மாக்சிசமும் மதமும்
சமூக விமர்சனம் செய்வதை, அதாவது மார்க்சிய நோக்கில் பார்ப்பதை நவீன இலக்கியங்களுக்கு மட்டுமல்லாமல் பழையவற்றிற்கும் கொண்டு போவதை எங்கள் கடமைகளாக அப்போது தான் உணர்ந்து கொண்டோம்.
எங்களுக்கு இயல்பாக இருந்த தேடலில் மார்க்சிய நோக்கில் தமிழ் இலக்கியத்தைப் பார்த்தோம். கமாலுதீன், சதாசிவம் போன்றவர்களுடன் சேர்ந்து இந்தத் தேடலை நடத்தினோம். அப்போது ‘இயக்கமும் இலக்கியமும்’ என்கின்ற என்னுடைய கட்டுரைத் தொடர் தேனருவி என்கின்ற இலங்கைச் சஞ்சிகையில் வந்து கொண்டிருந்தது. பாலுமகேந்திரா அப்போது இலங்கையில் இருக்கின்றார். அவரும் எங்களோட உறவாடிய நண்பர். அரசியல், சமூக, உளவியல், அறிவியல் தேடல் எங்களிடையே இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் எங்களிடம் இன்னொரு அம்சம் இருந்தது. அது பிற்காலத்தில் இல்லாமல் போய்விட்டது. அதாவது சிங்கள தமிழ்ப்புலமையாளரிடையே இருந்த உறவு எங்கள் சக மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோம். நாங்கள் தமிழ் பற்றிச் சொல்ல அவர்கள சிங்களம் பற்றிப் பேச இருவரும் ஆங்கில இலக்கியம் குறித்து வாதாட – இப்படி… துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் பிற்கால மாற்றங்களால் அந்த அம்சம் இல்லாமல் போய்விட்டது.
இத்தகைய ஊடாட்டங்கள் காரணமாக நாங்கள் திறனாய்வுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டபோது தான் முற்போக்கு இலக்கிய சம்பந்தமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தோம். அந்த நிலைப்பாட்டை நிலைநிறுத்த முயலும்போது அதற்குப் பின்னர் நிலவிய இலக்கிய நோக்கை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கைலாசபதியிலன் தமிழ் நாவல் இலக்கியம் எனது தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் அந்தக் காலப்படைப்புக்கள்.
நவீன இலக்கியத்தில் ஈடுபட்ட பிறகு இந்த ஆய்வை pre modern period ( முன்நவீனத்துவக்கால கட்டத்திற்குக்) க்கு கொண்டு போக முடியாதா என்கின்ற கேள்வி எழுந்தது. அப்போது பட்ட மேற்படிப்பிற்காக கைலாசபதியும் நானும் பேராதனைப் பல்கலைக்கழகம் வந்தோம்.
மார்க்சியம் எங்களுக்குப் பெரிய உலகத்தைத் திறந்து விட்டது போல இருந்தது. மார்க்சியத்தை அறியும் வாய்ப்பு, அப்படித் தான் திறனாய்வுத்துறைக்கு வந்தோம்.