Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெண் ஏன் அடிமையானாள் | அய்ந்தாம் அத்தியாயம் – மறுமணம் தவறல்ல

நான்காம் அத்தியாயம்

அய்ந்தாம் அத்தியாயம் – மறுமணம் தவறல்ல

 

“ஒரு மனைவியிருக்க, ஆண் மகன் மறுமணம் செய்யலாமா?” என்ற விஷயத்தில் பலருக்குப் பலவித அய்யப்பாடுகள் தோன்றியிருக்கின்றன. இந்த விஷயத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்குள்ளே இம்மாதிரி மறுமணம் செய்துகொள்ளுவது தவறு என்கிற அபிப்பிராயமும் சந்தேகமும் இருந்து வருகின்றன. பொது ஜனங்களில் பலர், “மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்வது சீர்திருத்தக் கொள்கைக்கு விரோதம்” என்று கருதுகிறார்கள்.

முதலாவது, இந்தக் கொள்கையைப்பற்றிக் கவனிக்கும் முன்பு, மணம் என்பது என்ன என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். மணம் என்பதை நாம் மணமக்கள் தங்கள் வாழ்க்கைச் சவுகரியத்திற்காகச் செய்துகொள்ளப்படும் ஒரு ஒப்பந்த ஏற்பாடு என்றுதான் கருதுகிறோம். ஆதலால், அதில் இவர்களுடைய சுயேச்சையையும் சேர்த்தோ அல்லது தனித்தனியோ கட்டுப்படுத்தும் எவ்விதக் கொள்கைகும் இடம் இருக்கக்கூடாது என்றும் கருதுகின்றோம். இதுமாதிரிக் கருதுவது சரியா? தப்பா? என்று முடிவு செய்வதிலிருந்தே மேற்கண்ட கேள்விக்குச் சிறிது சமாதானமும் கிடைத்துவிடும்.

நிற்க, இன்று உலகத்தில் இயற்கை உணர்ச்சியிலும், அனுபவத்திலும் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கையின் கீழும், தமிழர் பின்பற்றும் மதத்தின்படியும் மறுமணம் என்பது எங்காவது தடுக்கப்பட்டிருக்கின்றதா என்பதை நம்மால் அறிய முடியவில்லை. அது மாத்திரமல்லாமல் மணவிஷயமாய் ஏற்படுத்தப்பட்ட சட்ட திட்டங்களிலும் எந்த மத சம்பந்தமான கொள்கைகளிலும் மறுமணம் என்பது தடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.

இந்து மதத்தில் அறுபதாயிரம் பெண்கள் வரையும், இஸ்லாமிய மதத்தில் 4 பெண்கள் வரையிலும், கிறிஸ்தவ மதத்தில் அளவு குறிப்பிடாமல் எவ்வளவு பெண்களை மனம் செய்துகொள்ள நேர்ந்தாலும் அதுவரையிலும் மணம் செய்துகொள்ள இடமிருக்கின்றது. கிறிஸ்துவ மதத்தில் மாத்திரம் ஆணோ, பெண்ணோ திருமணத்தை ரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்ளலாம் என்பதாகவும், அந்தப்படி ரத்து செய்து கொள்வதிலும் இன்னின்ன நிபந்தனைகளின்படிதான் செய்துகொள்ளலாம் என்றும் காணப்படுகின்றது. அதாவது சமுதாய சம்பந்தமான ஒரு பாதுகாப்பை உத்தேசித்து மாத்திரமேயல்லாமல், கொள்கைக்காக அல்ல என்று புரியும்படியாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே, இவ்வளவுதான் மறுமண விஷயத்தில் மற்ற மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ளவித்தியாசம்.

எனவே, ஒன்றுக்கொன்று நிபந்தனைகளின் திட்டங்களிலும்தான் வித்தியாசமே தவிர, மற்றபடி மறுமணக் கொள்கையை மதங்களின்படி பார்த்தால் எந்த மதமும் ஆட்சேபித்திருப்பதாய்த் தெரியவில்லை. அன்றியும், இந்து மதத்தில் இந்துக் கடவுள்களே பல மனங்கள் செய்துகொண்டதாகவும் மற்றும் பல வைப்பாட்டிகள் வைத்திருப்பதாகவும் மத ஆதாரங்களில் காணப்படுவதுடன் அந்தக் கடவுள்களை அந்தப்படியே அதாவது பல மனைவிகள், வைப்பாட்டிகள் ஆகியவைகளுடன் தமிழர்கள் - இந்துக்கள் என்பவர்கள் பூசை, கல்யாண உற்சவம் முதலியவைகள் செய்து வணங்குகிறார்கள். இஸ்லாமிய மதத்திலும் நாயகம் முகமதுநபி அவர்களே ஏககாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் இருந்ததாக ஒப்புக்கொள்ளப்படுகின்றது.

ஆகவே, இதை மறுப்பவர்களோ இம்மாதிரிக் கடவுள்களையோ நபிகளையோ குற்றம் சொல்லுகிறவர்களோ ஒருக்காலும் தங்கள் மதத்தின் பேரால் மத சம்பந்தமான கட்டளைகளின் பேரால் மறுக்கின்றோம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அந்தப்படி யாராவது ஒருவர் தன்னை இந்துவென்று சொல்லிக் கொண்டு இம்மாதிரி அதாவது ஒரு மனிதன், மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்பாரேயானால், அப்படிப்பட்டவர் தம் மதத்தைவிட தன்னுடைய பகுத்தறிவையோ அல்லது அனுபவ சவுகரியத்தையோ அல்லது வேறு ஏதாவது ஒரு கொள்கையையோ முக்கியமாகக் கருதிக் கொண்டு இம்மாதிரிக் கேள்வி கேட்க வந்திருக்கின்றார் என்றுதான் கொள்ளவேண்டும்.

ஆகவே, அக்கேள்விக்காரர் தன்னை இந்து என்று கருதிக்கொண்டு கேள்வி கேட்பதைவிட பகுத்தறிவுக்காரர் என்றோ அனுபவக் கொள்கைக்காரர் என்றோ கருதிக்கொண்டு கேள்வி கேட்கிறார் என்று அறிந்தோமானால், அதுவிஷயத்தில் நாம் மகிழ்ச்சி அடைவதுடன் அவருக்கு நியாயம் மெய்ப்பிக்கும் விஷயத்தில் நமக்குச் சிறிதும் கஷ்டமில்லையென்றே எண்ணுகின்றோம்.

நிற்க, பொதுவாக ஒரு மனிதனுக்கு தன் முதல் மனைவி

(1) செத்துப்போன காலத்திலும்

(2) மற்றொரு கணவனிடம் ஆசை கொண்டு வெளிப்பட்டுவிட்ட காலத்திலும் மறுமணம் செய்துகொள்வதை யாரும் குற்றம் சொல்வதில்லை. அதுபோலவே,

(3) தீராத கொடிய வியாதிக் காரியாயிருக்கும் காலத்திலும் மறுமணம் செய்துகொள்வதை யாரும் ஆட்சேபணை செய்வதில்லை.

(4) பைத்தியக்காரியாய்ப் புத்தி சுவாதீனமில்லாமற் போய்விட்ட காலத்திலும் யாரும் ஆட்சேபணை செய்வதில்லை. ஆகவே, பகுத்தறிவுக்காரரும், அனுபவக் கொள்கைக்காரர்களும் மேற்கண்ட முதல் சந்தர்ப்பம் தவிர, மற்ற மூன்று சந்தர்ப்பங்களிலும்கூட மனைவியிருக்க மறுமணம் செய்வதை ஆட்சேபிக்கமாட்டார்கள். இனி, அய்ந்தாவது, ஆறாவது முதலியவைகளாகப் பல விஷயங்களைக் கவனிப்போம்.

(5) மனைவி அறியாமையாலோ முரட்டுத்தனமான சுபாவத்தாலோ புருஷனை லட்சியம் செய்யாமல் ஏறுமாறாய் நடந்து கொண்டு வருவதாக வைத்துக்கொள்வோம்.

(6) புருஷன், பெண்ணின் மனத்திற்குத் திருப்திப்படாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ புருஷனிடம் பெண்ணுக்கு அன்பும், ஆசையும், இல்லாமல் வெறுப்பாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

(7) மேற்கண்ட குணங்களுடன் அடிக்கடி தாய் வீட்டுக்குப் போய்விடுவதாக வைத்துக் கொள்வோம்.

(8) புருஷனுடைய கொள்கைக்கு நேர் மாற்றான கொள்கையுடன் புருஷன் மனம் சதா சங்கடப்படும்படி பிடிவாதமாய் நடந்துகொள்ளும் சுபாவமுடையவள் என்று வைத்துக்கொள்வோம்.

(9) செல்வச் செருக்கால் புருஷனைப்பற்றி லட்சியமோ கவலையோ இல்லாமல் நடந்துகொள்ளுகின்றவள் என்று வைத்துக்கொள்வோம்.

இவைகள் மாத்திரமல்லாமல் மற்றும் இவை போன்ற குணங்கள் உள்ள மனைவியிடம் அகப்பட்டுக் கொண்ட கணவன் கதி என்ன ஆவது என்பதைக் கவனிக்கவேண்டியது கேள்வி கேட்பவர்கள் - அதாவது அனுபவக் கொள்கைக்காரர்கள் என்பவர்களின் முக்கியக் கடமையாகும்.

இவை தவிர, புருஷனுக்கு 12 வயதிலும், பெண்ணுக்கு 10 வயதிலும் பெற்றோர்களாலோ மற்றவர்களாலோ திருமணம் செய்யப்பட்டிருந்தால், அவைகள் மணமக்கள் அனுசரிக்கவேண்டிய தர்மங்களுக்குக் கட்டுப்பட்ட மனங்களாகுமா? அல்லது திருமணங்கள் செய்து வைத்தவர்கள் அனுசரிக்க வேண்டிய தர்மங்களுக்குக் கட்டுப்பட்டவைகளாகுமா? என்பதும், கேள்வி கேட்கிறவர்கள் - அதாவது பகுத்தறிவுக்காரர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்களாகும்.

இந்தக் காரணங்கள் தவிர மற்றும் எது எப்படி இருந்தாலும் மனத்துக்குப் பிடிக்கவில்லை; வாழ்க்கைத் திருப்திக்கும், இயற்கை இன்பத்திற்கும் சிறிதும் பயன்படவில்லை என்று மணமகன் முடிவு செய்துகொள்ளத் தகுந்த மணமகளை அடைந்துவிட்டால், அப்போது மணமகனின் கடமை என்ன என்பதை மதக் கட்டுப்பாட்டுக்காரரும், அனுபவக் கொள்கைக்காரரும், பாமரப் பொது ஜனங்களும் சேர்ந்து கவனித்துப் பார்க்கவேண்டிய காரியமாகும்.

கடைசியாக, இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, இவைகளைப்பற்றிய யோசனையை சிறிதுமின்றி, மற்றொருபுறம் ‘எப்படியிருந்தாலும் பொறுத்துக் கொள்ளவும், சகித்துக் கொள்ளவேண்டும்; ஒருக்காலமும் மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்ளக்கூடாது’ என்று ஒருவர் சொல்லுவாரானால், அப்படிச் சொல்லுகின்றவர் எந்தக் கொள்கையின்மீது அல்லது என்ன அவசியத்தைக் கோரி அல்லது என்ன நியாயத்தை உத்தேசித்து எவ்வித நன்மையை அனுசரித்து அல்லது எந்தப் பகுத்தறிவைக் கொண்டு இப்படிச் சொல்லுகின்றார் அல்லது எதிர்பார்க்கின்றார் என்பது விளக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் அது கவனிக்கப்படத்தக்கதாகும். ஏனெனில், சாதாரணமாகப் பேசுவோமானால், வெகு சாதாரனப் பாமர மக்கள் என்பவர்களும்கூட இக்காலத்தில் ஒரு விஷயத்தைப்பற்றி பேசும்போது, ‘அது சுருதி, யுக்தி, அனுபவம்' ஆகிய மூன்றிற்கும் பொருத்தமாயிருக்கின்றதா? என்று கேட்பது எங்கும் சகஜமாயிருக்கின்றதைப் பார்க்கின்றோம். அன்றியும், அம்மூன்று வார்த்தைகளின் அமைப்பும் முதலில் குறிப்பிட்ட சுருதிப்படி அதாவது, நமக்கு முந்தியிருந்த அனுபவசாலிகளின் அபிப்பிராயங்கள் என்கின்ற முறையில் கவனிக்கவேண்டும் என்கின்ற தத்துவம் கொண்டதானாலும், அப்படிப்பட்ட அனுபவசாலிகளின் அபிப்பிராயம் எவ்வளவு சரியானதென்று சொல்லப்பட்டாலும்கூட மற்றும் அவ்விஷயமானது யுக்திக்கு (அதாவது நமது பகுத்தறிவுக்கு) ஒத்ததாயிருக்கின்றதா வென்று கவனிக்க வேண்டுமென்கின்ற தத்துவத்தையே கொண்டு யுக்தி என்பதை இரண்டாவதாக வைக்கப்பட்டிருக்கின்றதையும் பார்க்கின்றோம். அப்படியும் - அதாவது, யுக்திக்குப் பொருத்தமானதாக இருந்துவிட்டதாகச் சொல்லப்படுவதானாலும், அது அனுபவத்திற்கு (அதாவது நடைமுறையில் கொண்டு செலுத்த) ஏற்றதாயிருக்கின்றதா? என்று கவனித்துப் பார்க்கவேண்டும் என்கின்ற தத்துவத்தை வைத்தே அனுபவமென்பதை முடிவில் மூன்றாவதாக வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை யாவருக்கும் விளங்கும்.

ஆகவே, ஒரு மனிதன் ‘ஒரு மனைவி இருக்கும்போது மறுமணம் செய்துகொள்ளக்கூடாது‘ என்பது இந்த மேற்கண்ட மூன்று பரீட்சைகளில் எந்தப் பரீட்சைக்கு விரோதமானதென்று கேட்கின்றோம். நிற்க, திருமணத்தில் மணமகனுக்கு மணமகளை வாழ்க்கைத் துணை என்று கருதுகின்றோம். இந்நிலையில், மேலே ஆரம்பத்தில் சொல்லப்பட்ட 9 வகைப்பட்ட அசவுகரியமான குணங்களமைந்த மணமகள் ஒரு மணமகனுக்கு அமையப்பட்டுவிட்டால், அது வாழ்க்கைத் துணையா? அல்லது வாழ்க்கைத் தொல்லையா? என்பதை முதலில் கண்டிப்பா கவனிக்கவேண்டும். வேடிக்கையாக வெளியிலிருந்து பேசுகின்றவர்கள் உண்மையறியாமல், நிலையறியாமல், சிறிதும் பொறுப்பற்ற முறையில் பாமர மக்களின் ஞானமற்ற தன்மையைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக்கொண்டு கண்மூடித்தனமாய்க் குற்றம் சொல்லக் கருதிக்கொண்டு, ‘மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா?’ என்று யார் வேண்டுமானாலும் பேசிவிடலாம். அதாவது, ‘மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்வது அக்கிரமம், அயோக்கியத்தனம்' என்பதாக சொல்லிவிடலாம். ஆனால், அந்தப்படி செய்துகொண்டது தப்பா? அல்லது இந்தப்படி சொன்னது தப்பா? என்பதையும் பகுத்தறிவைக் கொண்டாது அனுபவத்தைக் கொண்டாவது, இந்தப்படி பேசுகின்றோமே, நினைக்கின்றோமே, இதில் பிரவேசிக்கின்றோமே என்று நினைத்துப் பார்த்தால், கடுகளவு அறிவுடையவனுக்கும் ஒருக்காலும் விளங்காமல் போகாது என்று உறுதியாகச் சொல்லுவோம்.

கடைசியாக ஒன்று சொல்லுகின்றோம். ஒரு மனிதன் ஒரு விஷயம் தனக்கு இஷ்டமில்லை என்றோ அல்லது இஷ்டமாயிருக்கின்றதென்றோ இன்ன காரியம் செய்யத் தனக்கு உரிமை இருக்கவேண்டுமென்றோ உரிமை இருக்கக் கூடாதென்றோ கருதுவதற்கு அருகதை உடையவன்தானா? அல்லது மற்றவர்களா? என்பதையும் இம்மாதிரியான தன் சொந்த விஷயங்களின் முடிவான அபிப்பிராயத்திற்கு வர அவனுக்கு உரிமை இல்லையா? என்பதையும் கவனிக்கவேண்டியது உண்மையான விடுதலையும், சுதந்திரமும் கோருகின்றவர்களின் கடமையாகும்.

நிற்க, வாஸ்தவத்திலேயே அன்பும், ஆசையும் இல்லாத அல்லது அவை தனக்கு ஏற்படாத ஒரு இடத்தில் மனிதன் எப்படி வாழ்வது? மக்களுடைய அன்புக்கும், ஆசைக்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணும் சேர்ந்த மணம் (வாழ்க்கை ஒப்பந்தம்) செய்துகொள்வதா? அல்லது மணம் செய்துகொண்டதற்காக அன்பையும் ஆசையையும், இன்பத்தையும் திருப்தியையும் தியாகம் செய்வதா என்பதை மனித ஜீவ சுபாவமுடைய ஒவ்வொருவரையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம். உலகிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களில், அர்த்தமற்ற கட்டுப்பாடுகளில் சிக்கிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பது என்பது சுலபமான காரியமல்லவானாலும் அவ்விதக் கட்டுப்பாடுகளையும், கஷ்டங்களையும் ஒழிக்கவென்றே ஏற்பட்ட ஸ்தாபன நடவடிக்கைகளையே மூடப்பழக்க வழக்கப்படியும், குருட்டு நம்பிக்கைப்படியும் செய்யவில்லை என்று சொன்னால், சொல்பவர்களுக்கு அறிவு என்பது ஏதாவது இருக்கின்றதா என்றுதான் கருத வேண்டியதிருக்கின்றது.

ஏனெனில், இவ்வியக்கம் (சுயமரியாதை இயக்கம்) அதற்காகவே ஏற்பட்டிருக்கும்போது அதன் நடவடிக்கைகள் வேறு எப்படி இருக்க முடியும்? ஆகையால், இவ்வித யுக்திக்கும், அனுபவத்திற்கும், மனித சுதந்திரத்திற்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் விரோதமான கொள்கைகள் எதற்காகக் காப்பற்றப்படவேண்டும் என்னும் விஷயங்களை அன்பர்கள் நடுநிலையில் இருந்து நேர்வழியில் சிந்தித்துப்பார்ப்பார்களாக.

நிற்க, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளாகவே மறுமண விஷயத்தில் உள்ள அதிருப்தியைப்பற்றி சற்றுக் கவனிப்போம்.

சுயமரியாதை இயக்கத்தில் கல்யாண ரத்து என்பதும் ஒரு திட்டமாகும். அப்படியே செங்கற்பட்டு மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஈரோடு மாநாட்டில் அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, மணம் செய்து கொண்ட மணமக்கள் அந்தப்படியே கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கல்யாண பந்தத்திலிருந்து நீக்கிவிட அல்லது நீக்கிக் கொள்ள உரிமை ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட்டது. இந்தப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கையை அமலில் கொண்டுவர, சட்ட சம்பந்தமான இடையூறு யாருக்காவது, எந்த மதத்திற்காவது இருக்குமானால், அதற்காகச் சட்டத்தை உத்தேசித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா? அல்லது சட்டங்களைக் கவனிக்காமல், நியாயம் என்று தோன்றியபடி நடந்துகொள்வதா என்பதைக் கவனித்துப் பார்த்தால், அவர்களது அதிருப்திக்குச் சிறிதும் இடமிருக்காது என்றே கருதுகின்றோம்.

உதாரணமாக, சுயமரியாதைக் கொள்கைப்படி செய்யப்படும் திருமணங்களிலும் சில சட்டப்படி செல்லக் கூடாதவைகளாக இருந்தாலுமிருக்கலாம் அதாவது,

“மணமக்கள் இருவரும் வேறு வேறு சாதிகள்” என்று சொல்லப்படும் கலப்பு மனங்களும், மூடப் பழக்க வழக்கங்களும், அர்த்தமற்றதும், அவசியமற்றதுமான சடங்குகள் செய்யப்படாத சில திருமணங்களும், செல்லுபடியற்றதாகவானாலும் ஆகலாம் என்று சட்ட வல்லுநர்கள் சொல்லுவதாகக் கேள்விப்படுகிறோம். அப்படியிருந்தாலும் கொள்கையிலிருக்கும் அவாவை உத்தேசித்துச் சட்டத்தைக் கவனியாமலும், அதனால் ஏற்படக்கூடிய பலன்களை லட்சியம் செய்யாமலும் எல்லாவற்றிற்கும் துணிந்து பலர் மனம் செய்துகொள்வதை நாம் பார்க்கின்றோம். ஆகவே, மறுமண விஷயத்தில், முதல் மனைவியைச் சட்டப்படி கல்யாண ரத்து செய்ய முடியாமல் மறுமணம் நடத்தப்பட்டது என்று சொல்லப்படுவதை விட இம்மாதிரித் திருமணங்களில் சுயமரியாதைக்காரர்களுக்குக் கொள்கைப் பிசகோ, நியாயப் பிசயோ இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

தவிரவும், முதல் மனைவி மணமகனுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும்போதுகூட, மறுமணம் செய்துகொள்ளப்படுவதையும் சுயமரியாதைக் கொள்கை ஏன் ஆதரிக்கின்றது என்பதைப் பற்றியும் சற்றுக் கவனிப்போம்.

மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்கவேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும். அன்பு ஆசை ஆகியவை ஏற்படுவது ஜீவனுக்கு (43) யதாயும் இருக்கவேண்டும் என்றும், அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும், இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக்கொள்கின்ற மக்கள். அன்பு ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முன்வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம்.

ஆனால், அனுபவத்தில் உள்ள சில சவுகரிய, அசவுகரியங்களை உத்தேசித்தும், இயற்கைத் தடுப்பு, சமுதாய வாழ்க்கை நலக் கொள்கை முறை முதலியவைகளை உத்தேசித்தும், அன்பும், ஆசையும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க வேண்டியதாக ஏற்படலாம் என்பதை நாம் மறுக்க வரவில்லை. அன்றியும், ஒப்பந்தங்களினால் கட்டுப்பட வேண்டியதாகவும் ஆசைப் பெருக்கால் தானாகவே கட்டுப்பட்டுவிட்டதாகவும் போனாலும் போகலாம். அம்மாதிரி நிலைகளில் இம்மாதிரிக் கேள்விக்கே இடமில்லை. ஆதலால், அப்படிப்பட்ட காரியங்களை அவரவர் இஷ்டத்திற்கே விட்டுவிட வேண்டியதவசியமாகும். முடிவாக ஒன்று சொல்லி இதை இப்போது முடிக்கின்றோம். அதாவது இம்மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் ஒரேயடியாய் அடியோடு இடம் இல்லாமல் போகவேண்டுமானால், பொதுவாகப் பெண்கள் நிலைமை மாறியாகவேண்டும் ஏனெனில், மேற்கண்ட கேள்வி கேட்கப்படுவதற்குப் பெரிதும் அஸ்திவாரமாய் இருக்கும் காரணமெல்லாம், “இப்படிச் செய்துவிட்டால், முன் மணம் செய்துகொண்ட பெண்ணின் கதி என்ன ஆவது?” என்கின்ற கவலை கொண்டேதான் கேள்வி கேட்கப்படுகின்றது. எந்தெந்தக் காரணத்தால் புருஷனுக்குப் பெண் பிடிக்கவில்லையோ, ஒத்துவரவில்லையோ அந்தக் காரணங்களால் பெண்ணுக்குப் புருஷன் பிடிக்காதபோது, இப்போது புருஷனுக்கு இருக்கவேண்டுமென்று சொல்லப்படும் சுதந்திரமும், சவுகரியமும்போல பெண்களுக்கும் ஏற்படுமானால், பிறகு, இந்த மாதிரியான அனுதாபமும், கவலையும் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட இடமே இருக்காது என்பதுதான். நம்மைப் பொருத்தவரை ஆண்களுக்குச் சொன்ன விஷயங்கள் எல்லாம் பெண்களுக்கும் பொருந்துமென்றும், அவர்களுக்கும் ஆண்களைப்போலவே ஏற்படவேண்டும் என்றும், அம்மாதிரியே அவர்களும் நடந்துகொள்ள வேண்டுமென்றும், உலக வாழ்விலும், சமுதாயத்திலும், சட்டத்திலும், மதத்திலும் ஆண்களுக்குள்ள சவுகரியங்களும், உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கவேண்டுமென்றும் அப்பொழுதுதான் பெண்களுக்கு திருப்திகரமான இன்பத்தையும், ஆசையையும் அடைய முடியுமென்றும் கருதுகின்றோம்.

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

ஆறாம் அத்தியாயம் 

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு