தகுதி திறமை மோசடி!
காமராசரைப் பற்றி தந்தை பெரியார்
காமராசரை நமது நாட்டு முதல் மந்திரியாக அடைவதற்கு நான் ஓர் அளவுக்குக் காரணமானவன் என்று சொல்வேன்.
இத்தனை நாட்களுக்குள் குலக்கல்வித் திட்டம் பற்றிய முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் பலாத்காரத்தில் இறங்குவோம் என்று முதலமைச்சர் சி. ராஜகோபாலாச்சாரிக்கு எச்சரிக்கை செய்தோம். அதன் காரணமாக உடம்புக்கு சவுகரியம் இல்லை என்று சாக்குக் கூறிப் பதவியை விட்டு விலகினார். அவர் விலகாது இருந்திருதால் காமராசர் பதவிக்கு வந்து இருக்க முடியாது.
இந்தியாவிலேயே எந்தப் பகுதியும் அடையாத நன்மைகளையும் தமிழர்களாகிய நாம் அடைந்து இருக்கின்றோம். ஏனெனில், தமிழர்களாகிய நமக்குக் கண் கொடுத்தவர் காமராசர் ஆவார். காமராசர் பதவிக்கு வருவதற்கு முன்வரைக்கும் நாம் 100க்கு 10 பேர்கள்தான் படித்து இருந்தோம். இந்த நிலையை மாற்றி 100க்கு 40 பேருக்கு மேல் படித்து இருக்கும் நிலையை காமராசர் தான் ஏற்படுத்தினார். இன்றைக்கு நம் பிள்ளைகள் பாஸ் செய்து, எஞ்சினீயரிங், மெடிக்கல் காலேஜ்களில் சேர போட்டி போட்டுக்கொண்டு வருகின்றதை நாம் காண்கின்றோமே!
நாடு 10 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்து உள்ளது. காமராசர் பதவிக்கு வந்த காலம் முதல் இதற்கு முட்டுக்கட்டை முயற்சி நடந்த வண்ணமாகவே இருந்தது.
காமராசர் பதவிக்கு வந்தது 1954ஆம் ஆண்டு. அந்த ஆண்டிலேயே ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "காங்கிரசின் போக்கு சமதர்மப் போக்கு" என்று அறிவித்துவிட்டார்.
என்றைக்குக் காமராசர், காங்கிரசின் கொள்கை சமதர்மப் போக்கு என்று கூறினாரோ அன்றைக்கே பார்ப்பனர் எல்லாரும் காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
தந்தை பெரியார்