அண்ணாவின் மொழிக் கொள்கை - நன்றியுரை
அண்ணாவின் மொழிக் கொள்கை - நன்றியுரை
தலைப்பு |
அண்ணாவின் மொழிக் கொள்கை |
---|---|
எழுத்தாளர் | எ.ராமசாமி |
பதிப்பாளர் |
பூம்புகார் பதிப்பகம் |
பக்கங்கள் | 256 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2010 |
அட்டை | தடிமனான அட்டை |
விலை | Rs.180/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/annavin-mozhik-kolkai.html
நன்றியுரை
இனிய வாழ்த்துரை வழங்கி என்னைப் பெருமைப்படுத்திய முத்தமிழ் அறிஞர் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
மதுரை யாதவர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான, மாண்புமிகு முனைவர் மு. தமிழ்க்குடிமகன், இந்த ஆய்விற்கு வழிகாட்டியாக இருந்து என்னைப் பெருமைப்படுத்தியதுடன், ஆய்விற்குத் தேவையான செய்திகளைச் சேகரிப்பதிலும் பேருதவி செய்து இந்த ஆய்வுப்பணி சிறப்பதற்கான அறிவுரைகளை அவ்வப்பொழுது வழங்கி வந்தார். முனைவர் தமிழ்க்குடிமகன் பேரவைத்தலைவராக இருந்த காலத்தில், தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவரின் தனி அறையில் அமர்ந்து முறையியல் தேர்வு எழுதும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கினார். அநேகமாக இந்திய வரலாற்றிலேயே ஒரு பேரவைத்தலைவர் ஆய்வு வழிகாட்டியாக இருந்தார் என்றால், அவர் முனைவர் தமிழ்க்குடிமகன் மட்டும்தான்! அதே போன்று பேரவைத் தலைவரின் தனி அறையிலேயே தேர்வு எழுதிய மாணவர் என்ற பெருமை எனக்கு மட்டுமே வழங்கப்பெற்றது என்றுதான் கருதுகிறேன். இவற்றை நினைத்தாலே நெஞ்சம் சிலிர்க்கிறது!
மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்தின் தலைவரும், பேராசிரியருமான முனைவர் சுந்தரமாணிக்கம் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை நெறிப்படுத்தியும் முறைப்படுத்தி யும் இந்த ஆய்வேடு சிறப்புற அமையக் காரணமாயிருந்தார். இவ்விருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
இந்த ஆய்வை மேற்கொள்வதற்கும், ஆய்வேட்டை நூலாக வெளியிடுவதற்கும் எனக்கு அனுமதி வழங்கிய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினருக்கும், தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்குநருக்கும் என் நன்றிகள்!
இந்த ஆய்விற்கான செய்திகளைச் சேகரிப்பதில் பலர் உதவி செய்தார்கள். குறிப்பாகத் தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பக ஆணையாளர், தில்லி - நாடாளுமன்ற நூலகம், சென்னை - சட்டமன்ற நூலகம், கன்னிமாரா பொது நூலகம், அண்ணா அறிவாலய நூலகம், தந்தை பெரியார் நூலகம், குளித்தலை - தமிழ்க் கா.சு. நினைவு நூலகம், மேலூர் அரசு கலைக் கல்லூரி நூலகம், மதுரை - காந்தி நினைவு அருங்காட்சியக நூலகம், மாவட்ட மைய நூலகம், விக்டோரியா எட்வர்டு அரங்கு நூலகம் ஆகியவற்றின் நூலகர்கள், "தமிழ்ச்சுடர்' மீ.சு.இளமுருகு பொற்செல்வி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் மதுரை ப.நெடுமாறன், திருமதி சுலோசனா சம்பத், குளித்தலை பேராசிரியர்து. வெள்ளமுத்து, காஞ்சிபுரம் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி, அண்ணாவின் மகன் டாக்டர் சி.என்.ஏ. பரிமளம், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நடராசன் ஆகியோருக்கு என் நன்றிகள்!
இந்நூலை அழகுற அச்சிட்டு வெளியிட உதவிய பூம்புகார் பதிப்பகத்தார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ. இராமசாமி