தமிழகத்தில் சாதியும் இந்துத்துவமும் - சாதியும் காவியும் அற்றுப் போக...
ஆதியிலே சாதி இல்லை என்பது நம் பழம்பெருமை. பாதியிலே முளைத்த சாதி முள் மரங்களாய் வளர்ந்து அடர்ந்து நம்மைக் குத்திக் கிழிக்கிறதே! அவற்றுக்கு விதை போட்டது யார்? வேரூன்றச் செய்தது யார்? அழிக்க முடியாமல் மேலும் மேலும் அழிவுக்குத்தான் சாதிகள் காரணமாக இருக்கின்றன! மனிதர்கள் கொல்லப்படுவதே கொடுமை. கவுரவக் கொலை என்றொரு வகைமையை உருவாக்கி சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவையெனப் போராடுவதுதான் இன்றைய 'வளர்ச்சி' யாக இருக்கிறது.
இந்தக் கொடிய சாதிய முறை தமிழகத்தில் கட்டிக் காக்கப்பட்டது யாரால்? ஏன்? எதற்காக என்பது போன்ற ஐய வினாக்களுக்கு விடைத்தேடித் தருவதில் ஆய்வாளர் சி.இளங்கோ பெருமுனைப்பு காட்டியிருக்கிறார்.
நினைவில் நின்ற கருத்துக்களால் நூலினை நிரப்பி விடாமல் நூல்கள் பலவற்றை ஆதாரங்களாக முன்வைத்து “தமிழகத்தில் சாதியும் இந்துத்துவமும் - ஒரு வரலாற்று ஆய்வு" என்ற நூலினை ஆக்கித் தந்துள்ளார் முனைவர் சி. இளங்கோ அவர்கள்.
தமுஎகச மாநாட்டில் மைய முழக்கங்களை முன் வைப்பது என்ற நடைமுறை 13 ஆவது (திருப்பூர்) மாநாட்டில்தான் தொடங்கியது. உடனடியாக ஆய்வில் இறங்கிய இளங்கோ "மனுதர்மத்திற்கு எதிரான முற்போக் குத் தமிழ் மரபு" என்ற நூலினை ஆக்கித் தந்தார்.
தமுஎகச தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது. தமுஎகச வின் 40 ஆவது ஆண்டு விழா சிறப்பு மாநாட்டில் இந்நூல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
14 வது (புதுச்சேரி) மாநாட்டிற்கான முழக்கம் முன் வைக்கப்பட்டவுடன் பல நூல்களைத் தேடி ஆதாரங் களைத் தொகுத்து ஆவண நூலாகவும் ஆய்வு நூலாகவும் இதனைத் தந்துள்ளார்.
"சாதிகள் இல்லையடி பாப்பா”
என்று பாடிய பாரதிதான் அந்நியர் புகுதலைக் கேள்வி கேட்டபோது,
"ஆயிரம் உண்டிங்கு சாதி ''
என்று ஒப்புக் கொள்ளவும் செய்தார்.
சாதி என்பதைப் பிறப்பால் நிர்ணயித்து கெட்டி யாக்கிய சூதும் சூழ்ச்சியும் மனிதர்களை இழிநிலைப்படுத்தி விட்டது. இதற்கு எவ்வளவு முனைப்பு காட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் சமகாலத்தை அறிந்து கொள்ள உதவும்.
மனிதப் பயிர்களை அழிக்கும் சாதிக் களைகளை மண்டச் செய்ததில் பிராமணியத்தின் பங்கு - ஆலயங்கள், அரச சார்பு வேதங்கள், புராணங்கள் போன்றவற்றால் மூளைச் சலவை செய்த போக்கு.....
சாதிச் சங்கிலிகளை நாமே விரும்பிகட்டிக்கொள்ளும் அளவுக்கு மூளையை மழுங்கச் செய்தது......
சாதி விலங்குகள் பூட்டிய என் கால்களுக்குக் கீழே ஒருவன் மிதிபடுகிறான் என்ற முட்டாள் தனமான மகிழ்ச்சி யிலே மூழ்கித் திளைக்கும் விந்தை
இவற்றையெல்லாம் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.
உள்ளதை உள்ளபடி உரைத்துச் செல்கிற போக்கினை உடைத்து சாதியத்திற்கு எதிராகப் போராடிய ஆளுமை களாக சித்தர்கள் தொடங்கி சிங்காரவேலர், ஜீவா, பெரியார், அம்பேத்கர், அயோத்திதாசர், பாரதி, பாரதி தாசன், திரு.வி.க, எம்.சி. ராஜா. வரையிலானவர்களின் பார்வைகள் எழுத்துகளாக எடுத்தாளப்பட்டுள்ளன.
ஆளுகின்றவர்கள் உதவியோடு உயர்குடிகள் என்று தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட மேன்மையோடு இடைநிலைச் சாதியினரிடம் வரலாற்றுக் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் தங்களை ஆண்ட பரம்பரைகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிற பெருமிதம் வளர்ந்து போனது. ஆளப்பட்டவர் யார் என்ற கேள்விக்கு விடை அறியாதவர்கள் ஊர்களின் புறத்தே உழைப்புச் சக்தியை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இலக்காயினர். தங்களின் வன்மங் களை அவர்கள் மீது திருப்பினர். தாங்கள் இன்னொரு பிரிவினருக்கு அடிமையாக இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே அவர்களை அடிமைப்படுத்தி மகிழ்ந்தனர்.
அவர்களுக்கான கட்டுப்பாடுகளை ஊராரின் சட்டங்களாக வரையறுத்து அமல்படுத்தினர். இவற்றை எதிர்த்தப் போர்க்களத்தில் சாதி வேறுபாடுகளை உதறி ஒன்றுபட்டவர்கள் இடதுசாரிகள் தான் என்பதையும் அவர்களின் செயல்பாடுகளையும் அழுத்தமாகவும் தந்திருக்கிறார். சாதிகளுக்குடையேயான மோதலில் குளிர் காய்ந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டியவர்களை மிகத் துல்லியமாக வரையறை செய்து காட்டுகிறார்.
சாதிகளையும் அவை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் தந்துள்ளார் முனைவர் இளங்கோ அவர்கள்.
சாதியற்ற தமிழர்; காவியற்றத் தமிழகம் என்பது சமகால சமூகப் போக்குகளால் பிளவுண்டு கிடக்கின்றன. "இப்பல்லாம் எவன்டா சாதிய பாக்கிறான்” என்று நகர வாழ்க்கையில் சொல்லி நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ள லாம். உண்மை நிலை என்னவோ சுடுவதாகத்தான் இருக்கிறது.
சாதி எதிர்ப்பாயினும் இந்துத்துவ எதிர்ப்பாயினும் களத்தில் முன்னிற்பவை இடதுசாரி இயக்கங்கள் தான் என்பதை ஏராள சான்றுகளை ஆண்டுவாரியாகவும் தேதிவாரியாகவும் பதிவு செய்துள்ளார். இவ்வகையில் இது ஒரு வரலாற்று ஆய்வாக மட்டுமின்றி வரலாற்று ஆவணமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம் என்ற சவால் மிக்க இலக்கினை எட்டுவதற்குக் கடந்தகால வரலாறும் நிகழ்கால சம்பவங்களும் அறிந்துணரப்படுதல் அவசிய மாம், அந்தத் தேவையை நிறைவு செய்யவும் எதிர்காலப் பணிகளுக்குத் திட்டமிடவும் இந்நூல் பெரிதும் பயன் படும். இதனை ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பது பாதுகாப்பது பயன்படுத்துவது படைப்பாளியை ஊக்கு விப்பதாக மட்டு மின்றி தமுஎகச வின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.
இந்நூலினைப் பிரதிபலன் கருதாமல் மெய்வருத்தம் பாராது ஆக்கியளித்த முனைவர் சி. இளங்கோவுக்கு தமுஎகச தென்சென்னை மாவட்டக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தோழமையுடன்
மயிலைபாலு
தொடர்புடைய மற்ற பதிவுகள்: