பெரியாரின் குடிஅரசு
பெரியாரின் குடிஅரசு
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பெரியாரைப் பற்றிய அத்தியாயத்தை நாம் தொடங்க வேண்டுமென்றால் குடிஅரசு இதழிலிருந்துதான் தொடங்க முடியும். ஆனால் முதல் குடிஅரசு இதழ் உட்பட சில இதழ்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இதைப்பற்றிப் பெரியாரியச் சிந்தனையாளரான ஆனைமுத்து முதல் இதழ் உட்பட இருபத்திரண்டு இதழ்கள் கிடைக்கவில்லை என்று எழுபதுகளில் குறிப்பிட்டார். அவை உரிய முறையில் பெரியாரால் பாதுகாக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நூலில் ஆசிரியர் முருகு. இராசாங்கம் குடிஅரசு முதல் இதழை மிகுந்த சிரமத்திற்கிடையே தேடி அதை அப்படியே நகலெடுத்துப் புத்தகத்தில் வெளியிட்டு, அதில் தொடக்ககாலப் பெரியார் யார், சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் அவரின் நிலைப்பாடு எப்படியிருந்தது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். இதன்படி முதல் குடிஅரசு இதழ் 1925ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன் தொடக்ககால ஆசிரியர்கள் பெரியாரும் தங்கபெருமாள் பிள்ளையும் ஆவர். இதில் தங்கபெருமாள் பிள்ளை ஆரம்பகாலக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். ஈரோட்டில் பாரதியார் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். இந்த முதல் இதழ் பெரியாரின் ஆரம்பகாலக் கருத்தியல் நிலைப்பாட்டிற்கு ஆதாரம். இதில் முகப்பில் பாரதியார் பாடல்களும் திருக்குறளும் இடம்பெற்றிருக்கின்றன. இங்கே கவனிக்க வேண்டியது, பெரியார் 1925 நவம்பரில் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகக் காங்கிரஸையும் காந்தியையும் ஒழிப்பதே என் முதல் பணி என்று சபதமிட்டு அங்கிருந்து வெளியேறியதாகும். ஆனால் அவரின் முதல் குடிஅரசு இதழ் இதற்கு முரணாக உள்ளது. காரணம் அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்கு முன்பே குடிஅரசு இதழைக் கொண்டு வந்திருக்கிறார்.
முதல் குடிஅரசு இதழ் வெளிப்படுத்தும் முக்கிய அம்சம் பெரியாருக்கு அப்போது கடவுள் நம்பிக்கை இருந்தது என்பதை. ‘ஈசன் அருளால்’ என்றுதான் அதை அவர் ஆரம்பிக்கிறார். அதே நேரத்தில் பெரியார் தன் கடவுள் நம்பிக்கைப் பற்றி ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறார். “நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய பத்தாவது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமயச்சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை இல்லாதவன் (விடுதலை அறிக்கை - 1-.1--.1962 சமயம் பற்றி). முதல் குடிஅரசு இதழைப் பெரியார் தொடங்கியபோது அவருக்கு வயது 46 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியில் 1925 ஏப்ரல் மாதம் நீதிக்கட்சித் தலைவரான சர்.பி.டி. தியாகராயர் இறந்தபோது, “அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்,” என்றார். அதே காலகட்டத்தில் ஈரோட்டில் ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்ற பெரியார் பார்வையாளர் புத்தகத்தில், “இறையருளால் வேண்டுகிறேன்” என்று குறிப்பு எழுதினார். இதனை முதல் குடிஅரசு இதழ் மூலமாக இந்நூலின் ஆசிரியர் முருகு. இராசாங்கம் வெளிப்படுத்துகிறார். முதல் இதழின் வரிகளின்படி பெரியாருக்கு ஆரம்பகாலத்தில் சாதி ஒழிப்பு நோக்கமாக இருக்கவில்லை; மாறாக சாதி சமத்துவமே நோக்கமாக இருந்திருக்கிறது.
குடிஅரசு பத்திரிகையைத் தான் ஆரம்பித்த விதத்தைப் பற்றி
01-.05-.1927 குடி அரசு இதழ் தலையங்கத்தில் பெரியார் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “ குடிஅரசு என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல்முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும்போதே நினைத்தோம்.”
தங்கபெருமாள் பிள்ளை சில மாதங்கள் மட்டுமே ஆசிரியராக இருந்த நிலையில் அவர் இறந்துவிட்ட காரணத்தால் பெரியாரே ஆசிரியராக இருந்து அதனை நடத்தினார். முதல் குடிஅரசு இதழ் காட்டும் முக்கிய அம்சம், அதில் பாரதியார் பாடல்கள் இடம்பெற்றிருந்தமை! குடிஅரசு வார இதழில் அந்த ஆண்டு நவம்பர் முதல் வாரம்வரை முதற்பக்கத்தில் குடிஅரசு பெயர் முத்திரையின் கீழ்,
“எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
என்ற வரிகள் இடம்பெற்றிருந்தன. பெரியார் 1930களுக்குப் பிறகுதான் பாரதியாரை நிராகரித்தார். மேலும் பெரியார் தலைமை வகித்த வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை” என்ற பாரதியார் பாட்டைப் பாடிக்கொண்டுதான் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை அதில் கலந்துகொண்ட கோவை அய்யாமுத்து தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். இந்நிலையில் வைக்கம் மாதிரியான போராட்டத்தைப் பெரியார் ஏன் தமிழ்நாட்டில் நடத்தவில்லை என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. மேலும் பெரியார் தன் பெயருக்குப் பின்னாலுள்ள சாதிப் பெயரை 25-.12-.1927 குடிஅரசு இதழிலிருந்துதான் நீக்கத் தொடங்கினார், அதுவரை நாயக்கர் என்பதைத் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார் என்பதை முருகு. இராசாங்கம் நிறுவுகிறார். ஆக முதல் குடிஅரசு இதழ் மூலம் சில உண்மைகளையும், தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கல்களையும் பரிசீலிப்பதே நோக்கமாகும் என்கிறார் முருகு. இராசாங்கம். அதாவது கீழ்க்காணும் கேள்விகளுக்கு இந்த நூல் மூலம் விடை காண முயற்சி செய்கிறார்.
1. குடிஅரசு முதல் மலர் வெளியான தேதி 01-.05-.1925,
2-.05.-1925, அல்லது 03-.05.-1925 ஆகிய இம்மூன்றில் எது?
2. குடிஅரசு முதல் இதழின் ஆசிரியர் பெரியார் மட்டுமா?
3. குடிஅரசு தோன்றிய நாளே சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் என்பது சரியா?
4. இறைவன், விண்ணுலகு, ஆன்மா, கூற்றுவன் பற்றி முதல் குடிஅரசில் பெரியார் புரிந்துகொண்டாரா?
5. மதம் பற்றிப் பெரியார் அன்று புரிந்துகொண்டது என்ன?
6. சாதியைப் பற்றிப் பெரியாரின் அன்றைய நிலை என்ன?
7. வர்ணாசிரமம் குறித்துப் பெரியார் உள்ளிட்ட அவர் நண்பர்களின் அன்றைய நிலைப்பாடு என்ன?
8. வைக்கம் சத்தியாக்கிரகம் பற்றி ‘யங் இந்தியா’ பத்திரிகையில் விவரித்துள்ள காந்தியார், ஈ.வே. ராமசாமி என்ற பெயர் எந்த இடத்திலும் வராமல் விழிப்போடு மறைத்தார் என்று கூறும் ஆனைமுத்துவின் கூற்று உண்மையா?
9. 1925 நவம்பர் முதல் வாரம்வரை பாரதி பாடலும் குறளும் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டு வந்துள்ளன என்று கா. சிவத்தம்பியும் அ. மார்க்ஸும் கூறும் கூற்று உண்மையா?
10. முதல் குடிஅரசு இதழ் தலையங்கப் பகுதியின் தலைப்பில் ஞானியார் பாடல் அச்சிடப்பட்டு வந்தது என்பது
உண்மையா?
11. நீதிக்கட்சியின் பிதா சர்.பி.டி. தியாகராயரின் இறப்பு நாள் எது?
12. பார்ப்பன எதிர்ப்பு-, நீதிக்கட்சி ஆகியன பற்றி முதற் குடிஅரசு காலகட்டத்தில் பெரியார் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?
மேற்கண்ட பன்னிரண்டு கேள்விகளுக்கும் இந்நூல் முதற் குடி அரசு இதழ் முதல் அதற்குப் பிந்திய சில இதழ்கள்வரை விடை காண முயற்சி செய்கிறது. 1988இல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த நூல் இப்போது விரிவான தகவல்களுடன் இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறிச் சமூக சீர்திருத்தம் சார்ந்த பொதுவாழ்வில் இயங்கிய நாற்பத்தெட்டு ஆண்டுகளில் பலமுறை தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் சமூகப் புரட்சியாளரான பெரியாரின் வாழ்வில் முக்கிய பரிணாமம் இது. இந்த நூல் அவரின் தொடக்கம் எப்படியிருந்தது என்பதைப் பற்றி நமக்குத் தெளிவான விளக்கத்தை வெளிப்படுத்துகிறது.