மனித சமுதாயம் - பதிப்புரை
உள்ளார்ந்த தேடுதல் வேட்கையின் பொருட்டு உலகமெங்கும் ஊர்சுற்றித் திரிந்து தத்துவார்த்த ஞானத்தில் பேராற்றலுடன் சிறந்தோங்கிய சிந்தனை யாளர் ராகுல் சாங்கிருத்யாயன். மனித சமூகத் தோற்ற உருவாக்கத்திலிருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாற்றை ஆய்ந்தறிந்து எழுதியதே மனித சமுதாயம்' எனும் இந்நூலாகும்.
ஆதிகால மனித சமுதாயம் முதற்கொண்டு மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலை வளர்ச்சிகள் இந்நூலில் வரையறை செய்யப்பட்டுள்ளன. மொழி, அரசியலமைப்பு, விஞ்ஞானம், இனக்குழு சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் போன்ற சமூகப்படி நிலை குறித்து விரிவாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இறை வழிபாடு, மத உருவாக்கம், சோசலிச மனித சமுதாயம், போர்கள், தத்துவங்களின் தோற்றம், பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்ககால மார்க்சிய சோசலிசம், மார்க்ஸியம் மற்றும் பெண்களின் வாழ்நிலை, ஆணாதிக்கச் சமூகத்தின் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட மனித சமுதாய வளர்ச்சி நிலையின் முழுமையான வரலாற்றுப் பதிவுகளை இந்நூலில் காணலாம்.
இந்தி மொழியில் எழுதப்பட்ட இந்நூல் 1943ம் ஆண்டு பாட்னாவில் முதல் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் அலகாபாத் மற்றும் கல்கத்தாவிலிருந்து சிற்சில திருத்தங்களோடு பல பதிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. இறுதியாக 1976ம் ஆண்டு முழுமையாகத் திருத்தம் செய்யப்பட்டு கல்கத்தாவில் வெளியிடப்பட்டதே திருத்தப்பட்ட இந்நூற்பதிப்பாகும்.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றைய மனித சமூக வாழ்வு வரையிலான வரலாற்றை விரிவாக விளக்கிச்செல்லும் இவ்வரலாற்றாய்வு நூலை தமிழ்கூறு நல்லுலகத்திற்கு முதன் முறையாக என்சிபிஎச் 2003 ஆகஸ்டில் பன்மொழியறிஞர் ஏ.ஜி.எத்திராஜூ அவர்கள் மொழிபெயர்ப்பில் வெளியிட்டது. தொடர்ந்து 2007ல் இரண்டாம் பதிப்பும் 2013 ஜனவரியில் மூன்றாம் பதிப்பும் வெளியாகின. வாசகர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய வடிவமைப்பில் நான்காம் பதிப்பு வெளியிடப்படுகிறது.
- பதிப்பகத்தார்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: