பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இலர். ஒவ்வொரு துறையிலும் அவர் மிக முற்போக்கான கருத்துடையவர். மதத்துறையில் அவர் கருத்து மிக முற்போக்குடையது. 'எல்லா மதங்களும் ஒழிந்து தீரவேண்டும். மதம் மக்களுடைய அறிவைத் தடைப்படுத்தக் கூடாது. உரிமையைப் பறிமுதல் செய்யக்கூடாது. மதத்தின் மூலம் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்கு இடமிருக்கக் கூடாது. மக்களனைவரும் ஒன்றென்னும் உண்மை நிலவ வேண்டும். இவை வாயளவில் அல்லது நூலளவில் இருத்தல் போதாது. நடைமுறையில் இருக்க வேண்டும். இக்கொள்கைகளுக்கு ஆதரவு தருவது மதமாயினும் சரி, அல்லது அரசியல் ஆனாலும் சரி அல்லது வேறு எதுவானாலும் சரி, அவைகளை வரவேற்க வேண்டும்.'' இக்கருத்துப் பெரியாருக்கு உண்டு. தன் மதத்தில் வெறியும், பிற மதத்தில் வெறுப்பும் உடையவர்களுக்கு இக்கொள்கை நஞ்சாக இருக்கும். ஆதலால், பெரியாரை மதத்துரோகியென்றும், நாத்திகர் என்றும் தூற்றுவோர் ஒரு சிலர்.
சமூகத்துறையிலும் பெரியார் கருத்து மிக முற்போக்கானது. "இப்பொழுதுள்ள சமூக அமைப்பு, பல பிரிவினைகளுக்கு இடமானது; உயர்வு தாழ்வுகளுக்கு அடிப்படையானது; சண்டை சச்சரவுகளுக்குக் காரணமானது; மக்களுக்குள் ஒற்றுமை தோன்றுவதற்கு இடமளிக்காதது; பிற நாட்டினர் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிகோலியது. ஆதலால், இப்பொழுதுள்ள சமூக அமைப்பு அடியோடு மாற வேண்டும். மக்களெல்லாம் ஒரு குலம் ஆகும்படியான புதிய சமூகமாக மாற வேண்டும்'' என்னும் கருத்துடையவர் பெரியார். ஆதலால், இவரை வகுப்புவாதியெனத் தூற்றுகின்றனர் ஒரு சாரார். 'வகுப்புப் பிரிவினைகள் நிலைத்திருக்க வேண்டும்; நாம் அவ்வகுப்புக்களின் மேல் ஆதிக்கம் செலுத்தவேண்டும்' என்னும் கருத்துடைய உண்மை வகுப்புவாதிகளே பெரியாரை வகுப்புவாதி எனக் கூறுகின்றனர்.
அரசியல்துறையிலும் இவருடைய போக்கு மிக முற்போக்கானது. 'சமதர்மமே எனது அரசியல் நோக்கம்' என்று கூறி வருகின்றார். இக்காரணத்தால் பணக்காரர்கள் இவரை வெறுக்கின்றனர். முதலாளித்துவத்தை நிலைக்க வைக்க விரும்பும் தேசீயவாதிகள் இவரை வெறுக்கின்றனர்.
இவ்வாறு மதம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றிலும் பெரியார் ஒரு புரட்சிக்காரராக விளங்குகிறார். பெரியார் ஒரு மதவாதியாக இருந்து பின்னர், மதப்புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு சமூகவாதியாக இருந்து பின்னர், சமூகப் புரட்சிக்காரராக மாறவில்லை. ஒரு முதலாளித்துவவாதியாக இருந்து பின்னர், சமதர்மவாதியாக மாறவில்லை. பிறப்பிலேயே மதப் புரட்சிக்காரராகப் பிறந்தார். சமூகப் புரட்சிக்காரராகப் பிறந்தார்; சமதர்மவாதியாகப் பிறந்தார்.
இளமை முதல் இன்றுவரை இவர் கொள்கையில் மாறுதல் இல்லை. விளையாட்டுப் பருவத்தில் இவரிடம் இயற்கையில் அமைந்திருந்த குணங்களே பிற்காலத்தில் இவருடைய கொள்கையாக மாறின; சொற்பெருக்குகளாக வழிந்தன; ஒரு இயக்கமாக உருப்பட்டன. தன் கொள்கையை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இவரிடம் எப்பொழுதும் இருந்ததில்லை. தன் கொள்கைக்குப் பிறர் இணங்கி வரவேண்டும். பிறர் கொள்கைக்கு இவர் இணங்கவே மாட்டார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இருக்கவேண்டிய குணம் இதுவே. புத்தர், சாக்ரட்டீஸ், கன்ஃபூஷியஸ், ஏசுகிறிஸ்து, முகம்மதுநபி போன்ற பெரியார்கள் தங்கள் கொள்கைகளில் வெற்றி பெற்றதற்குக் காரணம் இதுவே. அவர்கள் பகைவர்களால் பல துன்பங்களுக்கு ஆளாகியும், தங்கள் கொள்கைகளில் எள்ளளவும் விட்டுக் கொடுக்காத உறுதியுடையவர்களாயிருந்தனர். இன்றைய சீர்திருத்தவாதிகளில் இத்தகைய உறுதியுடையவர் பெரியார் ஒருவரே. ஆதலால், இவர் உலகப் பெரியாராவர்.
இவரைப் பற்றி பகைவர்கள், 'கொள்கை இல்லாதவர்; கொள்கையை விட்டுக்கொடுப்பவர்; கட்சி மாறுகிறவர்; கட்சியைக் காட்டிக்கொடுப்பவர்'' என்றெல்லாம் பழி கூறுவர். இப்பழி ஆதாரமற்ற பொறாமைப்பேச்சு; இவருடைய பொதுஜன செல்வாக்கைக் குறைக்கும் கெடு நினைப்புடன் கூறும் கூற்று. இவர் கட்சி மாறியிருப்பதும் உண்மை. காங்கிரசிலிருந்து மாறினார் ஏன்? அதன் போக்கு தன் கொள்கைக்கு மாறாக இருந்தது. தன் கொள்கைக்கு காங்கிரசைத் திருப்ப முயன்றார். முடியவில்லை. அதனால், அதை விட்டு விலகினார். இதுவே இவருடைய கொள்கையில் இவருக்குள்ள உறுதியான பிடிப்பைக் காட்டுவதாகும்.
இன்று பெரியார் தமிழர் தலைவராக விளங்குகின்றார். சில ஆண்டுகளுக்கு முன் இவரைத் தூற்றியவர்களும் இன்று போற்றுகின்றனர். தமிழ்மக்கள் இவர் சொற்கள் ஒவ்வொன்றையும், தங்கள் வாழ்க்கையை உயர்த்தும் செல்வங்கள் என்று கருதுகின்றனர்.
இத்தகைய பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை அறிய ஆவல் கொள்வது எவர்க்கும் இயல்பு; அறிய வேண்டுவதும் அவசியம். இவர் ஏன் மதப்புரட்சிக்காரராக இருக்க வேண்டும்? சமூகப் புரட்சிக்காரராக இருக்க வேண்டும்? அரசியல் புரட்சிக்காரராக இருக்கவேண்டும்? இப்புரட்சிகளை இவர் விரும்புவதற்குக் காரணம் என்ன? என்பவைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் எவ்வாறு தமிழர் தலைவரானார்? அவருடைய வாழ்க்கையில் இதுவரையில் செய்துள்ள செயல்கள் யாவை? அச்செயல்களால் யாருக்கு நன்மை? அவருக்கா? பொதுமக்களுக்கா? இவையெல்லாம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்தால் உணர்ந்து கொள்ளலாம்.
பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு படிப்பினைகளை ஊட்டும். பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பவர்கள் பல உண்மைகளை அறிவர். தாங்களும் அப்பெரியார்களைப் போன்ற உறுதியுடையவர்களாக இருக்க விரும்புவர்; உண்மை உடையவர்களாக ஆசை கொள்வர்; உழைப்பு உடையவர்களாக நடக்க முயற்சி செய்வர். இக்கருத்துடனேயே பல பெரியார்கள் வரலாறுகளும் எழுதப் படுகின்றன.
தமிழ்மக்கள் அனைவரும், நமது பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறியவேண்டும். அவரைப்போன்ற சீர்திருத்த வாதிகளாக வேண்டும்; தமிழ் மக்கள் உலகத்திற்கு வழிகாட்டிகளாக நிற்கக்கூடிய சிறந்த ஒரே சமூகமாக வேண்டும் என்னும் கருத்தே என்னை இதை எழுதத்தூண்டியது.
இதில், பெரியாரது பிறப்பு முதல் இன்று வரையிலும் உள்ள வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாரின் பெற்றோர் வரலாறு, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறும் விதம் இவருடைய இளமைப்பருவக் குறும்புகள், வாலிப விளையாட்டு, குடும்பவாழ்வு, பெரியாரின் வாழ்க்கைத் துணைவியார் வரலாறு, பெரியாரின் துறவுக்கோலம், பொதுவாழ்வு, பொதுவாழ்வில் வெற்றிபெற்றதற்கான காரணங்கள், அரசியல் வாழ்வு, பிறநாட்டுச் சுற்றுப்பிரயாணங்கள், கொள்கையை நிறைவேற்றுவதில் இவருக்குள்ள உறுதி, அஞ்சாத தன்மை, இடைவிடாத உழைப்பு, பகைவர்களால் இவருக்கு நேருந்துன்பங்கள், இவர் சிறைப்பட்ட காரணங்கள் ஆகிய எல்லாச் செய்திகளும் இவ்வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.
இவர் வரலாறு படிக்கப் படிக்க சுவை பயக்கக்கூடியது. இதில் வியக்கத்தக்க நிகழ்ச்சிகள் பல; துக்கிக்கத்தக்க நிகழ்ச்சிகள் பல; நகைக்கத்தக்க நிகழ்ச்சிகள் பல பொதிந்துள்ளன. இதில் குறிக்கப் பெற்றுள்ள நிகழ்ச்சிகள் முற்றும் உண்மையானவை.
பெரியார் வரலாற்றை விரிவாக எழுதவேண்டும் என்று தூண்டிய தோழர்கள் பலர். பெரியார் அவர்களே தமது வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பார்களாயின், அதுமிக நன்றாக இருக்கும். பல உண்மை நிகழ்ச்சிகளையும் விடாமல் எடுத்துக் கூறுவதாக இருக்கும். பல ஆண்டுகளாகப் பல தோழர்கள் அவரை வேண்டிக்கொண்டதுண்டு. "உங்கள் வாழ்க்கை வரலாற்றை நீங்களே எழுதி முடிக்க வேண்டும்" என்று. இவ்வாறு வேண்டிக் கொண்டவர்களில் யானும் ஒருவன். ஆனால், அவர் தன்னைப்பற்றித் தானே எழுதிக்கொள்ள விரும்பாத காரணத்தாலோ, அல்லது ஓய்வில்லாத காரணத்தாலோ அல்லது வேறு எக்காரணத்தாலோ எழுதவில்லை. அவர் இந்தி எதிர்ப்பின் பொருட்டுச் சிறைப்பட்டிருந்த காலத்திலாவது தமது வாழ்க்கை வரலாற்றை எழுதுவாரென்று எதிர்பார்த்தனர் பலர். அப்பொழுது அவர் எழுதத் தொடங்கவில்லை என்று தெரிந்தது. இதன் பிறகே தோழர்கள் தூண்டுதலின் மேல் யான் இம் முயற்சியில் ஈடுபட்டேன்.
இதை எழுதுவதற்கு உதவியாக இருந்தவைகளில் முதன்மையானது 'குடிஅரசு'ப் பத்திரிகையே. இன்னும் 'நவசக்தி'ப் பத்திரிகை; பெரியாருடைய சொற்பொழிவுகள் சிலசமயங்களில் பெரியார் தன்னைப்பற்றி எழுதிய குறிப்புகள்; பெரியாரைப் பற்றிப் பல தலைவர்களும் பத்திரிகைகளும் பல சமயங்களில் கூறியவைகள் இதை எழுதுவதற்குத் துணை செய்தன.
திரு.வி. கலியாணசுந்தர முதலியார், கைவல்ய சுவாமியார், ஈ. வெ. கிருஷ்ணசாமி நாயக்கர், எஸ். குருசாமி ஆகிய தோழர்கள் பெரியாரைப் பற்றிப் பல செய்திகள் தெரிவித்தனர்.
பெரியாரின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் காலஞ்சென்ற நாகம்மையார் வாயிலாகவே அறியப் பட்டவை. இவைகளைத் திரு S.C. சிவகாமு மூலம் கேட்டுணர்ந்தேன்.
இவ்வரலாறு பெரியார் சிறைக்குள்ளிருக்கும் போதே எழுதி முடிக்கப்பட்டது. ஆயினும், அப்பொழுது வெளியிட முடியவில்லை. இதைப் பெரியாரிடமே காட்டித் திருத்தம் பெறவேண்டும் என்னும் நோக்கத்துடன் அச்சுயேற்றாமல் நிறுத்தப்பட்டிருந்தது. நல்ல வேளையாகப் பெரியாரும் சிறைவிடுதலை பெற்றார். இதன்பின், "தமிழ் நூல் நிலையத்தார் இதன் பல பகுதிகளைப் பெரியாரிடம் படித்துக்காட்டி, பல திருத்தங்களைப் பெற்றனர். நான் எழுதியதைக் காட்டிலும் புதிதாகப் பல செய்திகள் சேர்க்கப்பட்டன. தவறாக எழுதப்பட்ட சில செய்திகள் திருத்தப்பட்டன. இதனால், இது சிறிதும் தவறில்லாததும், சுருக்கமாகவும் எல்லா நிகழ்ச்சிகளையும் ஏறக்குறைய எடுத்துக்காட்டுவதுமாகிய ஒரு உண்மை வரலாறாயிற்று.
இவ்வரலாற்றை அவசர அவசரமாகச் சில நாட்களில் இடை விடாமல் உட்கார்ந்து எழுதிமுடித்தது ஒன்றே நான் செய்த வேலை. எழுதியதைத் திருப்பிப் படித்துப் பார்ப்பதற்குக்கூட எனக்கு நேரங் கிடைக்கவில்லை. இதில் பல திருத்தங்கள் செய்தவர்களும், மேலே கூறிய தோழர்களிடம் படித்துக்காட்டி, அவர்கள் மூலம் பல செய்திகளைத் தெரிந்து கொண்டவர்களும், "தமிழ்நூல் நிலையத்தார்களே. ஆகவே, இப்புத்தகத்தைப் பற்றிக் கூறப்படும் புகழ்ச்சி அல்லது இகழ்ச்சி எல்லாவற்றுக்கும் நிலையத்தாரே பொறுப்பாளிகள்.
இவ்வளவு முயற்சியுடன் இப்புத்தகத்தை வெளியிட முன்வந்த நிலையத்தாருக்கு என் நன்றி உரித்தாகுக. இதை எழுதுவதற்குத் தூண்டிய தோழர்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். தமிழ் மக்கள் அனைவரும் இப்புத்தகத்தைப் படித்து பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ந்து, ஒவ்வொருவரும் அவரைப்போன்ற புரட்சி மனப்பான்மை படைத்தவராக வேண்டுமென்பதே எனது ஆவல். அதற்கு இவ்வரலாறு உதவி செய்யும் என்று நம்புகிறேன். எனது நம்பிக்கை வீணாகாதென்பது உறுதி.
சென்னை
10.7.1939 அன்பன்,
சிதம்பரம்