கீழடியும் பிற தமிழக தொல்லியலாய்வுகளும்
கீழடி அகழாய்வு தொடர்பாக எழுந்த சர்ச்சை தமிழ்நாட்டில் பாமர மக்களிடமும் தொல்லியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.அசோகன் பிராமி எழுத்துகளுக்குப் பிறகுதான் இந்தியாவில் எழுத்து பரவியது என்ற வரலாற்றைத் தமிழ்நாட்டில் கிடைக்கும் எழுத்துப் பொறிப்புகள் கேள்விக்குட்படுத்திவந்தன.ஆனால் இங்கிருந்த தொல்லியலாளர்களுக்கு இருந்த தயக்கத்தின் காரணமாகத் தமிழ் எழுத்தின் தனித்துவம் பேசப்படாமலேயே இருந்தது.இப்போது கீழடியில் கிடைத்த எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என அறிவியல் முறைப்படி தமிழக அரசின் தொல்லியல் துறையால் நிரூபிக்கப்பட்டிருப்பதால் பொருந்தல் அகழ்வாய்வின்போது கிடைத்த ஆதாரத்தை மறுத்துப் பேசியவர்கள்கூட இப்போது மௌனமாகிவிட்டனர்.கீழடி ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்வை வளர்த்தெடுத்துச் செல்லவேண்டியது இங்குள்ள அறிவுஜீவிகளீன் கடமை.