திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா? - அணிந்துரை
வெறும் மறுப்பு நூல் அல்ல! அறிவாயுதம்!
'மனோண்மணியம் ' சுந்தரம்பிள்ளை அவர்கள், திருக்குறளின் உண்மை மாண்பை - மய்யக் கருத்தை
"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி?"
என்ற இரண்டே வரிகளில், வள்ளுவரின் குறள், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து எழுதப்பட்ட ஓர் அறிவு நூல் ஆகும்! அறிவுச் சுதந்திர நூலும் ஆகும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
திருக்குறளை பாமர மக்கள் மத்தியிலும் பரப்பிய நற்றொண்டைச் செய்த தந்தை பெரியார் அவர்கள் இந்தக் கருத்தை மிகவும் தெளிவாகவே விளக்கியுள்ளார்.
"மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு, ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகத்தான் என்னால் கருத முடிகிறது!
திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க - அவைகளை மடியச் செய்ய - அக் கொள்கைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன். உதாரணமாக, மநுதர்மம் வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள் வர்ணங்கள்), “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன்'' உண்டு என்று உபதேசிக்கிறது.
பிராஹ்மண; சத்திரியே வைஸ்த; த்ரயோவர்ணாத் விஜரதய; சதுர்த்த ஏகஜ திஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம்; (மனுதர்மம்)
திருக்குறள் மக்கள் அனைவரும் ஒரே இனம்தான், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்கிறது" என்கிறார் பெரியார். இப்படி எத்தனையோ கூறலாம்.
அறம், பொருள், இன்பம் மூன்றோடு முடிகிறது! வீடு - மோட்சத்தில் நம்பிக்கையோ - இடமோ குறளில் கிடையவே கிடையாது!
மனு மற்றும் ஹிந்து சாஸ்திரங்கள் கூறும் 'தர்மம்' வேறு. குறள் கூறும் அறம் - மனத்தூய்மை. மனத்துக்கண் மாசிலாதது மனத்தூய்மை!
வள்ளுவத்திற்கும் மனுவுக்கும் உள்ளது தண்ணீருக்கும் மண்ணெண்ணெய்க்கும் உள்ள வேறுபாடு. ஒன்று மலை; மற்றொன்று மடு! ஒன்று வெளிச்சம்; மற்றொன்று இருட்டு! அந்த அளவிற்கு இரண்டும் அடிப்படைத் தன்மையில் மாறுபட்ட இரு வேறு தத்துவங்களைக் கொண்டவை.
இப்படிப்பட்ட இரண்டையும் இணைத்து ஆரிய கலாச்சார மயமாக்குவதும் சமஸ்கிருத ஆதிக்கத்தை வலியுறுத்துவதும் புரட்டு - இமாலய புரட்டு ஆகும்!
நாகசாமி என்ற நச்சுக் கருத்தாளர் தம் மனம் போனபடி திட்டமிட்டே திருக்குறளில் திரிபுவாதங்களைப் புகுத்தி, பண்பாட்டுப் படையெடுப்பு செய்ததன் மூலம் அதற்கு எதிரான நம் அறவழிப் போர், அறிவுப் போருக்கு வித்திடுகிறார்!
விடுவார்களா குறளிய பகுத்தறிவாளர்கள்! தோழர் மஞ்சை வசந்தன் நாடறிந்த சிந்தனையாளர்! போதிய தரவுகளுடன் அறிவு வாதங்களால் ஆரிய பொய்மைத் திரையைக் கிழித்தெறிகிறார்! இதற்கு மறுப்பு எழுதட்டுமே! வரவேற்போம்!
எனவே, இந்நூல் காலத்தாற் சிறந்த கட்டத்தின் தேவையை நிறைவு செய்கிறது! பல புலவர் பெருமக்கள் செய்யத் தவறிய மாபெரும் பணியை, ஓர் எளிய பெரியார் தொண்டர் ஆணித்தரமான வாதங்களை எழுப்பி பொய்மையினைத் தோலுரிக்கிறார். அவரது ஆய்வறிவு மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.
இனி நம் வேலை வள்ளுவரைப் பரப்புவதல்ல; அதைப் பாதுகாப்பது - திரிபுவாதிகளிடமிருந்து. எதிர்த்து அழிக்க முடியாததை அணைத்தே - அழிப்பது ஆரியக் கலையின் உச்சகட்ட வியூகம் - குறளைப் படிப்போர் 'மயக்க மாத்திரை மருந்துகளால் மயங்கி அறிவு மங்கவிடாமல் உண்மைகளை உலகறியச் செய்யும் உன்னதப் பெரும் பணியைச் செய்ய முன்வாருங்கள்!
நவில்தொறும் நயம் தரும் நூல் இது. படித்துப் படித்து, அசைபோட்டு பண்பாட்டை விழுங்கும் கயமைத்தனத்தை விரட்டுவீர்! மஞ்சையின் நஞ்சையான அறிவு வளம் பெருகட்டும்!
- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
19.8.2019
தொடர்புடைய மற்ற பதிவுகள்: