Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

சாதியின் குடியரசு - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
முன்னுரை

உலகை ஒரு பழமைவாத அரசியல் கவ்விப் பிடித்துள்ளது போல் தெரியும் இக்காலத்தில் இந்தியா ஒரு குடியரசாக தனது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறது. நமது ஜனநாயகப் பரிசோதனையின் பொருளாதார வளர்ச்சி மக்கள் போராட்டங்களோடு தொடர்புடையது, கடைக்கோடி மனிதர்களுக்கும் வளர்ச்சியின் நன்மைகள் கிடைக்கும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பு கூட இருந்த நம்பிக்கைகள் பழங்கதையாகிவிட்டன. சாதியின் குடியரசு என்ற இந்த நூலில் ஆனந்த் டெல்டும்டே சமகாலத்து செயல்முனைவின் மெத்தனமான கற்பனைகளை உலுக்கும் விதத்தில் பகுத்தாய்ந்துள்ளார். இன்று பெரும் பிரச்சினையாக இருக்கக்கூடிய, ஒரு ஜனநாயகக் குடியரசாக நாம் கூட்டாக உயிர்பிழைப்பது பற்றி விரிவாகப் பேசுகிறார்.

அவரது நூல் நமது ஜனநாயக அரசியலின் குணாதிசயமான திக்குத் திசையறியாத மலைப்பு பற்றிப் பேசுகிறது. நாடு முழுவதும் நாம் உரிமைகளுக்காக, நீதிக்காக, பொறுப்புடைமைக்காக, தனிநபர் சிந்தனை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்காக பெரும் இயக்கங்கள் நடப்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட இயக்கத்திலும் அவை சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், கூட்டாக அவை உபகதைகளாக, துண்டு துண்டாகவே இருக்கின்றன. ஒரு மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரசியல் இயந்திரத்தின் முன்னோக்கியப் பயணத்தின் ஒலியின் முன் இந்தியாவின் இன்றைய கோடிக்கணக்கான போராட்டங்கள் செயலிழந்து நிற்கின்றன. தனது சித்தாந்த வெறியால் செலுத்தப்படும் ஆளும் வர்க்கம், தனது தகவல் தொடர்பு சாதனங்களின் உதவியோடு மக்களின் வெறுப்பையும், வேதனையையும் உணர்ந்து, இந்தியர்களை டிஜிட்டல் இந்துக்கள் எனும் புதிய மதத் திரள்வாக மாற்ற கடும் முயற்சி செய்து வருகிறது.

குடியரசின் அடிப்படை லட்சியங்களில் ஒன்றான சமத்துவம் என்ற லட்சியத்தை ஆராய்வதே டெல்டும்டேயின் ஆய்வுகளின் பல்வேறு இழைகளின் இணைக்கும் சரடாக உள்ளது. அவரது எழுத்தில் காணப்படும் தர்க்கம், விவேகம், ஆர்வம் அனைத்தும் நமது வரலாற்றில் இந்த லட்சியத்திற்கு ஏற்பட்ட பல்வேறு சீர்குலைவுகளை வெட்ட வெளிச்சமாக்குகின்றது. மதவாதத்தின் பிடியில் மீண்டும் சிக்கியுள்ள இந்தியாவில் ஏன் அந்த லட்சியம் முன்னெப்போதையும் விட வெகு தொலைவில் உள்ளது என்பதைக் காட்டுகின்றன.

அதே சமயத்தில், சமத்துவமின்மைக்கு எதிராக அணிதிரள்வது, குலைக்கப்படுவது டெல்டும் டே அரசியலமைப்பிலேயே உள்ள குறைபாடு என்று கருதும் ஒரு அம்சத்தாலும், இந்திராவின் முற்போக்கு இயக்கங்கள் பகுப்பாய்வு முடிவெய்துவது ஆகியவற்றில் அடைந்துள்ள தோல்வியாலும் சாத்தியமாகியுள்ளது. சுதந்திர இயந்தியாவின் லட்சியங்களின் மையமாக மற்ற எவரையும் விட சமத்துவத்தை முன் வைத்த மனிதரான பி.ஆர். அம்பேத்கர் சந்தித்த முடிவை இந்தத் தோல்விகள் உருவகப்படுத்துவது ஒரு முரண் நகை. ஒரு தேசியத் தலைவராக அவரது அந்தஸ்தை யாராலும் கேள்வி கேட்க முடியாது. அவர் யாருடைய சலுகைகளை அழிக்க முயன்றாரோ, அவர்களேகூட மேம்போக்காக வேனும் அவரை ஏற்கவே செய்கிறார்கள். இந்துத்துவவாதிகள் உள்ளிட்ட அரசியல் பெருந்தலைவர்களுக்கு அம்பேத்கருக்கு மரியாதை காட்டும் சடங்குகள் அடிமட்டத்து மக்கள் மீதான அவர்களது நன்னோக்கைக் காட்டுவதற்கு, அவரது தொண்டர்களின் வாக்கைப் பெறுவதற்கு உதவுகின்றன. தவிர்க்க முடியாதபடி அம்பேத்கர் அவரைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவரின் குறிப்பிட்ட நோக்கங்கள், நலன்களுக்கு உதவுபவராக இருக்கிறார்.

ஆனால், அம்பேத்கர் பாடுபட்ட தலித் நலன்கள் நிறைவேறாமல் உள்ளன. பலவிதங்களில் அவை நிறைவேறுவது கடினமாகவும் ஆகிவிட்டது. இந்தச் சீரழிவு பற்றிய டெல்டும்டேவின் பதிவுகள் மிகவும் இடித்துரைப்பவை. சாதியை நீக்கி விட்டதாகத் தோற்றமளிக்கும் அரசியலமைப்பை உருவாக்கியதற்காக அம்பேத்கர் புகழப்படும் அதே வேளையில், இந்தியக் குடியரசு சாதி என்ற அஸ்திவாரத்தில் தான் கட்டப்பட்டிருக்கிறது' என்று டெல்டும்டே வாதிடுகிறார். அரசாணையின் மூலம் தீண்டாமை ஒழிக்கப்பட்ட அதே நேரத்தில் இடது ஒதுக்கீட்டின் மூலம் அரசியலமைப்பில் சாதி நுழைக்கப்பட்டுவிட்டது. இட ஒதுக்கீட்டுக் கொள்கை தலித்துகளுக்கு மெய்யான பலன்களை அளித்துள்ளதை டெல்டும்டே ஏற்கிறார். ஆனால், அது ஏற்கனவே சலுகை பெற்றிருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு, சாதிகளின் உட்பிரிவுகளுக்கிடையே உட்பூசல்களை உருவாக்கி, தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் சாதிகளைகையாள்வதற்கு ஒரு நல்ல ஆயுதத்தை தந்துள்ளது.

இடஒதுக்கீடு மூலம் சமூகப் படிநிலையிலிருந்து சாதியை நீதி மற்றும் நிர்வாகப் படிநிலைக்கு மாற்றும் மேட்டுக்குடியால் உருவாக்கப்பட்ட மாற்றம் இப்போது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதான ஒரு படிநிலையை அரசாங்கத்திலேயே மறுஉருவாக்கம் செய்துவிட்டது. இதன் விளைவாக 'சாதி தொடர்பான குறைகளைக்களையும் மேலோட்டமான வழிமுறைகள் ஏற்பட்டுள்ளன. இவை சமத்துவமின்மைக்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றி விவாதிக்க இடமின்றிச் செய்துவிட்டன. அதே சமயத்தில், இட ஒதுக்கீடு கிடைக்காமல் ஒதுக்கப்பட்டவர்கள் தமது பொறாமையை உடல்ரீதியான வன்முறையில் காட்டுவது அதிகரித்து, இது தலித்துகள் மீதான உயர்சாதி வன்முறையை தூண்டிவிடுகிறது. டெல்டும்டே சோகமாகக் குறிப்பிடுவதைப்போல, அரசு அலுவலகங்களில் தலித்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, தலித்துக்களின் பொருளாதார, சமூக நலன்களை முன்னேற்றுவது என்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்கான குறைந்தபட்ச உடல் ரீதியான பாதுகாப்பை அளிப்பதற்குக் கூட ஒன்றும் செய்யவில்லை.

இதனிடையே, அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடும் முக்கியமான சமூக அமைப்புகளான, இடதுசாரி மற்றும் தலித் இயக்கங்கள் என்றைக்குமே நெருக்கமாக இருந்ததில்லை என்றாலும், இன்று மேலும் விலகித்தான் சென்று கொண்டிருக்கின்றன. சாதிப் பிரச்சினையை எதிர்கொள்ள இந்திய இடது சாரிகளின் விருப்பமின்மை, தலித் அடையாளத்திற்கு வெளியே உள்ளவர்களையும் இணைத்து, அதிக பொதுப்படையான கூட்டு இயக்க வடிவங்களை சிந்திக்கவும் கூட தலித் அமைப்புகளிடம் இருக்கும் விருப்பமின்மை ஆகிய இரண்டைப் பற்றியும் டெல்டும்டே எழுதுகிறார். இதன் விளைவாக அதன் செயல்திறனுக்கு பொருத்தமற்ற போர்க்குணம் கொண்ட ஒருதலித் இயக்கமும், யதார்த்தத்தில் தன்னை வேகப்படுத்த வேண்டிய ஏராளமான காரணங்களுக்குப் பொருத்தமற்ற செயலற்ற தன்மை கொண்ட ஒரு இடதுசாரி இயக்கமும் இங்கு உள்ளன.

அப்படியானால் அதிக செயல்திறனும், அனைத்தையும் உள்ளடக்கியதுமான ஒரு அரசியல் உருவாகுமா? அம்பேத்கருடைய சொந்த அணுகுமுறையை, குறிப்பாக அவர் ஒரு கடவுளாக ஒரு குழுவின் தலைவராக சுருக்கப்பட்டுவிட்ட இந்த நேரத்தில் நினைவுகூர்வது முக்கியமாகும். உண்மையில், டெல்டும்டேநமக்கு நினைவூட்டுவதுபோல, அம்பேத்கர் ஒரு மார்க்சியர் இல்லை என்ற போதிலும், குறிப்பிட்ட நோக்கங்களுக்கான சக்தியை ஒருங்கிணைக்கும் கொள்கைகளை எப்போதுமே தேடிவந்த ஒரு பொதுமைவாதியாக (universal ist) இருந்தார்.

இவ்வுலகை வாழ்வதற்கான ஒரு நல்ல இடமாக மாற்றுவதற்காக மெய்யாகவே போராடியதாலேயே அம்பேத்கர் மகத்தானவராகத் திகழ்கிறார். தனது மக்கள் என்ற காரணத்திற்காக மட்டும் அவர் தலித்துக்களுக்காகப் போராடியிருந்தால் அவர் இந்த மகத்துவத்திற்குத் தகுதியடைந்திருக்க மாட்டார். மனித சமத்துவத்திற்கு, ஜனநாயகமயம் என்ற லட்சியத்திற்கு முக்கியமானது, இந்திய சமூகத்தை தேக்க நிலையிலிருந்தும், சீரழிவிலிருந்தும் மீட்க உடனடியாக அவசியமானது என்ற காரணங்களுக்காகவே அவர் தலித் பிரச்சினைகளை கையிலெடுத்தார். சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை அமைப்புகளிலிருந்து, மனிதர்களை விடுவிக்கும் போராட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக அது இருந்தது.

1952ல் அம்பேத்கர் குறிப்பிட்டது போல, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் அவர் மக்களது மனசாட்சி' தரநெறிசார் பொதுமைக் கோட்பாட்டை (normative univerralism) நம்பியிருந்தது. மக்களது மனசாட்சி என்றால் பாதிக்கப்பட்டவர்யாராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு தவறையும் பார்த்துக் கொந்தளிப்பது, அந்தக் குறிப்பிட்டதவறால் பாதிக்கப்பட்டவரோ, அல்லது பாதிக்கப்படாதவரோ அனைவருமே பாதிக்கப்பட்டவரைக் காக்க அவரோடு இணைந்து கொள்வது என்று அம்பேத்கர் விளக்கமளித்தார்.

அந்த மக்களது மனசாட்சியை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று டெல்டும்டே நம்மை அழைக்கிறார். அது இன்றைய நமது விஷச்சூழலில், சக்தியற்றவர்களை துன்புறுத்திக்கொண்டே, சக்தி மிக்கவர்கள் தாம் பாதிக்கப்பட்டதாக நாடகமாடும் சூழலில் அழிக்கப்பட்டு விட்ட ஒரு சிந்தனை மற்றும் உணர்வு அமைப்பு. இந்த பொது (நான் அதை அரசியல் என்றும் குறிப்பிடுவேன்) மனசாட்சியை நம்புபவர்களுக்கு, நமது சமூகத்தின் தேவைகள், விருப்பங்களில் உள்ள பன்முகத்தன்மையை மதிப்பதில் உறுதி கொண்டவர்களுக்கு இந்த பன்முகத்தன்மைகளை மீண்டும் ஒருங்கிணைத்து, இந்தியா என்ற கருத்தாக்கத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்று சிந்திப்பது கடமையாகும்.

இக்கருத்தாக்கத்திற்கு இந்துத்துவாதன்னை ஒரு மலினமான வடிவமாக முன் வைக்கிறது. இதற்கு சித்தாந்த தெளிவும், மக்கள் ஆதரவும் இருப்பது போல் தெரிகிறது. இந்துத்துவாவிற்கு அதே போன்ற மலினமான எதிர்வினையை அளிப்பதைத் தவிர்ப்பது மிக முக்கியம். அதாவது, அதை பின்னுக்குத் தள்ள, அதன் பகட்டான தேசியவாதத்தை முறியடிக்க உபதேசியவாதங்களை அல்லது தேசியத்திற்கு எதிரான வாதங்களை வைப்பதைத் தவிர்ப்பது, நமது பன்முகத்தன்மைகளை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்காது, நமது சாதகமாகப் பார்க்கும் ஒரு பார்வையை உருவாக்குவது அதிக அவசியமானதும், அதிக கடினமானதும் ஆகும். இப்படிச் செய்வதில் நமது முன்னோர்கள் பெரும் முயற்சிகள் எடுத்தார்கள். சில தோல்விகளையும் சந்தித்தார்கள். அது மிகவும் பலவீனமான பார்வையாக இருந்தது. எப்போதும் அப்படியேதான் இருக்கும். அது நிச்சயமாக நமது நாகரீகத்தின் உள்ளார்ந்த பார்வையன்று. அதன் ஒரு சாதகம் என்னவெனில், அது சமத்துவம், உரிமைகள், நமது வரலாற்றின் பெரும் தவறுகளை சரிசெய்வதற்கான வழிகள் ஆகியவற்றிற்கான நமது உண்மையான போராட்டங்கள் தொடர்வதற்கான சட்டகத்தை, குடியரசை, நீடித்து இருக்கச் செய்யும். நல்ல முடிவுகளை நோக்கி முன்னேறச் செய்யும். அந்தப் போராட்டங்களைப் பற்றித்தான் டெல்டும் டே நம்மை சிந்திக்க வைக்கிறார்.

ஆனந்த் டெல்டும்டேயின் தெளிவான வாதங்கள் யாருக்கும் வசதியாக இருக்காது. ஆனால் நாம் அனைவரும் அவற்றை அவசியம் படிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். ஏனெனில் அவை நம்மை கடுமையாக சிந்திக்க நிர்பந்திப்பவை.

சுனில் கில்னானி

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு