பெண் ஏன் அடிமையானாள் | ஏழாம் அத்தியாயம் – விதவைகள் நிலைமை

ஆறாம் அத்தியாயம்

ஏழாம் அத்தியாயம் – விதவைகள் நிலைமை

 

இந்திய நாட்டின் ஆட்சி உரிமை இந்திய மக்களுக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும், சாதிவேற்றுமையும் ஒழிய வேண்டுமென்று சமூகச் சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி, மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியராகிய பெண்கள் ஒரு பக்கம் அழுத்தப்பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலை கொள்வதாகக் காணோம்.

மனிதப்பிறவி கொண்ட ஆணும், பெண்ணும் இயற்கைத் தத்துவத்திலும், சமுதாய வாழ்க்கைத் தன்மையிலும் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர்களல்லவென்பதை அறிவுடைய உலகம் மறுத்தற்கியலாது. அங்க அமைப்பிலன்றி, அறிவின் பெருக்கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்குள் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் எதுவும் காண இயலுமா? இயலவே இயலாது. ஆடவரிலும் சரி, பெண்டிரிலும் சரி, முறையே அறிவாளிகளும், ஆண்மையுடையோரும், அறிவிலிகளும், பேடிகளும் உண்டு இவ்வாறிருக்கத் திமிர் படைத்த ஆணுலகம் பெண்ணுலகத்தைத் தாழ்த்தி, இழித்து, அடிமைப்படுத்தி வருத்துதல் முறைமையும் நியாயமுமாகுமா?

இந்து மதமென்பதில் ஆணுலகம் தங்கள் சமயப் பெண்ணுலகின் மாட்டுப் பூண்டொழுகும் கொடுமைச் செயல்கள் பலவற்றில் ஈண்டு நாம் விதவைகளைப்பற்றி மட்டும் கவனிப்போம்.

உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனாயினும், தம் மனைவியார் இறந்து பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் தக்க பருவமும், எழிலும் பொருந்திய இளங் கன்னியர்களைத் தன் துணைவியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். ஆனால், ஓர் பெண்மகள் கொழுநன் இழந்துவிட்டால் பதினாறு வயதுக் கட்டழகியேயாயினும், உலக இன்பத்தைச் சுவைத்தறியாத வனிதா ரத்னமாயினும் தன் ஆயுள்காலம் முழுவதும் அந்தோ தன் இயற்கைக்கட்புலனை வலிய அடக்கிக் கொண்டு, மனம் நைந்து வருந்தி மடியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வருவது என்னே அநியாயம். இது இந்து சமயத்தார் என்று கூறப்படுபவர்கள் இவ்வாறு தங்கள் சமூகம் அநியாயமாய் அழிந்துவருவதைப் பார்த்துக் கொண்டு வருவது பெரிதும் வருந்துவதற்குரிய செயலாகும். சுருங்கக்கூறின், இது ஒருவிதச் சமுதாயத் தற்கொலையேயாகும்.

முன்காலத்தில் கணவனைப் பறிகொடுத்த பெண்மணிகளைக் கணவனுடன் வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கி விடுதல் வழக்கமாயிருந்தது. இக்கொடிய வழக்கத்தை அக்காலத்தில் ஆங்கிலேய வியாபாரிக் கூட்டத் தலைவராயிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸும், சுவாமி தயானந்த சரசுவதி போன்ற இந்திய நாட்டு அறிவாளிகளும், பெருமுயற்சி செய்து, அக்கொடும் வழக்கத்தை ஒழித்துவிட்டனர். “உடன்கட்டை ஏறுவதை” நிறுத்துவதற்காகப் போராடிய அக்காலத்திலும், இந்து மத ஆசாரமே அழிந்து போவதாகவும், மதத்திற்கே கேடு வந்துவிட்டதாகவும் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், நாளடைவில் அக்கூக்குரலும் அடங்கி, “ஸ்ககமனம்” என்னும் உடன்கட்டையேறும் கொலை வழக்கம் இந்தியாவைவிட்டு அறவே மறைந்தது.

ஆனால், இப்போது நமது நாட்டில் விதவைகள் மனஞ் செய்துகொள்ளக் கூடாதென்றிருக்கும் வழக்கம், உடன்கட்டை ஏறுவதைவிட மிகக் கொடியதாயிருக்கின்றது. உடன்கட்டை ஏறுவது ஒருநாள் துன்பம். விதவையாய் வாழ்வதோ வாழ்நாள் முழுதும் தாங்க முடியாச் சித்திரவதைக் கொப்பான துன்பமாக இருந்து வருகிறது. தன் துணைவியை இழந்த கிழவன் வேறுமணஞ் செய்துகொள்ளலாம் என்றும் தன் துணைவனை இழந்த மகப்பேறு பெறாத இல்லற இன்பத்தை நுகராத - இளம்பெண்களும்கூட மறுமணம் செய்துகொள்ளக்கூடாதென்றும் கூறுவது நடுநிலைமை கொண்ட அறச் செயலாகுமா?

விதவைகள் மறுமணஞ் செய்துகொள்ளும் வழக்கம் கற்புக்குப்பங்கம் விளைவிப்பதாகும் என்று கூறினால், அது சற்றும் பொருந்தாது விதவைக்கு மறுமணஞ் செய்விக்காவிட்டால்தான் அக்கற்புக்கு ஆபத்து உண்டாவது பெரிதும் அனுபவபூர்வமாய் யாவரும் அறியக் கிடந்த உண்மை. விதவையாய் விட்டால் ஒரு பெண்ணின் உள்ளத்தில் உண்டாகும் இயற்கை இன்ப உணர்ச்சி மங்கிவிடுமா? இயற்கையில் எழும் இன்ப உணர்ச்சியை இளமங்கையர் எங்ஙனம் அடக்கிக்கொண்டிருத்தல் சாலும்? எனவே, எத்துணைக் கட்டுப்பாடுகளை அவர்கள் வைத்திருப்பினும் இயற்கையை வெல்ல வழியற்று, படிற்றொழுக்கத்தில் வீழ்ந்து கள்ளத்தனமாய்க் கருவுற்று, சிசுக் கொலைத் தோஷத்திற்கும் தீராத அவமானத்திற்கும் ஆளாகி வருகின்றார்கள். இக்குற்றம் யாரைச் சாரும்? விதவைகளை மறுமணம் செய்யக்கூடாதென்று பலாத்காரமாய்ச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் அவர்களின் சமூகத்தார்களையே சாரும் என்பது உறுதி. மறுமணம் செய்துகொள்ள விரும்பாத கைம்பெண்கள் இருந்தால் இருக்கட்டும். அவர்களைப்பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களுக்குத் தாராளமாய் மனஞ் செய்துகொள்ள இடமளிக்கவேண்டுமென்பதே நமது கோரிக்கை.

விதவைகளின் கல்யாணத்தைப்பற்றி இவ்வாறு எழுதும் நான் எழுத்தளவோடும், பேச்சளவோடும் ஆதரிக்கின்றேனா, அன்றிச் செயலிலும் அதை ஆதரிக்கின்றேனா என்ற அய்யம் பல தோழர்களுக்கு உண்டாகலாம். இதன் பொருட்டேனும் எனது கருத்தைப் பிரதிபலிக்கும் செய்கையைக் கூற விரும்புகிறேன்.

நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன். எனது வகுப்பார் பெண் மக்கள் முக்காட்டுடன் கோஷாவாக இருக்கவேண்டியவர்களெனவும் விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பினரெனும் வழங்கப் படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும், வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம். இப்படி இருந்தபோதிலும் என்னுடைய 7-ஆவது வயதிலிருந்தே மக்களில் உயர்வு தாழ்வு கற்பித்தலையும், ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு, எவரையும் தொடுவதற்கும், எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின் வாங்கியதே கிடையாது. என்னைச் சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டு அடுப்பங்கரைக்குள் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நான் தொட்ட சொம்பை என் தகப்பனார் தவிர, மற்றையோர் கழுவாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள். எங்கள் குடும்ப ஆசார, அனுஷ்டானங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள் என்னைப் பார்த்துச் சாந்தியடைந்து விடுவார்கள். “நாயக்கருக்கு அவர்கள் ஆசாரத்திற்கேற்றாற்போல்தான் ஒரு பிள்ளை என்றாலும், பிள்ளை நவமணியாய்ப் பிறந்திருக்கிறது” என்று சொல்லிப் பரிகாசம் செய்வார்கள். என்னுடைய 16 ஆம் வயதிலே பெண் மக்களைத் தனித்த முறையில் பழக்குவதையும் அவர்களுக்கெனச் சில கட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்வதையும் ஆண் மக்களின் அகம்பாவம் என்றும் நினைத்து வந்தேன்.

இஃதிவ்வாறிருக்க என் தங்கை தனது இளம் வயதிலேயே ஓர் பெண் குழந்தையையும், ஓர் ஆண் குழந்தையையும் விடுத்து இறந்துவிட்டார். இவற்றுள் அம்மாயி என்றழைக்கப்படும் என் தங்கையின் புதல்விக்கு 10 ஆவது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கல்யாணம் செய்து வைத்ததோடு, கல்யாணம் செய்த 60 ஆம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் 13 வயதுள்ள சிறு பையன் ஒரு நாள் பகல் 2 மணிக்கு விஷ பேதியால் உயிர்துறந்தான். அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும் அப்பெண் குழந்தை (என் சகோதரியின் புதல்வி) என்னிடம் ஓடிவந்து “மாமா, எனக்குக் கல்யாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா? இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே” என்று 'ஹோவென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில், மண்டையில் காயமுண்டாகும்படி திடீரென்று விழுந்தது. துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த ஆண், பெண் உள்பட சுமார் 600, 700 பேர்கள் அக் குழந்தையையும், என்னையும் பார்த்த வண்ணமாய்க் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணிர் வடித்தனர். எனக்கும் அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது. ஆனால்……. நான் கையைப் பிடித்துத் தூக்கும்போதே அதற்கு மறுபடியும் கல்யாணம் செய்துவிடுவது என்கின்ற உறுதியுடனே தூக்கினேன்.

பிறகு, அந்தப்பெண் பக்குவமடைந்த ஒரு வருடத்திற்குப்பின் அதற்குக் கல்யாணம் செய்ய நானும் என்மைத்துனரும் முயற்சிசெய்தோம். இச்செய்தி என் பெற்றோருக்கும், மற்றொருக்கும் எட்டவே, அவர்கள் இதைத் தங்கள் வகுப்புக்கு ஒரு பெரிய ஆபத்து வந்துவிட்டது போலக் கருதி, பெரிதும் கவலைக்குள்ளாகி, நாங்கள் பார்த்து வைத்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள். முடிவில் என் மைத்துனரின் இரண்டாவது மனைவியின் சகோதரரைப் பிடித்துச் சரி செய்து எவரும் அறியாவண்ணம் பெண்ணையும், மாப்பிள்ளையையும், மாப்பிள்ளையைச் சென்னை வழியாகவும், பெண்ணைத் திருச்சி வழியாகவும் சிதம்பரத்திற்கு அழைத்துச் சென்று அங்குக் கோயிலில் கல்யாணம் செய்வித்து, ஊருக்கு அழைத்துவரச் செய்தேன். ஆனால், நான் அங்குப் போகாமல் ஊரிலேயே இருக்கவேண்டியதாயிற்று. ஏனெனில், அவர்கள் போயுள்ள செய்தியைச் சுற்றத்தார் அறிந்தால், ஏதாவது சொல்லி மாப்பிள்ளையை தடை செய்துவிடுவார்களோ என்கின்ற பயத்தாலும், நான் ஊரிலிருந்தால் கல்யாணத்திற்காக வெளியூருக்கப் போயிருக்கிறார்களெனச் சந்தேக மிராது என்கின்ற எண்ணங்கொண்டுமேயாகும். இக்கல்யாணத்தின் பலனாக இரண்டு மூன்று வருட காலமாக பந்துக்களுக்குள் வேற்றுமையும், பிளவும் ஏற்பட்டு, சாதிக்கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும் சரிப்பட்டுப் போயின.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து, ஓர் ஆண் மகவைப் பெற்றனர். ஆனால், சிலகாலம் வாழ்ந்தபின் அந்த இரண்டாவது புருஷனும் இறந்துவிட்டார். இப்பொழுது தாயும், மகனும் சேமமாயிருக்கிறார்கள். எவ்வளவோ இடருக்குள் அகப்பட்டு அக்கல்யாணத்தை முடித்து வைத்தேன் என்றாலும், இன்னும் எனது வகுப்பில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட விதவைக் குழந்தைகள் சிலர் இருக்கின்றனர். பாவம், அக்குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தீண்டத்தகாதோர்போல் கருதி நடத்துவதைத் தினமும் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது.

விதவைகளின் விஷயம் எனது நினைவிற்கு வரும்பொழுதும், நேரில் காண நேரும்பொழுதும், “இது உலக இயற்கை அல்ல, எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும்” என்றே முடிவு செய்வேன். இந்து சமூகம் எந்தக் காலத்தில், எவருடைய ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதோ, அன்றி, மதமில்லாமல் முறையில்லாமல் இருந்து இயற்கையாகவே ஏதாவது கட்டுப்பாடுகள் ஏற்பட்டு அவற்றை வலியவர்கள் தங்கள் தங்கள் சுயநலத்திற்குத் தக்கபடி திருப்பிக் கொண்டார்களோ என நினைக்கும்படி இருந்தாலும், பொதுவாய் விதவைத் தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே இந்து சமூகம் ஒரு காலத்தில் அடியோடு அழிந்து போனாலும் போகுமென்பதே எனது முடிவான கருத்து.

அரசியல் என்றும், சமூகவியல் என்றும், ஜனாச்சாரச் சீர்திருத்தவியல் என்றும், பெண்கள் முன்னேற்ற இயல் என்றும் சொல்லிக்கொண்டு வேலை செய்யும் மக்களில் பெரும்பான்மையோர் அவ்வேலையைத் தங்கள் வாழ்விற்கும், கீர்த்திக்கும், சுயநலத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்வோராக இருக்கிறார்களே தவிர, உண்மையில் விதவைப் பெண்களின் பேரில் அனுதாபங்கொண்டு உழைப்பவர்கள் அரிதினுமரிதாகி விட்டனர் என்று சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அன்றியும், இத்துறைகளிலும் சீர்திருத்தங்களிலும் பாடுபடுபவர்களாய்க் காணப் படுவோரில் பெரும்பாலோர் தாங்கள் செய்யும் காரியம் சரியென்ற தீர்மானம் தங்களுக்கே இல்லாமல் உலகமொப்புக்கு இவ்விஷயங்களுக்காக உழைப்பவர்களாக விளம்பரப்படுத்திக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்றே உணருகிறேன்.

பெண்கள் விடுதலையையும், முன்னேற்றத்தையும் பற்றிப் பேசுவோர் பெரிதும் தங்கள் வீட்டுப்பெண்களைப் படுதாவுக்குள் வைத்துக்கொண்டும், விதவா விவாகத்தைப்பற்றிப் பேசுவோர் தங்கள் குடும்பங்களில் உள்ள விதவைகளைச் சிறையிலிட்டதுபோல் காவலிட்டு விதவைத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்களே தவிர உண்மையில் ஒரு சிறிதும் தங்கள் நடவடிக்கையில் காட்டுவதில்லை. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்தால், பெண் மக்கள் என்று நினைக்கும்போதே அவர்கள் அடிமைகள், ஆண்மக்கட்கு அடங்கினவர்கள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கின்ற உணர்ச்சி ஏற்படுகிறதல்லாமல், பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதில் அவர்கள் ஒரு பெருமையையும் அடைகிறார்கள். இதனாலேயே பெண்களை அநேகர் விலங்குகளைப்போல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்கின்ற விஷயத்தை நினைக்கும்போதே, “செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கையை” செய்ய நினைக்கிறதுபோலவே கருதுகிறார்கள். அதனால் மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையினருக்குப் பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பதுதானே இதன் பொருள்? ஆடவருக்குப் பெண்டிரைவிடச் சிறிது வலிமையை அதிகமாக ஏற்படுத்திக் கொண்ட குற்றந்தான், இம்மாதிரி ஒரு சரிசமமான சமூகத்தை சுதந்திரமில்லாமல் அடிமைப்படுத்தும் கொடுமையை அனுஷ்டிக்க வேண்டியதாயிற்று. இந்தத் தத்துவமே வரிசைக் கிரமமாக மேலோங்கி எளியார் வலியாரால் அடிமையாக்கப்பட்டு வருகின்றனர்.

உலகில், மனித வர்க்கத்தினருக்குள்ளிருக்கும் அடிமைத்தன்மை ஒழியவேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழியவேண்டும். அது அழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாம். இதற்கு விதவைகளுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமை ஏற்படுத்துவதே முதல் காரியமாகும்.

தேசிய சர்வாதிகாரியும், வர்ணாசிரமப் பித்தும், பழைமைப் பற்றும் மிக்குடைய தோழர் காந்தியும் இந்து விதவைகளைப்பற்றி அநேக இடங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் 1925 ஆம் வருடத்தின் “நவஜீவன்” பத்திரிகையைப் படித்தால் உண்மை புலனாகும். அக்கட்டுரையின் சில பாகமாவது,

“பால்ய விதவைகளைக் கட்டாயப்படுத்தி வைத்திருப்பதுபோன்ற இயற்கைக்கு விரோதமான பொருள் உலகில் வேறொன்றுமில்லை என்பது திடமான நம்பிக்கை. விதவைத் தன்மை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்மமாகாது பலாத்காரத்தினால் நடத்தும் கைம்மை வாழ்வு பாவமானது. பதினைந்து வயதுள்ள ஒருபால்ய விதவை தானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுவது, அவ்விதம் கூறுபவரின் கொடுர சுபாவத்தையும் அறியாமையையுமே அது விளக்குகிறது” என்று எழுதிவிட்டு விதவைகள் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்பதாக உள்ளன்போடும், ஆவேசக் கிளர்ச்சியோடும் தோழர் காந்தி கூறிய வார்த்தைகள் சிலவற்றைக் ஈண்டுக் கவனிப்போம்.

“அமைதியுடன் தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ, புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதைக் கவனிக்காவிட்டால், தாங்களே ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் விவாகம் செய்துகொள்ளட்டும். விதவைகளின் போஷகர்கள் இதைச் சரிவரக் கவனியாவிடின், பின்னால் பச்சாதாபப்படுவார்கள். ஏனெனில், நான் ஒவ்வோரிடத்திலும் துராசாரத்தையே பார்த்துக் கொண்டு வருகிறேன். விதவைகளைப் பலாத்காரமாய்த் தடுத்து விதவைத் தன்மையை அனுஷ்டிக்கச் செய்தால் விதவைகளுக்காவது, குடும்பத்திற்காவது அல்லது விதவா தர்மத்திற்காவது மேன்மை உண்டாகவே மாட்டாது. இம்மூன்று தத்துவங்களும் நசிந்து வருவதை என் கண்களினாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறேன். பால்ய விதவைகளே! நீங்களும், உங்களைப் பலவந்தப்படுத்தி விதவைகளாக வைத்திருக்கும் ஸ்திரீ, புருஷ வர்க்கங்களும் இதையறிவீர்களாக” என்று எழுதியுள்ளார்.

 நிற்க, 1921 ஆம் வருஷத்திய ஜனசங்கியைப்படி இந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்குகையில் அய்யகோ என்நெஞ்சம் துடிக்கின்றது!

1 வயதுள்ள விதவைகள் 597

1 முதல் 2 விதவைகள்  494
2 முதல் 3 விதவைகள்  1,257

3 முதல் 4 விதவைகள்  2,837
4 முதல் 5 விதவைகள்  6,707

5 முதல் 10 விதவைகள்  85,937
10 முதல் 15 விதவைகள்  2,32,147
15 முதல் 20 விதவைகள்  3,96,172
20 முதல் 25 விதவைகள்  7,42,820
25 முதல் 30 விதவைகள்  11,63,720

ஆக மொத்த விதவைகள் 26,31,788

மேலும், இத்தகைய விதவைத் தன்மையானது பிரஜா உற்பத்திக்குப் பேரிடராயிருக்கிறது. இந்துமதத்திலிருந்து எவரேனும் இரண்டொருவர் பிற மதத்திற்கு மாற்றப்பட்டால், இந்து மக்கள் தங்கட்குப் பெரும் துன்பம் நேரிட்டுவிட்டதாகக் கருதி பரிதாப்படுகின்றார்கள். இதன் காரணம் என்ன? தமது சமயத்தில் இருவர் குறைந்துவிட்டதால், இந்து சமூகத்திற்கே ஓர் பெரும் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணத்தினால். இந்த இரண்டு நபருக்காக இவ்வளவு துக்கமும் துயரமும் ஏற்படுமானால் தற்காலம் நமது இந்திய நாட்டிலுள்ள இருபத்தாறு லட்சத்து முப்போத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகள் (இப்போது சுமார் 5 லட்சம் அதிகம் பெருகியிருப்பர்) கல்யாணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதாயிருந்தால் எத்தனை குழந்தைகள் பெறக்கூடும்? சராசரி மொத்தத்தில் மூன்றில் இருமடங்குப் பெண்கள் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதாக வைத்துக் கொண்டாலும், தடவை ஒன்றுக்கு 87,725 குழந்தைகள் வீதம் வருடம் பத்துக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம் தடுத்துக்கொண்டு வருகின்றோம். இது இரண்டொருவர் மதம் மாறுவதால் நஷ்டம் வந்துவட்டதாகக் கருதுவோருக்குப் புலப்படுவதில்லை. பால் மணம் மாறாத 5 வயதிற்குட்பட்ட இளங்குழந்தைகள் மாத்திரம் 18892 பேர்கள் இருக்கிறார்களென்பதையும், தன் பிறவிப் பயனையே நாடுதற்கில்லாது இன்பந் துய்த்தற்கில்லாது அடக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 வயதிற்குட்பட்ட கைம்பெண்கள் 232147 பேர் இருக்கிறார்கள் என்பதையும் கேட்க என் குலை நடுங்குகிறது. இத்தகைய படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரிக உலகம் ஏற்கும்? விதவைகளின் கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜாராம் மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்தியாசாகரர், கோலாப்பூர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி, விரேசலிங்கம் பந்துலு, மகாதேவ கோவிந்த ரானடே, வேமண்ணா, சர். கங்காராம் முதலிய அறிஞர்கள் பாடுபட்டுழைத்தனர். இதுபோழ்தும் இத்தகைய சீர்திருத்தத் துறையில் பல பாஞ்சாலத் தலைவர்கள் இறங்கி உழைத்து வருகின்றனர்.

விதவா விவாக விஷயத்தில் பெருந்துயில் கொண்டிருந்த இந்தியா இப்பொழுது சிறிது சிறிதாகவாவது விழிப்புற்று விதவை மனத்தை ஆதரிக்க முன்வருவதும், சிலர் அது சம்பந்தமான பிரச்சாரம் செய்து வருவதும் - விதவா விவாகத்தை ஆதரித்துச் சிற்சில நூல்கள் வெளிவருவதும் ஓர் நற்சகுனமென்றே கருதவேண்டியிருக்கிறது.

தமிழ்மக்கள் இனிநாட்டின் நலத்தையும், சமூக முன்னேற்றத்தையும், மனுஷிக ஜீவகாருண்யத்தையும் எண்ணி இவ்விஷயத்தில் முன்போன்று சிரத்தை குன்றியிராது, ஆங்காங்கே விதவா விவாக சபைகள் ஏற்படுத்தியும், பிரசங்கங்கள் செய்தும், துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டும் விதவைத் தன்மையின் கொடுமையை ஒழிக்க முன்வருவார்களாக.

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

எட்டாம் அத்தியாயம்

Back to blog