நீதியா நியாயமா (கட்டுரைகள்)
பேராசிரியர் மு. நாகநாதன் அவர்கள் எழுதி அண்மையில் (2013- நவம்பர்) வெளிவந்த நூலே நீதியா? நியாயமா? என்பதாகும். நூலின் முகப்பில் அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டுரைகள் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நூலின் உள்ளே சென்றால் அவற்றோடு ஆட்சியியல், சட்டம், அறிவியல், விளையாட்டு, வரலாறு ஆகிய துறை களிலும் கட்டுரைகள் உள்ளன; ஜாலியன் வாலா பாக் படுகொலை- வெளிவராத உண்மைகள் என்னும் கட்டுரை முதல் பெரியார்சிலை: பாராட்டுக் குரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரை 25 கட்டுரை களை உள்ளடக்கி 194 பக்கங்களுக்கு நூல் விரிந் துள்ளது. முதற் கட்டுரையில் வெளிவராத உண் மைகள் இருப்பன போலவே அனைத்துக் கட்டுரை களிலும் பல வெளிவராத உண்மைகளும் புதுச் செய்திகளும் உள்ளன; நிரம்பத் தொடர்ந்து படிப்பவர்களும் அறிந்திராத செய்திகளும் உள்ளன; அவ்வப்போது வெளிவரும் நூல்களையும் மாத- வாராந்தர இதழ்களையும், குறிப்பாக இணைய தளத்தையும் நோக்குபவராக இருப்பதால்தான் எண்ணற்ற செய்திகளை ஆசிரியரால் வெளிக் கொணரப்பட்டுள்ளன எனலாம். நூலிலுள்ள எட்டுக் கட்டுரைகள் முதலாளித்துவச் சுரண்டலை, கள்ளத்தனமான கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அவை நம்மைத் திடுக்கிட வைக் கின்றன.