திராவிட இயக்க வரலாறு - பதிப்புரை
பாரி நிலையத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள உறவு மிகவும் தொன்மையானது. 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது முதல் கூட்டத்தை நடத்த நிதி உதவி செய்த பதின்மருள் ஒருவர் பாரிநிலைய நிறுவனர், அண்மையில் மறைந்த க.அ. செல்லப்பன் அவர்கள்.
பேரறிஞர் அண்ணாவின் நூல்களைத் தொடக்க காலத்திலேயே பாரி நிலையம் வெளியிட்டிருக்கிறது. திராவிட நாடு, காஞ்சி இதழ்களில் அறிஞர் அண்ணா எழுதிவந்த கடிதங்களைத் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' என்னும் தலைப்பில் 21 தொகுதிகளாக வெளியிட்டது பாரிநிலையத்தின் சாதனையாகும். அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ.' போன்ற பல நூல்களைப் பாரிநிலையம் வெளியிட்டது. அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் தம் நூல்களின் வெளியீட்டுரிமையைத் தம் கைப்பட எழுதிக் கொடுத்ததுடன், 'இனி என் நூல்களைப் பாரி நிலையமே வெளியிடும்' என்று திராவிட நாடு இதழில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
அண்ணாவைப் பின்பற்றி அக்காலத்தின் திராவிட இயக்க முன்னணி எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தோவியங்களைப் பாரிநிலையத்தின் வாயிலாகவே வெளியிட்டார்கள். பேராசிரியர் க. அன்பழகன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, தில்லை வில்லாளன், கே.ஜி.இராதாமணாளன் முதலியோரது படைப்புகள் பாரிநிலையத்திலிருந்து வெளிவந்தன. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆரம்பகால நூல்களுக்கும், பாரி நிலையம் விற்பனைக் கேந்திரமாக விளங்கியது.
அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் போன்ற பல தலைவர்கள் அக்காலத்தில் பாரிநிலையத்திற்கு வந்து புத்தகங்களை நேரிடையாகப் பார்வையிட்டிருக்கிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு.வ. அவர்களை அறிஞர் அண்ணா முதன்முறையாகச் சந்தித்தது பாரிநிலையத்தில் தான். அறிஞர் அண்ணா பாரிநிலைய நிறுவனர் திரு. செல்லப்பன் அவர்களுடன் நட்புடன் மனம் விட்டுப் பழகி வந்திருக்கிறார்.
திராவிட இனத்தின் எழுச்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நூல்களையும், நாடகங்களையும் வெளியிட்டதும் பாரிநிலையம்தான். அவருடைய நூல்களை நாட்டுடமை ஆக்கியபோது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பாரி செல்லப்பன் அவர்களை கௌரவித்ததோடு இலட்ச ரூபாய் உரிமைத் தொகையை ம் வழங்கினார்கள்.
திரு. டி.எம். பார்த்தசாரதி எழுதிய 'தி.மு.க. வரலாறு' என்ற பெருநூலின் முதல் மூன்று பதிப்புகளைப் பாரிநிலையம் தான் வெளியிட்டது. 1961ஆம் ஆண்டு முதல் பதிப்புச் சென்னைக் கடற்கரையில் திலகர் கட்டடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் அறிஞர் அண்ணா உள்ளிட்ட அன்றைய தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். 1963ஆம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற இரண்டாம் பதிப்பின் வெளியீட்டு விழா அப்போது தி.மு.க.வில் நிலவிய வெப்பத்தை அளவிடும் கருவியாக இருந்தது.
இந்தப் பாரம்பரியத்தின் வரிசையில் இப்போது 'திராவிட இயக்க வரலாறு' பாரிநிலைய வெளியீடாக வருகிறது. திராவிட இயக்கத்தின் வரலாறு, பாரத வரலாற்றைப் பின்புலமாகக் கொண்ட ஒரு நூறு ஆண்டு காலத் தமிழக வரலாறு; ஆதிக்க இனத்தவரின் சூழ்ச்சி வலையில் சிக்கி அடிமைகளாய் இருந்த தமிழ்ச் சமுதாயத்தின் விடுதலை வரலாறு; மூடப் பழக்கவழக்கங்களிலும் அறியாமை இருளிலும் மூழ்கிக் கிடந்தவர்கள் விழிப்புணர்ச்சி பெற்ற வரலாறு; தோல்விகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், தியாகங்கள், மகத்தான வெற்றிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும் வரலாறு.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் திரு. கே.ஜி.இராதாமணாளன் அவர்களின் கடும் உழைப்பில் உருவானதே 'திராவிட இயக்க வரலாறு' என்னும் இப்பெருநூல். திரு. இராதா மணாளன், பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் அன்பு மாணவர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் எனத் திராவிட இயக்கப் பெருந்தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர்; பத்திரிகையாளர்; திரைப்படங்களுக்குக் கதை, உரையாடல் எழுதியவர். திராவிட இயக்கம் பற்றிய அவருடைய அனுபவங்களின் பிழிவாக இந்நூல் வடிவெடுத்துள்ளது. பல மாதங்கள் உழைத்துத் திரட்டிய வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வுயரிய நூலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய திரு. இராதா மணாளன் அவர்களுக்கு எம் இதயங்கனிந்த நன்றி.
தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தம் பல்வேறு அரசுக் கடமைகளின் இடையிலும் இந்நூலின் கையெழுத்துப் படியைப் பார்த்து திருத்தங்களையும், அரிய கருத்துக்களையும் கூறியதுடன் சிறந்த அணிந்துரையையும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றியை உரைக்க வார்த்தைகள் போதா.
இந்நூலினை அழகிய முறையில் கணினி வடிவமைப்புச் செய்த சிவா கிராபிக்ஸ் நிறுவனத்திற்கும் அச்சிட்ட மோனார்க் அச்சகத்திற்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
தமிழகத்தின் தன்மான வரலாற்றுப் பட்டயமான இந்நூலைத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் ஏற்று எங்களை ஆதரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பாரிநிலையத்தினர்