பகத் சிங் - பதிப்புரை
எல்லோருக்கும் மே கனவுகள் இருக்கின்றன. ஆனால் சிலருடைய கனவுகள் மட்டும்தான் மற்றவர்களை உசுப்பேற்றுகின்றன; உத்வேகப்படுத்து கின்றன. தேசத்துக்காகப் போராட வேண்டும் என்ற வேட்கையை மனத்துக்குள் ஊட்டுகின்றன. அந்த வகையில் சுதந்தரப் போராளி பகத் சிங்கின் கனவு ஒவ்வொரு இந்தியனையும் சுதந்தரப் போராட்டக் களத்துக்கு உந்தித் தள்ளியது. காரணம், அந்தக் கனவை நனவாக்க அவர் மேற்கொண்ட துணிகர முயற்சிகள்.
துப்பாக்கி கொண்டு சாண்டர்ஸைக் கொன்றார்; பின்னர் அவரைக் கொன்றது நாங்கள்தான் என்று பகிரங்கமாகச் சுவரொட்டி ஒட்டினார். அதிர்ந்து போனது அரசாங்கம். யார் இந்தக் கலகக்காரர்கள் என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றாதகுறையாகத் தேடத் தொடங்கியது.
தோழர்கள் உதவியுடன் ரகசியமாக வெடிகுண்டு தயாரித்தார். அதைக் கொண்டு நாடாளுமன்றத்திலேயே குண்டு வீசி அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தார். செவிட்டு அரசாங்கத்தின் காதுகளுக்கு இதுதான் புரியக்கூடிய மொழி என்று அவர் சொன்னபோது அரசாங்கம் அதிர்ச்சியின் உச்சத்துக்குச் சென்றது.
இப்படி பகத் சிங் செய்த காரியங்கள் ஒவ்வொன்றும் அபாயத்தின் அருகில் இருந்து செய்த காரியங்கள். உயிருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஊறு ஏற்படக்கூடிய சூழ்நிலை. ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு காரியத்தையும் செய்தார் பகத் சிங். அத்தனைக்கும் பின்னணியில் இருந்தது அவருடைய தேசப்பற்று. தேசம் விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கை.
பகத் சிங். இந்தியா கண்டெடுத்த லட்சிய வீரன். சமரசமற்ற போராளி. நெஞ்சுரம் நிறைந்த விடுதலை வீரன்.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரியலட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக்கொண்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்கை!
இந்தியா கண்டெடுத்த வீரமிகு போராளிகளுள் ஒருவரான பகத்சிங்கின் வாழ்க்கையை அதன் ஜீவத் துடி துடிப் புடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் என். சொக்கன். அந்தமான் சிறை என்ற இருட்டு உலகம் பற்றியும் இந்தியாவின் சர்ச்சைக்குரிய காந்தி கொலை வழக்கு பற்றியும் முன்னதாகப் பதிவு செய்திருக்கும் என். சொக்கனின் அடுத்த முக்கியமான பதிவு இந்தப் புத்தகம்.
கே. எஸ். புகழேந்தி
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: