ஆலய பிரவேச உரிமை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/aalaya-pravesa-urimai
முன்னுரை

ஈரோட்டுத் தோழர் ஈ. வெ. இராமசாமி அவர்கள் நடத்தி வந்த ஆங்கில வார இதழான 'எதிரெழுச்சி' (Revolt) என்ற பத்திரிகையில் 1929 முதல், இப்புத்தகத்தின் தொடக்கத்தில் காணப்படும் கட்டுரைகள், தொடர்ச்சியாக வெளிவந்தன. கட்டுரைத் தொடர் முழுவதும் வெளிவருவதற்குள் 1930 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'எதிரெழுச்சி' இதழ் நின்று விட்டது.

அதற்குப்பின் பல சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன. வார இதழில் வெளிவந்த கட்டுரைகளைப் புத்தகமாக வெளி யிடுமாறு நண்பர்கள் ஆசிரியரைக் கேட்டபோது அவர் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதற் கிடையில் ஆலயபிரவேசம் தொடர்பான பல புதிய செய்திகள் திரட்டப்பட்டுவிட்டன; பல ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுவிட்டன. எனவே இந்தப் பிரச்சனை குறித்த அனைத்து செய்திகளையும், நிகழ்வுகளையும், புதிதாகப் பெற்ற அறிவின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யும் தேவை எழுந்தது. இக்கட்டுரைகள் முதலில் வெளிவந்த போது ஆய்வு நோக்கில் அவை தயாரிக்கப்படவில்லை. அக்கட்டுரைகளில் சொல்லியிருப்பது போல், பாமர மக்களுக்காகவே அவை எழுதப்பட்டன. நூலாசிரியர் மூலத்திலிருந்து அதிகம் மாறுபடவில்லை; இப்புத்தகம் முன்பு எழுதப்பட்ட கட்டுரைகளின் மறுபதிப்பு என்றே சொல்ல வேண்டும். தேவையான இடங்களில் சில சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. கட்டுரைகளை மறுபதிப்பு செய்ய அனுமதியளித்து, ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு நூலாசிரியர் தனது நன்றியை உரித்தாக்குகிறார்.

இந்த நூல் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த பல சான்றோர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் நூலாசிரியர் நன்றிக்கடன்பட்டுள்ளார்; குறிப்பாக திரு. கே. சுப்பிர மணியப்பிள்ளை , எம். ஏ. எம்.எல்., திரு. பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார், எம்.ஏ.எல்.டி., திரு.S.ஸ்ரீனிவாச அய்யங் கார்,B.A., திரு. பால் அப்பாசாமி, திரு.ஜே.சி. கோஷ், போன்ற பலருக்கு நூலாசிரியர் நன்றிக் கடன்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பெனியாரின் 1841 ஆம் ஆண்டுக்கான செயல் முறை ஆவணங்களின் பிரதிகளை நூலாசிரியரால் பெற இயலவில்லை. ஆங்கிலேய அரசு அந்தச் செயல் முறைகளின் மூலம் தான் தன்னிடமிருந்த இந்துக் கோயில்களின் நிர்வாக அதிகாரத்தைக் கைவிட்டது. ஆனால் அந்த முடிவிற்கான காரணத்தை, "இந்தியாவில் கிறிஸ்தவ சமயக் குழுக்களின் வரலாறு' என்ற நூலில் திரு.ஜூலியஸ் ரிக்டர், அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவரது நூலின் பிற்சேர்க்கையில் அக்காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. அக்காரணங்கள், இந்த நூலில் கூறப்பட்டுள்ள ஆசிரியரின் கருத்தை உறுதி செய்வதாக உள்ளன.

இந்த நூலை வெளியிட எனக்குப் பல வழிகளிலும் உதவி செய்த என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக, நாகர்கோயில் அலெக்ஸேன்டிரா அச்சகத்தின் உரிமையாளர், திரு.M.D.டேனியல் அவர்களுக்கு, நூலின் நகலைத் திருத்தம் செய்து கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஒரு நூலின் நகலை சரிபார்த்துக் கொடுக்கும் பணி, அனுபவமில்லாத எழுத்தாளருக்கு, குறிப்பாக வெளியூரில் பணியாற்றும் ஒருவருக்கு மிகவும் கடுமையான பணியாகும். அப்பணியை செய்து கொடுத் தமைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்புத்தகத்தில் வரும் கோயில்கள் பற்றிய பொதுவான கண்ணோட்டம் பெரும்பாலான கோயில்களைப் பொருத்த வரை சரியாக இருந்தாலும், மேற்குக் கடற்கரை ஓரமாகக் காணப்படும் கோயில்கள் வேறு ஒரு மாறுபட்ட கோணத்தில் நோக்கப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்தில் காணப்படும் பிழைகளையும், குறைபாடு களையும் மறுபதிப்பில் சரிசெய்துவிடலாம் என ஆசிரியர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

பி. சிதம்பரம் பிள்ளை

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

ஆலய பிரவேச உரிமை - பொருளடக்கம்

Back to blog