2ஜி அவிழும் உண்மைகள் - தீர்ப்பிலிருந்து சில துளிகள்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/2g-avizhum-unmaigal

 

 

2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஓ.பி.சைனி வழங்கிய தீர்ப்பிலிருந்து சில துளிகள்...

“இன்னும் சொல்வதென்றால், கடந்த ஏழு ஆண்டுகளாக, கோடை விடுமுறைக் காலம் உட்பட எல்லா அலுவலக நாட்களிலும் திறந்த நீதிமன்ற அறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஈடுபாட்டுடன் அமர்ந்து, 'தங்களிடம் உள்ள, சட்டப்படி ஏற்கத்தக்க சான்றுகளுடன் எவராவது வருவார்களா?' என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், என் காத்திருப்பு வீணாகத்தான் போயிற்று. எந்த ஜீவனும் வரவில்லை. வதந்தி, கிசுகிசு, யூகம் ஆகியவை உருவாக்கிய ஒரு பொதுக் கருத்தையே எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தனர் என்பதையே இது காட்டுகிறது. என்றாலும், பொதுமக்களின் இப்படிப்பட்ட புரிதலுக்கு நீதி வழக்கு விசாரணைகளில் இடமே இல்லை ” (பக்கம் - 1544).

"தொலை தொடர்புத்துறை அலுவலர்களின் பல்வேறு செயல்களாலும், செயலின்மையாலும், எவரும் அத்துறையின் கூற்றை நம்பவில்லை; நடைபெறாத ஒரு பெரிய ஊழல் நடந்ததாகவே பார்க்கப்பட்டது. ஒரு பெரிய ஊழல் நடைபெற்றதாக, மக்கள் நம்பும் கட்டாயத்திற்கு, இத்தகைய காரணிகள் காரணமாகிவிட்டன. எனவே, கற்பனை நயத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையின் சில பகுதிகளை மட்டும் எடுத்தும் கோர்த்தும், அவற்றை வானளாவ மிகைப்படுத்தியும், சில மனிதர்கள் ஊழல் என்ற ஜோடனையைக் கட்டமைத்தனர்” (பக்கம் -1549).

“அலுவலகக் கோப்புகளை இடப்பொருத்தமற்று படித்ததாலும், சிலவற்றை படிக்காமல் விட்டதாலும், தேர்ந்தெடுத்து சிலவற்றை மட்டுமே படித்ததாலும், தவறாகப் படித்ததாலும் விளைந்ததே இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை. மேலும், விசாரணையின்போது சிலர், சிபிஐக்கு அளித்த வாய்மொழி வாக்கு மூலங்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கில், சாட்சி அளித்தவர்கள், சாட்சிக் கூண்டில் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அலுவலகக் கோப்புகளுக்கு எதிராகத் தரப்பட்ட எந்த வாய்மொழி சாட்சியமும், சட்டத்திற்கு ஏற்புடையதல்ல... மிக நேர்த்தியாய் ஜோடிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில், சொல்லப்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டுகளையும், சிபிஐ நிரூபிக்கவில்லை என்ற முடிவிற்கு வருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை ” (பக்கம் -1551).

Back to blog