள் ஆவர்! அத்தகைய உற்றவர்கள் யாவருக்கும் ஈண்டு யானும் இன்புற்று நன்றிக்கடன் ஆற்றுவதற்கோர் நல்வாய்ப்பு இது!

அதிகார வலிமையின்றி அடித்தட்டில் கிடந்துழலும் அப்பாவி மக்களை அமைப்பாக்க வேண்டிய தேவைகளையும், அவ்வாறு நிகழும் அமைப்பாக்க நடவடிக்கைகளின் போது களத்தில் எதிர்கொள்ள வேண்டிய கடும்சவால்களையும், உழைப்போரின் உரிமைக்களத்திற்கும் உள்வாங்கிய கருத்தியலுக்கும் இடையிலான உறவுகளையும், விரிவாக விளக்குகிற - விவரிக்கிற, இந்த அரசியல் ஆவணத்தை யாப்பதில் யான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உற்ற துணையாயிருந்து உவகை பொங்கிட ஒத்துழைப்பு நல்கியோர் யாவரும் எனது ஆழ்மனதில் வேர்கொண்டு ஆழமாக நிலைகொண்டுள்ளனர்.

இவர்கள் இதனை உருவாக்கும் உலைக்களத்தில், ஊனின்றி, உறக்கமின்றி, சோர்வின்றி, சுணக்கமின்றி,

ஒரு நொடியும் சலிப்பின்றி, ஊக்கம் குறைவின்றி, ஊதியம் ஏதுமின்றி, உறுதிக் குலைவின்றி, உரிய இலக்கு ஒன்றி, உடலையும் உயிரையும் உருக்கி உழைத்தனர் உள்ளம் கவர் துடிப்போடு! ஏனெனில், எழுச்சிமிகு இதழ் 'நமது தமிழ்மண்', இயக்கத்தின் ஏற்றமிகு கொள்கை ஏடு!

அடித்தட்டு மக்களின் ஆயுதக்கிடங்கான அரசியல் ஏடு 'நமது தமிழ்மண்'! இது இன்றைய அரசியல் களத்தில் அயர்வின்றிப் போராடும் ஆற்றல் மிகு சிறுத்தைகளின் அடிப்படைக் கொள்கைகளைப் பரப்பும் அதிகாரப்பூர்வமான ஆவணமாகும். எனவே, இயக்கத்தின் முன்னணி பொறுப் பாளர்களே, ஈர்ப்புமிகு ஆற்றலோடு, ஈடில்லா எழுச்சியோடு, இன்முகக் களிப்போடு, ஏறுநடை மிடுக்கோடு, இடையறாது தொடர்ந்து இதழ்ப்பணியாற்றுகின்றனர்! இவர்களே என்னை உந்தி இயக்கும் இணையிலா ஆற்றல்களாய் இன்றும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றனர். இத்தகைய சிறப்புக்குரிய இவர்கள் இக்கட்டுரைகளை வடிப்பதில், வார்ப்பதில் ஆற்றியுள்ள பங்களிப்பு மகத்தானது.

2007- அக்டோபர் 2, வேளச்சேரித் தீர்மானத்தையொட்டி நடந்தேறிய முதற்கட்ட மறுசீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து '2011 - விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு' என 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது இரண்டாம் கட்ட மறுசீரமைப்புக்கான அறிவிப்பாகும். அப்போதுதான், "அமைப்பாய்த் திரள்வோம்! அங்கீகாரம் பெறுவோம்! அதிகாரம் வெல்வோம்!" என்கிற கொள்கை முழக்கங்கள் முன்மொழியப்பட்டன. இவை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்புக்குரிய அடிப்படைச் செயல்திட்டங்களாகும். இவற்றில், முதற்கட்டமாக 'அமைப்பாய்த் திரள்வோம்' என்பதை விவரிக்கும் நோக்கில் விரிவாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இக்கட்டுரைகள் ஆகும்.

இவை யாவும் 2010 - சூன் மாதம் தொடங்கி, 2016 - சனவரி மாதம் வரையில், 58 மாதங்கள் தொடர்க் கட்டுரைகளாக வெளிவந்தன. இடையிடையே ஒருசில மாதங்கள் எழுத இயலவில்லை .

எழுத்தாக்கங்களுக்கு எள்முனையும் இடையூறில்லா இனிமைமிகு தனிமை தேவை. ஆனால், யானோ இத்தகைய தனிமைக்கு ஏங்கி ஏங்கித் தவமிருத்தல் வேண்டும். எந்நாளும் எப்போதும் இடையறா நிகழ்ச்சிகள்; எண்ணற்ற சந்திப்புகள். இயக்கத் தோழர்கள் மற்றும் இயக்கத்தின்மீது நம்பிக்கை கொண்டுள்ள எளிய மக்கள் என ஏராளமானோர் எந்நேரமும் சுற்றிவளைத்துச் சூழ்ந்து கொள்ளும் நெருக்கடிநிலை. இமைப் பொழியும் தனிமைக்கு இடமே இல்லை என்கிற இக்கட்டுநிலை. இதனால் எழுதுவதற்கென நேரமொதுக்க இயலாநிலை.

உரிய நேரத்தில் ஒருமுறைகூட எழுதும் சூழல் எட்டவே இல்லை பெரும்பாலும், இதழ் வெளியாவதற்குரிய இறுதிநாட்களில், அதுவும் இரவின் பின்பாதிப் பொழுதுகளில் தொடங்கி - இருள் மெல்ல விலகி எழுகதிர் மண்ணை எட்டிப் பார்க்கும் வரையில், 'நமது தமிழ்மண்' இதழின் அலுவலகத்திலோ அல்லது நெடுந்தூரம் பயணிக்கும் வண்டிகளிலோ அல்லது வெளியூர்களில் எங்கோ தங்குமிடங்களிலோ எழுதவேண்டிய நிலை.

இதனால், ஒவ்வொருமுறையும் இறுதிப் பொழுதுகளில் இதழ்க்குழுவினருக்கு எகிறும் ஒருவகை பதற்றம் - பரபரப்பு! விரைந்து வேலைகளை முடிக்கவேண்டுமே எனக் கூடும் ஒருவகை வேகம் - விறுவிறுப்பு ! கட்டுரையை, வரையறுக்கப்பட்ட நாளுக்குள் வழங்கிட வேண்டுமென என்னை வற்புறுத்திட வேண்டும்; எனினும் இதழ்க்குழுவினருக்கு மேலிடும் ஒருவகை தயக்கம். இதழ்க்குழுவினரின் இத்தகு தயக்கமே அமைதியாய் எனக்குள் ஏற்படுத்தும் ஒருவகை மன அழுத்தம்! இவ்வாறான உணர்ச்சிப் போராட்டங்களின் ஊடாகவே இக்கட்டுரைகள் யாவும் வடிக்கப்பெற்றன.

இத்தகைய பரபரப்பான சூழல்களின் பின்னணியில் எனக்கு ஈடுகொடுத்து என்னால் நேர்ந்த இக்கட்டுகளையெல்லாம் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு இதழ்ப்பணிகளை எழிலுற மேற்கொண்ட இயக்கத்தோழர்கள் யாவரையும் என் நெஞ்சில் இருத்தியுள்ளேன் என்பதை இவண் பதிவு செய்வதே அவர்களுக்கு யான் செலுத்தும் உண்மையான நன்றிச் செயலாகும்.

2001 - சூலையில், 'தாய்மண்' இதழாக மலர்ந்து, பின்னர் 2006 - செப்டம்பரில் 'நமது தமிழ்மண்' இதழாக விரிந்து, இன்று விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைப் போர்வாளாக இருந்து, கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து, வெற்றிகரமாக வீறுநடை போடும் நிலையில், தொடக்க காலத்திலிருந்து செவ்வனே பணியாற்றி இவ்விதழைச் செம்மைப்படுத்தியோர் முதல், இற்றைப் பொழுது வரை இதனை மென்மேலும் செழுமைப் படுத்துவோர் வரை யாவரையும் நன்றியுணர்வோடு என் நெஞ்சில் நிறைத்துள்ளேன்.

'தாய்மண்' என இதழைத் தொடங்கிய நாளிலிருந்து சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக இதன் பொறுப்பாசிரியராக இருந்து, இக்கட்டுரைகளின் முதல் வாசிப்பாளராக முந்தி நின்று, ஒருமுறைக்குப் பலமுறை ஊன்றிப்பயின்று, அவை மென்மேலும் சீர்பெற்றுச் செம்மையுற அல்லும் பகலும் அயர்வின்றி இயங்கிய, இயக்கத்தின் இன்றைய துணைப் பொதுச்செயலாளர் தம்பி வன்னி அரசு அவர்களுக்கும், அப்போது அவருக்கு உற்றத் துணையாயிருந்து இயக்கப்பணிகளையும் இதழ்ப்பணிகளையும் சிறப்புற ஆற்றிய அவரது இல்லறத்துணை தங்கை ஆதிரை அவர்களுக்கும்.

அட்டை முதல் அட்டை வரை, ஒவ்வொரு பக்கத்தையும் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு எழுத்தையும் ஊன்றிப் பார்த்து, உணர்ந்து படித்து, உரிய திருத்தங்கள் மற்றும் உரிய மாற்றங்களைச் செய்து அண்மைநாள் வரையில் இதழை அழகியலோடு வடிவமைத்த, இயக்கத்தின் வெளியீட்டு மையத்தின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றிய அன்புச் சகோதரர் நீல. தமிழேந்தி அவர்களுக்கும்,

வன்னி அரசுக்குப் பின்னர், இதழின் பொறுப்பாசிரியராக யாரையும் அறிவிக்காத நிலையில், இதழ் வெளிவராமல் இடைநின்று முடங்கிவிடக் கூடாதே என்னும் முனைப்போடு, தானே முன்வந்து 'தமிழ்மண்' பணிகளை முழுமையாக ஏந்திக்கொண்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையெனினும் இதழின் பொறுப்பாசிரியராகவே இருந்து, ஒருசில ஆண்டுகளாகத் தொடர்ந்து, உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உழைத்த, இயக்கத்தின் இன்றைய தலைமை நிலையச் செயலாளர் அன்புசால் அ. பாலசிங்கம் அவர்களுக்கும்,

பாலசிங்கத்தைத் தொடர்ந்து பலரும் மனந்திறந்து பாராட்டும் வகையில் இன்று இதழை வெகுநேர்த்தியாக வெளிக்கொணர்ந்து வரும் இதழின் பொறுப்பாசிரியரும் இயக்கத்தின் வெளியீட்டு மைய மாநிலச் செயலாளருமான தம்பி பூவிழியன் அவர்களுக்கும்,

ஆண்கள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் இயக்கப்பணி, இதழ்ப்பணி ஆற்றுவதே எமது கடமையென, இதழ் தொடங்கப்பெற்ற நாளிலிருந்து இதுநாள் வரையில், அன்று ஆதிரையோடு இணைந்து, இன்று ஒற்றைப் பெண்ணாய் இருந்து இரவு-பகலெனப் பாராமல் எந்நேரமும் தட்டச்சுப்பணி செய்துவரும் இயக்கத்தின் வெளியீட்டு மைய மாநிலத் துணை செயலாளர் தங்கை கவினி அவர்களுக்கும், அவரைப்போலவே நேரம் காலம் பாராமல் தொண்டுள்ளத்தோடு பகலிரவாய்ப்

பணியாற்றிவரும் தட்டச்சர் தம்பி தாமரைவண்ணன் அவர்களுக்கும்,

காலைக் கருக்கல் வரை கண்விழித்துக் காத்திருந்து கட்டுரைகள் தட்டாச்சாகி கைகளுக்கு வரும்போதே கருத்தூன்றிப் படித்து, அவை கருத்துப்பிழையின்றி கனிந்து செழுமையுற, அவற்றின் மீது நேரிய, நெடிய உரையாடல்களை நிகழ்த்தி, மேலும் அவற்றை நேர்த்திபெறச் செய்த அன்புநிறை உடன் பிறப்புகள் இயக்கத்தின் இன்றைய தலைமை நிலையச் செயலாளர் இளஞ்சேகுவேரா மற்றும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன் ஆகியோருக்கும், சந்திக்கும்போதெல்லாம் இக்கட்டுரைகளின் சிறப்புகளைச் சொல்லி சிலாகிக்கும், கட்சியின் அரசியல் குழு மாநிலச் செயலாளர் அண்ணன் நீல வானத்து நிலவன் அவர்களுக்கும்,

இக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவருவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த கட்சியின் இன்றைய முதன்மைச் செயலாளர்கள் தோழர் உஞ்சை அரசன், தம்பி பாவரசு, செய்தித்தொடர்பாளர் தம்பி கு.கா.பாவலன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கும், இக்கட்டுரைகளின் சிறப்பான பகுதிகளை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சமூக வலைதளங்களில் பரப்புரை செய்துவரும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தம்பி எஸ். எஸ். பாலாஜி அவர்களுக்கும்,

அரிய அழகிய படங்களை அளித்து இதழுக்கு மென்மேலும் மெருகூட்டி மிளிரச் செய்துவருகிற ஒளிப்பட வல்லுநரும் இயக்கத்தின் காட்சி ஊடக மாநிலச் செயலாளருமான தம்பி சூம் எழில் இமயன், அவருக்குத் துணையாகச் செயலாற்றி வரும் கூட்டுரோடு குமார், பரசுராமன், உசிலை தமிழ் மற்றும் குடந்தை சசிவளவன் ஆகியோருக்கும்,

இக்கட்டுரைகளின் கொள்கை முழக்கங்களையெல்லாம் 'திருமாக்குறள்' என்னும் சிறுதொகுப்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடக மையத்தின் மாநிலச் செயலாளர் தம்பி சஜன் என்கிற ஆதன் அவர்களுக்கும், அவ்வப்போது கட்டுரைகள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மாநிலச் செயலாளர் தோழர் தேவராஜ் அவர்களுக்கும், செய்தித்தொடர்பு மையத்தின் மாநிலச் செயலாளர் தம்பி அகரன் அவர்களுக்கும்,

இதழ்களைச் சந்தாதாரர்களுக்கு உரிய நேரத்தில் அஞ்சலில் அனுப்பிவைக்கும் அளப்பரிய பணிகளைத் தொடர்ந்து சிறப்புறச் செய்துவரும் தம்பிகள் மாரிமுத்து, துரையப்பன், தமிழேந்தி, அம்பேத் அரசு, தமிழ்மாறன், தமிழ்க்கதிர், தமிழ்வளவன், அரங்க. தமிழ்ஒளி, வீர பொன்னிவளவன், விடுதலை, த. இளையா, சுப்பன், பூந்தமிழன், யாழ்ப்பாணன், நீதிவள்ளல், வீரப்பன், சிவராஜ், மனோகரன், நீலமேகம், சமத்துவன், சரவணன், கமல், அலெக்ஸ், சாக்ரடீஸ், பாரிவள்ளல், புகழ்மாறன், அபி, சுகுணாதேவராஜ், மீனாதமிழேந்தி, மதுரை செல்வம், அம்பேத்கர் நகர் பெருமாள், ஜெகன், சண்முகம், பேரறிவாளன், பீமாராவ், கார்த்தி, மசாஜ் குமார் மற்றும் மருதம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் துணை முதல்வர் வேல்முருகன், மாணவ - மாணவியர் அனைவருக்கும்,

கடைசி நேரப் பதற்றங்களிலும் முகம் சுளிக்காமல் பொறுமை காத்து, சிலவேளைகளில் விடுமுறை நாட்களிலும் கூட பணியாற்றி ஆயிரக்கணக்கான இதழ்களை மாதந்தோறும் அச்சிட்டுத்தருகிற ஃப்ரண்ட்லைன் மீடியா அச்சகத்தாருக்கும்,

அஞ்சல் அனுப்ப வேண்டிய குறிப்பிட்ட நாள்கள் தவறுகிற போதெல்லாம் அதிகாரிகளிடம் பேசி அவ்வப்போது வேறு நாள்களில் அனுப்புவதற்குரிய ஒப்புதலைப் பெற்றுத்தந்த தோழர்கள் வெங்கல் கோநீலன், அனுராதா ஆகியோருக்கும், நெருக்கடிகள் சூழ்ந்த நேரங்களிலெல்லாம் ஆதரவாயிருந்து அருள் செய்த அஞ்சல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கும்,

இதழ்ப்பணிகளுக்கான நிதி நிர்வாகத்தைச் சிறப்புற கையாண்டு வரும் தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் அண்ணன் தயாளன், அன்புச் சகோதரர் இளந்திரையன், ஊடக மையத்தின் முதன்மைச் செயலாளரும் நமது 'வெளிச்சம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநருமான இனிய சகோதரர் பனையூர் பாபு மற்றும் தம்பி இராசேந்திரன் ஆகியோருக்கும்,

இக்கட்டுரைகள் குறித்து அடுத்தடுத்து கருத்தரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்திவரும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர் தம்பி மாலின் அவர்களுக்கும், இதுகுறித்து அவ்வப்போது அரசு ஊழியர்களிடையே மேற்கோள் காட்டி கருத்துரை ஆற்றிவரும் பேரவையின் முதன்மைச் செயலாளர் கடலூர் பாவாணன் அவர்களுக்கும், புதுவையில் இது தொடர்பாக நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் புதுவை பாவாணன் அவர்களுக்கும்,

ஒவ்வொரு கட்டுரையையும் படித்தவுடன் பெரிதும் மகிழ்ந்து, நெகிழ்ந்து, வியந்து, பாராட்டி ஊக்கப்படுத்தியவரும் இந்நூல்க்கு அணிந்துரை அளித்திருப்பவருமான மூத்தத் தோழர் கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களுக்கும்,

அவ்வப்போது இக்கட்டுரைகளை ஊன்றி வாசித்து, உவகைபொங்க உள்ளம் திறந்து பாராட்டி ஊக்கமூட்டுவதோடு, இவையாவும் எல்லா தரப்பினருக்கும் எளிதாக, பரவலாக எட்ட வேண்டுமென எப்போதும் வலியுறுத்தக்கூடியவரும்; அதனைச் செயற்படுத்தும் வகையில் தற்போது தானே முன்னின்று இந்த ஆவணத்தைத் தொகுத்து நக்கீரன் பதிப்பகத்தின் மூலம் வெளியிடும் பணிகளை மேற்கொண்டவரும்; தனது அணிந்துரையின் மூலம் இந்நூலுக்கு மேலும் அணி சேர்த்திருப்பவருமான மார்க்சிய ஆய்வாளர் தோழர் ஜவஹர் அவர்களுக்கும்,

சென்னைப் புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழலில் எத்தனை எத்தனையோ தொழில்சார் பணி வாய்ப்புகள் தேடிவந்த நிலையிலும், தமிழகமே குடும்பத்தினருடன் பொங்கல் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலிலும் ஒரு நொடியும் கண் துஞ்சாமல் நான்கு நாள்களாய்ப் பணியாற்றி, உள்ளம்கவர் எழிலுடன் இந்நூலை வடிவமைத்துள்ள தோழர் தில்லை முரளி அனர்களுக்கும்,

ஏராளமான பணிச்சுமைகளுக்கு மத்தியில் இந்த ஆவணத்தின் அட்டையை அழகுற வடிவமைத்த தோழர் வேதாஅவர்களுக்கும்,

புத்தகத் திருவிழா முடிவதற்குள்ளாக இதனைக் கொணர்ந்திட வேண்டுமென்கிற பேராவலுடன் பொங்கல் விடுமுறையிலும் காத்திருந்து அச்சிட்டு வெளியிட்டுள்ள ஊடக்ப்போராளி அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கும் நக்கீரன் பதிப்பகத்தார் அனைவருக்கும்,

இவர்களுடன்,

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, அனைத்து நிலைகளிலும் - அனைத்துக் களங்களிலும், ஒருமித்த கருத்தோடு, உளமார்ந்த உறவோடு, உறுதிமிக்க துணிவோடு, அமைப்பை வழிநடத்துவதிலும் வலுப்படுத்துவதிலும் உடன்நின்று அனைத்தையும் எதிர்கொண்டு வரும் கட்சியின் பொதுச்செயலாளர்கள், தோழர் சிந்தனை செல்வன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ரவிகுமார் மற்றும் மாநிலப் பொருளாளர் முகமது யூசுஃப் ஆகியோருக்கும்..

எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

இவண்

(தொல்.திருமாவளவன்)

தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

15.01.2018
சென்னை

Back to blog