ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/aariyathaal-veezhnthom-dravidathaal-ezhunthom
 
அணிந்துரை

"கோணிப்புளுகன் கோயபல்ஸ்" என்றும், “இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை" என்பது போலத்தான், அண்மைக்காலங்களில், நம் மக்களில் சிலர் பெரியாரைக் கொச்சைப்படுத்தியும், திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும் திட்டமிட்ட தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்த் தேசியம் என்ற பெயரால், ஜாதியை - வளர்த்துக் கொள்ளுவதற்கும், பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று நிறுவுவதற்கும் முயற்சி செய்து பார்க்கிறார்கள். வழமை போலவே, இந்தப் பொய்ப்பிரச்சாரமும் நிச்சயமாக முறியடிக்கப்படும்.

அந்த வகையில், “திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்ற பெயரில் 'குணா' என்பவர் எழுதியுள்ள நூலுக்கு, திராவிடர் கழகத்தின் மாநில இலக்கியத் துறை செயலாளரான மஞ்சை வசந்தன், “ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!” எனும் மறுப்பு நூலை எழுதியிருக்கிறார்.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற தலைப்பே மோசடியானது. காரணம், அது ஆரியத்தை காப்பாற்றுவதற்காக ஆரியத்தின் நிழலைக் கூட தீண்டாமல், "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்ற போக்கில் மட்டும் பேசப் போகிறது என்பதை அதன் நூலாசிரியர் குணா குறிப்பாக உணர்த்திவிடுகிறார். ஆனால், அதற்கு சரியான பதிலடியாக மஞ்சை வசந்தன் அவர்கள் தலைப்பிலேயே பதிலடியை மிகப் பொருத்தமாகக் கூறியிருக்கிறார்.

இதே காரணத்தைத்தான் மஞ்சை வசந்தன் தனது நூலின் தொடக்கத்திலேயே கூறிவிடுகிறார். அதுவும் கட்டம் கட்டியும் திராவிடத்தால் வீழ்ந்தோமா? என்ற தலைப்புமிட்டு காட்டுகிறார்.

"திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற தலைப்பே தவறானது. நிற்பவர்தான் விழமுடியும். ஆரியத்திற்கு அடிமையாகி, மானமிழந்து, உரிமையிழந்து வீழ்ந்து கிடந்த நிலையிலேதான் திராவிடம் கையில் எடுக்கப்பட்டது. அப்படியிருக்க, வீழ்ந்து கிடந்தவர் எப்படி திராவிடத்தால் விழ முடியும்? ஆதலால், நூலின் அடித்தளமே தவறு!" - என்று பளிச்சென்று சொல்லி விடுகிறார்.

நூலுக்குள் புக வேண்டிய அவசியமே ஏற்படவில்லையென்றாலும், குணாக்களின் (குணா) குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பதில் சொல்ல வேண்டுமல்லவா? அப்படியே சொல்லியிருக்கிறார்.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் கண்ணதாசன் ஆரியரை ஆற்றுப்படுத்த, “அர்த்தமுள்ள இந்து மதத்தை" எழுதி, விலைபோனார். அந்த நூலுக்கு மறுப்புரையாக; ஆய்வுரையாக "அர்த்தமற்ற இந்துமதம்” - என்ற நூலை எழுதி, அதே கவிஞர் கண்ணதாசனையும் நேருக்கு நேர் வாதுக்கழைத்தவர் மஞ்சை வசந்தன். அதே வேகத்தோடும், கருத்து வீரியத்தோடும் “ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!" - நூலையும் எழுதி குணாக்களை நேருக்கு நேர் வாதுக்கு அழைத்திருக்கிறார். அர்த்தமற்ற இந்து மதத்திற்கே இன்று வரையிலும் யாரும் வரவில்லை. பார்க்கலாம்.

நூலுக்குள் புகுமுன் குணாவைப் பற்றி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற வகையில் ஒரு முக்கியமான ஆதாரத்தைக் காட்டுகிறார் மஞ்சை வசந்தன்.

“கூட்டாளிப் பார்வையில் குழப்பல் பேர்வழி குணா”

- என்ற தலைப்பின் கீழ் அமைந்த பகுதியில், குணாவின் நண்பரான குமரி மைந்தன் என்பவர், குணாவுக்கு இணையத்தில் எழுதிய கடிதத்தை அப்படியே கொடுத்திருக்கிறார்.

அதில், குமரி மைந்தன் எடுத்த உடனேயே, "குணா ஊகங்களை உண்மை என்று சாதிப்பவர்” என்று கூறிவிட்டு, குணா மீதான கடுமையான விமர்சனங்களையும் வைக்கிறார்.

ஆனால், இதே குணா, “மார்வாடிகளிடம் கோடிகோடியாய்ப் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப் பாகவும் இருந்தார் பெரியார்” என்று பார்ப்பனரும் கூறாத அபாண்டப் பழியை குற்றச்சாட்டாக வைக்கிறார். சரி, ஆதாரம் எங்கே என்று பார்த்தால், இவரை கடுமையாகக் குறை கூறிய குமரி மைந்தன் எழுதிய, ‘தமிழ் தேசியம்' என்ற கட்டுரையைச் சுட்டிக் காட்டுகிறார். குமரி மைந்தனுக்கு எங்கே கிடைத்தது அந்த ஆதாரம் என்றால், குமரி மைந்தனும் தன் அய்யத்தையே ஆதாரமாக வைத்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது கதை!

குணாவைப் பற்றி, குமரி மைந்தன், "ஊகங்களை உண்மை என்று கூறுபவர் என்று கூறிவிட்டு இவரும் தனது அய்யங்களைத் தான் உண்மைகளாக, ஆதாரங்களாக வைத்துள்ளார். நல்ல நகைச் சுவைதான், பெரியார் என்ற இமயத்தை இந்த புல்லுறுகளா அசைத்து விட முடியும்? ஆட்டிப் பார்க்கிறார்கள் ஆரியத்தின் ஆதரவோடு.

தான் கூறுவதோடு மட்டுமல்லாமல், பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் இதுகுறித்து "இந்த குற்றச்சாட்டு நேர்மையற்ற அவதூறு'' என்று சொன்னதையும், மஞ்சை வசந்தன் எடுத்தாண்டிருக்கிறார்.

முரண்பாட்டுக்குள் முரண்பாடு

குமரி மைந்தனை ஆதாரமாகக் காட்டியதை மஞ்சை வசந்தன் அவர்கள், குமரி மைந்தனை வைத்தே வீழ்த்தியுள்ளதைப் போலவே, குணாவை, அவருக்கு மிகவும் பிடித்த ஒருவர் மூலமாகவே எதிர்த் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.

அதாவது, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற தனது நூலை, தான் மதித்துப் போற்றும், ஆழ்ந்த பற்றும் வைத்துள்ள, "திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் நினைவாக வெளியிட்டு உள்ளார். தனது புத்தகத்தை ஒருவரின் நினைவாக வெளியிடுவது என்றால், அப்படிப்பட்ட ஒருவரிடம் கொள்கை முறையிலும், வாழ்க்கை முறையிலும் ஈர்ப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். யாரோ ஒருவருடைய நினைவாக வெளியிட முடியாதல்லவா? அப்படி, கொள்கை ரீதியாக ஒற்றுமை இல்லாமலேயே கூட இருக்கட்டும். தமிழ் தேசியத்திற்கு எதிரான 'திராவிடர்' என்ற சொல்லுக்கு குணா மறுப்பு எழுதியுள்ள நிலையில், திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் 'திராவிடர்' என்ற சொல் பற்றி என்ன கூறியிருக்கிறார்.

இதோ! பாவாணரின் "ஒப்பியன் மொழி நூல், பகுதி 1, பக்கம் 15, (தமிழ் மண் பதிப்பகம், சென்னை14) இல் கூறுவதை மஞ்சை வசந்தன் எடுத்துக்காட்டியிருக்கிறாரே!

“இக்கால மொழியியலும், அரசியலும் பற்றித் தமிழும், அதனினின்றுந் திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங் காலத்தில் திராவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே.”

"தமிழ் தமிழம் த்ரமிள திரமிட திரவிட த்ராவிட திராவிடம்” என்று கூறி தமிழே திராவிடம் என்றானது என்கிறார்.

தமிழ்தான் திராவிடம் - திராவிடர் என்று மறுக்க இயலாதபடி நிறுவிய பாவாணரின் நினைவாக அவரது ஆய்வுக்கு சற்றும் பொருந்தாத பித்துக்குளித் தனங்களைப் பிதற்றிக் கொண்டிருக்கும் குணா. தனது நூலை பாவாணரின் நினைவாக வெளியிட்டது எதனால்? ஒருவேளை, தன்னையும் அறியாமல், தன் வேடம் கலைகிறதே என்ற உணர்வில்லாமல் அப்படி வெளியிட்டிருப்பாரோ என்ற அய்யம் எழுவது இயற்கையாகும்.

அதுமட்டுமல்ல, "தமிழும், திராவிடமும் வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றே என்கிறார் பாவாணர். மேலும், “திராவிட” என்னும் சமஸ்கிருத மொழியில், அதற்கான வேர்ச்சொல்லே இல்லை" என்று விவாதத்திற்கு முற்றுப் புள்ளியும் வைத்துவிடுகிறார்.

இன்னும், ஏராளமாக கால்டு வெல்லுக்கு முன்பே, மனுஸ்மிருதியில் இருந்துகூட "திராவிட" என்ற சொல்லுக்கு ஏராளமான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் மஞ்சை வசந்தன்.

ஆய்வு என்றால், எந்தக் கருத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோமோ அதன் காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படைகூட இல்லாமல் குணாவின் நூலில் கருத்துகள் அமைந்துள்ளன என்பதை மஞ்சை வசந்தன் தர்க்க ரீதியாக, காரண காரியங்களோடு நிறுவியுள்ளார்.

இந்த வகையான குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆயிரம் முறை பதில் கூறப்பட்டுவிட்டதென்றாலும், இப்பொழுதுதான் புதிதாக கேட்பது போல கேட்பது - ஆரிய சூழ்ச்சியின் அடிநாதம்தான் என்பது புரிகிறவர்களுக்குப் புரியாமல் போகாது.

1938இல் 'தமிழ்நாடு தமிழருக்கே' - என்று முழங்கியவர் பெரியார். அப்படிப்பட்ட ஒரு தமிழர் தலைவரைப் பார்த்து தரமிழந்த, அறியாமையின் உச்சத்தில் நின்று கொச்சைப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியத்தை கெடுக்கவே பெரியார் திராவிடத்தை எடுத்தார் என்று அபாண்டமாக, பொய்யாக, மோசடியாக ஒரு குற்றச்சாட்டை குணா கூறுகிறார் என்று அறிவுச் சினம் கொள்கிற மஞ்சை வசந்தன். பெரியார்தான் “தமிழ் தேசியக் கருத்தியலின் தந்தை'' என்பதை பல்வேறு மறுக்க முடியாத சான்றுகளுடன் நிறுவிவிட்டு,

"பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார் என்கிற கூறுபடுத்தலை ஏற்காதவர்கள் தொடர்ந்து, 'திராவிட'க் கருத்தாக்கத்தை எதிர்த்து வருகின்றனர். தமிழர்களைப் பிளவுபடுத்துவதற்காக ஆந்திரரும், மலையாளியும் சேர்ந்து உண்டாக்கியதே நீதிக்கட்சி என சேரன் மாதேவி புகழ் வ.வே.சு. அய்யர் அன்றே எழுதினார். (பாலபாரதி, மே 25) ம.பொ.சி. அதனைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். (தமிழகத்தில் பிற மொழியினர் 1976) குணா இதை கொட்டி முழக்குகிறார்.

இதுவே குணாவின் பாரம்பரியம்"

என்ற பேரா. அ.மார்க்சின் கருத்தை தனது நூலின் 35 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டு, அதன் கீழ் வ.வே.சு. அய்யர், சி. இராசகோபாலாச்சாரியார் - இவர்களின் அணுக்கத் தொண்டர் ம.பொ.சி. இந்த ம.பொ.சி.யின் மறுவடிவம் குணா" - என்று காலந்தோறும் இருந்துவரும் குணாக்களை மஞ்சை வசந்தன் சுட்டிக்காட்டி விடுகிறார்.

அந்தக் காலம் தொட்டு, இந்தியாவில் நடந்து வருவது ஆரிய திராவிட போராட்டம்தான் என்பதும், அது அரசியல் போராட்டம் அல்ல என்பதும் ஈரோட்டுக் கண்ணாடி அணிகின்றவர்களுக்குத்தான் தெரியுமே தவிர, மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்றும் கூட அது தொடரத்தான் செய்கிறது என்பதற்கு சான்றுகள்தான். “தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் சமஸ்கிருத ஆண்டாக மாற்றப்பட்டது''.”செம்மொழி" பிரியாணி போடுமா? என்று கேட்டதும், “தமிழன் கால்வாயாம் சேது சமுத்திர திட்டம்" மூடநம்பிக்கையைச் சொல்லி தமிழர் என்ற போர்வையில் இருக்கும் ஆரியர் முடக்கி வைத்திருப்பதும், திடீரென முளைக்கும் "பிராமணாள் கபேயும், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் படும் பாடும், ஈழத் தமிழர் இன்னல்களும், தர்மபுரியில் நடந்த ஜாதிக் கலவரங்களும்... இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இவையெல்லாம் நமக்குச் சொல்லுவது, திராவிடக் கருத்தியலை இன்னும் கூர் தீட்ட வேண்டும் என்பதைத் தான்.

அந்த வகையில் பேரா. மஞ்சை வசந்தன் அவர்கள் மிகச்சிறந்த ஆய்வு நூலை அளித்து, ஆரிய திராவிட போராட்டத்துக்கு நமக்கு ஒரு வலிமையான போர்க் கருவியை - கேடயத்தை யாத்தளித்துள்ளார் என்பதைப் பார்க்கும் போது அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். "ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!" - என்ற இந்த திராவிட கருத்தியல் அம்பு தாக்க வேண்டிய இலக்கை நிச்சயமாக தாக்கியே தீரும். அலறப்போவது குணாக்கள் அல்ல, ஆரியம்தான்.

மஞ்சை வசந்தனின் இப்பணி தொடரட்டும்! சிறக்கட்டும்! ஆரியர் சதிகள் இதன்மூலம் நொறுங்கட்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்.

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog