முதுகுளத்தூர் கலவரம்
1957 பொதுத் தேர்தல் – அதற்கடுத்த இடைத் தேர்தல் – அவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கொந்தளிப்பு எழுந்தது। அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் சார்பில் கலந்துகொண்டவர் இம்மானுவேல் சேகரன். மறவர்கள் சார்பில் உ. முத்துராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேல் அவர்களின் தலைமை குறித்து விவாதம் எழுந்ததாகத் தெரிகிறது. கூட்டறிக்கைக்குத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகளை வெளியிடும் சமாதானத் திட்டத்தோடு கூட்டம் ஒருவகையாக முடிந்தது. மறுநாள் இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அக்கொலையின் தொடர்ச்சியாக இரு சமூகத்தினரிடையே மோதல் மூண்டு அது ஏறக்குறைய ஒரு மாத காலம் நீண்டது. பல மனித உயிர்கள் பறிபோயின. நாசமான சொத்துகள் இரு தரப்பிலும் இருந்தன. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாக முதுகுளத்தூர் தமிழக வரலாற்றில் பதிவானது.
தமிழகத்தை உலுக்கிய மிக முக்கியமான சாதியக் கிளர்ச்சிகளுள் ஒன்றான இந்தக் கலவரத்தின் மூலகாரணம் என்ன? முடிவு எது? இவை குறித்துப் பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், காங்கிரஸ்காரர் தினகரன் சம்பவக் காலத்திலேயே எழுதி வெளிவந்த நூலின் புதிய அண்மைப் பதிப்பு ‘முதுகுளத்தூர் கலவரம்’ என்ற இந்நூல்।