இதிகாசங்களின் தன்மைகள் : நூல் அறிமுகம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/ithikasngalin-thanmaigal 
நூல் அறிமுகம்

இத்தகைய இழிவான கதைகளையும் தமிழ் மக்கள் தம்முடையவை என எண்ணி ஏமாந்து படித்து மகிழ்கின்றனரே; ஆரிய சூழ்ச்சியின் வல்லமைதான் என்னே?

இதிகாசங்கள் என்பன இராமாயணமும், பாரதமுமாகும். இவை இரண்டும் ஆரிய நூல்கள்.

இக்கதைகளுக்கு ஆரியப் பார்ப்பனர்கள், தெய்வத் தன்மையை ஏற்றிப் பல காரணங்களால் தமிழ்நாட்டில் புகுத்தி, அறியா மக்களிடையே அவற்றில் நம்பிக்கை உண்டாக்கித் தங்கள் உயர்வுக்கும் வாழ்வுக்கும் வழிகோலிக்கொண்டு அவற்றை நிலைநிறுத்தி வருகிறார்கள்.

உலகத்திலேயே ஒப்பற்ற அறிஞராக, உலக மக்களுக்கே நாகரிகத்தைப் பரவச் செய்த பெரியோர்களாக இருந்த தமிழ் மக்கள், காலமாற்றத்தால் நாளடைவில் அறியாமையில் மூழ்கி, இப்படிப்பட்ட கதைகளை நம்பி, தமது உண்மைப் பெருமையை மறந்து, இவ்விதிகாசங்கள் தம்மைச் சேர்ந்த நூல்களெனக் கொண்டு மயங்கித் தவிக்கின்றனர்.

இதனாலேயே தோழர் ஈ.வெ. இராமசாமிப் பெரியாரவர்களுடைய வேண்டுதலுக்கு இசைந்து இராமாயண ஆராய்ச்சியைக் ‘குடி அரசு’ இதழில் வெளியிட்டோம். அது முடிந்தவுடன் பாரத ஆராய்ச்சியும் ஓரளவு வெளிவந்து நின்றது. இராமாயண ஆராய்ச்சியை ஏழு காண்டங்களாக அச்சிட்டுப் பெரியார் இராமசாமி அவர்கள் வெளியிட்டு உலகுக்கே அழியாத பேருதவியைச் செய்திருக்கிறார்கள்.

இதிகாசங்கள் என்று தலைப்பிட்டு இச்சிறு நூல் எழுதுவதன் நோக்கம், இராமாயண, பாரதங்களின் சிறுமையைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தமிழ் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதேயாகும். இதனால் விளையும் பயன் யாதெனில், இதிகாசங்களைப் பற்றிய தமிழ் மக்களின் தவறான எண்ணங்கள் மாறி, “இதிகாசங்களைப் படிப்பதனால் சகோதரத் துரோகமும், விபச்சாரத்தனமும் வளரும்” என்ற உண்மையை ஒருவாறு உணரச் செய்யும் என்பதோடு மற்றும் இவற்றைப் படிப்பதனால் தமிழ் மக்கள் தன்மானமற்று ஆரியக் கூட்டில் வீழ்ந்து அல்லல்படுவதிலிருந்து விடுபடுவார்கள் என்பனவேயாகும். ஆதலால் தமிழ் மக்கள் அனைவரும் இதனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கி, உண்மை உணர்ந்து பயன்பெறுவார்களாக.

இராமாயணம் என்பது, இராமன் என்ற ஆரிய அரசனின் மகன், இராவணேசுவரன் என்ற தமிழ் மன்னனைக் கொன்ற வரலாறு ஆகும்.

இராவணன் காட்டிலிருந்த சீதையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துச் சென்று, இலங்கையில் சிறைவைத்து இருந்தான்.

இராவணன் அப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று பார்த்தால், இராவணனுடைய தங்கையாகிய சூர்ப்பநகை என்பவளை, இராமனுடைய ஏவலால் அவனது தம்பி இலக்குவன் மூக்கு, முலை, முடி ஆகியவற்றை அறுத்து, அவமானம் செய்துவிட்டான். இதற்குக் காரணம் என்னவென்றால், “சூர்ப்பநகை இராமனையும் இலக்குவனையும் தன்னை மணந்து கொள்ள வேண்டுமென்று கேட்டாள். அதனாலேயே இலக்குவன் அவளை அவமானம் செய்தான் ” என் ஆரிய வால்மீகியே தம் இராமாயணத்தில் எழுதி இருக்கிறார்.

தன்னை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று கேட்ட ஒரு பெண்ணை இப்படி அவமானம் செய்வது எவ்வளவு கொடுமை? எந்த நாட்டிலாவது இப்படிப்பட்ட காரியம் நடந்ததாக யாராவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட கொடுஞ்செயலைப் பெரிதாக எழுதாமல், “இராவணன் சீதையைச் சிறை வைத்திருந்தான்” என்பதை மாத்திரம் ஒரு மாபெரிய கொடுஞ்செயலாகக் கூறி, இராவணன் மேல் மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படிச் செய்திருக்கின்றனர்.

இராவணன் சீதையை மூக்கு, முலையை அறுத்து அவமானம் செய்தானா? அல்லது பலவந்தமாவது செய்தானா? இல்லவே இல்லை. மற்றென்ன செய்தான் எனில், தன் கூடப்பிறந்த தங்கையை அலங்கோலஞ் செய்து, அவளுடைய வாழ்க்கையையே கெடுத்த பாவியாகிய இராமனின் மனைவியைத் தூக்கிச் சென்றான். அதுவும் எப்படித் தூக்கிச் சென்றான் எனில், “தூக்கித் தன் மடிமீது வைத்துக்கொண்டு சென்றான்.” இது வால்மீகி முனிவரே சொல்லுவதாகும். –

ஆனால், கம்பர் போன்ற சிலர், “முன் இராவணனால் பலவந்தப்படுத்தப்பட்ட ஒரு பெண், வேறு பெண்களைத் தொட்டால் அவன் மண்டை வெடித்துப் போகுமென சபித்தாள்” என்ற பொய்க் கதையை வால்மீகி முனிவருடைய மூலக்கதைக்கு மாறாக எழுதி, அதனால் “இராவணன் சீதையைக் குடிசையோடு தூக்கிச் சென்றான்” என்று பொய்க்கதை புனைந்தனர்.

… இராமனது ராஜ்யம் வருணாசிரம ராஜ்யமாகவே இருந்திருக்கிறதுடன், அவன் ராஜ்யத்தில் பிராமணர்களுக்கே அதிக ஆதிக்கம் இருந்திருக்கிறது. ஒரு “சூத்திர அரசன்” தவம் செய்ததற்காக (சூத்திரர் தவம் செய்ய அருகதை அற்றவர்கள் என்று) கொல்லப்பட்டிருக்கிறான். அதுவும் கடவுள் அவதாரம் என்று சொல்லப்படும் இராமனாகிய அரசன் கையாலேயே கொல்லப்பட்டிருக்கிறான்.

… இராமன், அவன் மனைவி ஆகிய எல்லோருமே மாமிசத்தையும், மதுவையும் ஏராளமாக உண்டவர்களாகவேயிருக்கிறார்கள். இராமனும், இலக்குவனும் அகால மரணத்தையே அடைந்திருக்கிறார்கள். மற்றும் இதுபோன்ற அநேக சேதிகளை இராமாயண ஆராய்ச்சியில் காணலாம்.

… பாரதம் என்பது பஞ்சபாண்டவருக்கும் துரியோதனாதியருக்கும் நடந்த போரைப் பற்றிய வரலாறு. திருதராட்டிரன் என்பவனும், அவனுக்குத் தம்பி முறையாகிய பாண்டுவும் நாடாண்டு வந்தனர். திருதராட்டிரனுடைய பிள்ளைகள் துரியோதனன் முதலிய நூறு பேர். தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற அய்ந்து பேரும் பாண்டுவின் மனைவியருக்குப் பிறந்த பிள்ளைகள். திருதராட்டிரனே அரசன். அதனால் அவனுடைய மூத்த பிள்ளையாகிய துரியோதனனே அரசனாக உரியவன். தருமன் முதலியோர்  தங்களுக்கும் நாட்டில் பங்கு உண்டு என்று கெடுவழக்காடி கிருட்டினனுடைய துணையைக் கொண்டு துரியோதனாதியருடன் சண்டைபோட்டுக் கொன்று அரசாட்சியை அடைந்தனர். இதுவே பாரதப் போரின் உண்மை . இதனால் பஞ்ச பாண்டவர்களே வம்பர்கள் என்று விளங்குகின்றதல்லவா?

பாரதக் கதையின் அடிதொட்டு முடிவுவரை எங்கு நோக்கினும் விபச்சாரமே தாண்டவமாடுகின்றது. … வேதங்களையெல்லாம் வகுத்தமையால் வேதவியாசன் என்ற பெயரைப் பெற்ற அந்த வியாசனுக்கு இவ்விரண்டு பெண்களைக் கூடியும் காமவேதனை தீராமல் அம்பாலிகையின் தாதியையும் கூடி, விதுரன் என்பவனையும் பெற்றான்! நான்கு வேதங்களையும் வகுத்தமையோடு வியாசன் பாரதக் கதையையும் எழுதினான். அதனால் பாரதம் அய்ந்தாம் வேதம் என்று புகழப்படுகிறது. காமக்கலையும் அய்ந்தாம் வேதமென்றே கூறப்படுகிறது. காமக்கலைக்கும் விபச்சாரத்துக்கும் நிலைக்களமானதால்தான் பாரதம் அய்ந்தாம் வேதமெனப்படுகிறது போலும். ஆரிய முனிவனாகிய வேதவியாசனே விபச்சாரத்துக்கு நிலைக்களமானவனாகி நடந்துகாட்டியதோடு, அதையே கதையாகவும் எழுதிவிட்டான். என்னே இவன் துணிச்சல்! இத்தகைய இழிவான கதைகளையும் தமிழ் மக்கள் தம்முடையவை என எண்ணி ஏமாந்து படித்து மகிழ்கின்றனரே; ஆரிய சூழ்ச்சியின் வல்லமைதான் என்னே?

நன்றி : வினவு

https://vinavu.com/2019/10/11/book-intro-ithikasngalin-thanmaigal/

Back to blog