நாம் திராவிடர்

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/naam-dravidar
புத்தகத்தைப் பற்றி:

திராவிடப் பேரிகை: கல்விப்புலத்தில் உரத்த ஒலி

முனைவர் செ. சதீஸ்குமார்

தமிழ்த்துறைத் தலைவர்

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி

ஈரோடு - 638 116.

 

தமிழியல் ஆய்வின் தோற்றுவாய் என்பது உரையாசிரியர்களிடத்தில் கால் கொண்டதாகும். பேராசிரியரும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் இன்ன பலரும் தம் இலக்கண - இலக்கிய உரைகளை வெறும் பொழிப்புரையாக மட்டுமல்லாமல் நுண்ணோக்கிலும் அணுகினர். இந்த நுட்பமான அணுகுமுறையே இன்றைய தமிழாய்வின் முன்னோடி முயற்சியாகும். தொடர்ந்து வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ, இராகவையங்கார், இராசமாணிக்கனார், மு.வ. போன்ற தமிழ்ப் பெருமக்களின் உழைப்பால் தமிழாய்வின் தடம் மாறத் தொடங்கிற்று. இலக்கியத்தை இவர்கள் ஆராதனை மட்டுமே செய்யாமல் சமூகம் சார்ந்த பார்வையைத் தம் ஆய்வின் அணுகுமுறையாக மாற்றினார்.

 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழாய்வில் கோட்பாட்டு ரீதியான பார்வையும், இயக்கங்கள் சார்ந்த அணுகுமுறையும் உருவாகத் தொடங்கின. தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்று வருணிக்கப்படும் இக்காலகட்டத்தைச் சார்ந்த இலக்கியங்கள் முன் எப்போதையும்விட வீரியம் கொண்டவையாக எழுதப்பட்டன. எழுதுகோல்கள் குத்தீட்டிகளாயின. படைக்கப்பட்ட எல்லா இலக்கியங்களும் மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் என்று ஏதாகிலும் ஒரு சட்டகத்திற்குள் அடைபட்டன - அடைக்கப்பட்டன. நிலப்பிரபுத்துவம், கூலி, உழைப்பு, மூலதனம், பாலாதிக்கம், சாதீயக்கொடூரம் என்று தமது பாடுபொருளை மாற்றிப் படைப்புகள் மாற்றுப் பாதையில் பயணித்தன. உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய பல இயக்கங்கள் அந்த உரிமைகள் அக்ரகாரங்களின் கால்மிதிக்கடியில் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரியாமலே களம் கண்டன கருவி பிடித்தன.

தாம் பாதாளச்சாக்கடைப் புழுக்களாக மாற்றப்பட்டதற்கு பார்ப்பனப் பாக்டீரியாக்கள்தான் காரணம் என்பதை உணராத குப்பன்களும் சுப்பன்களும் கக்கத்தில் துண்டை இடுக்கிக் கொண்டு திரிந்தனர். ஆமாம்! சாமி என்பது அவர்களின் மந்திரமானது.

 புராணங்களும் அதன்வழியே கடவுள்களும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் விபூதி வழங்கின. ஆனால் அந்த விபூதியை 45° கோணத்தில் வளைந்து வாங்கச் செய்தன. அந்தக் கூன்வளைவு கடவுளுக்கு மட்டுமன்று. அது பின்னாளில் ஆதிக்கச் சாதிகளிடம் பிச்சை வாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பயிற்சி. சொரியச் சொரியச் சுகம் என்பதுபோல் அடிமை வாழ்வில் கிடைத்த சொற்பக் கூலியும், மீந்து போன பழைய கஞ்சியும் ஓடப்பர்களுக்குச் சுவைத்தன. உதையப்பர்களுக்கு இனித்தன.

 இங்குதான் பெரியார் பிறந்தார். இவர் 1879 - இல் சின்னத்தாயி வயிற்றில் பிறந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் அடிமை வம்சத்தின் வலி பொறுக்காத பிள்ளையாகப் பிறந்தார் என்று அவர் வாழ்க்கை சொல்கிறது. காசியில் அவர் மேற்கொண்ட புனிதப்பயணம், அங்கு அவர் கண்ட காவிக்களியாட்டம், பார்ப்பனரல்லார்க்குக் கிடைத்த எச்சில் இலை என்று எல்லாமும் ஈ. வெ. ராமசாமி நாயக்கரைப் பெரியாராக வரித்தன. அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், டி.எம்.நாயர்,சி.நடேசனார், தியாகராயர் என்று பலரும் திராவிட இயக்கத்தைத் தொடங்கினாலும் பெரியாருக்கு முன்பு வரை அது சவலைப் பிள்ளையாகவே இருந்தது.

 மற்றவர்கள் கிளைகளை வெட்டிக்கொண்டிருக்க பெரியார் அடிவேரைத் தொட்டார். அசைத்தார். பிடுங்க முனைந்தார். பசிகொண்ட பாட்டாளி உணவில் கறிவேப்பிலை, மிளகாய், கொத்தமல்லி என்று எதையும் மிச்சம் வைக்காததைப்போல - சினம் கொண்ட பெரியார் புராணீகம், சனாதனம், இந்துத்துவம், அடுக்குமுறைமை இவை எல்லாவற்றையும் கட்டிக்காத்த 'கடவுள்' என்று எதையும் விட்டுவைக்கவில்லை. விமர்சித்துச் செரித்தார். கண்டனத்து ஏப்பமிட்டார்.

இன்று திராவிட இயக்கத்திற்கு வயது 110. ஈனம் தொலைத்து மானம் மீட்க உலகில் உருவான ஒரே இயக்கம் திராவிட இயக்கம் மட்டுமே. அதனால்தான் தனது தன்மான இயக்கத்தில் (Self Respect Movement) தன்மானம் உள்ள அனைவரும் உறுப்பினராகலாம் என்றழைப்பு விடுத்தார் பெரியார். அவரது பேச்சும், எழுத்துக்களும் சொரணையும் கடும் நிறைந்த படையை உருவாக்கிற்று. அண்ணாத்துரை, குத்தூசி குருசாமி, ஆசைத்தம்பி, நெடுஞ்செழியன், சிற்றரசு, மதியழகன், கருணாநிதி என்று உருவான அந்தப்படைதான் பின்னாளைய திராவிட இயக்கம். அது மண்டியிட்ட மனிதர்களுக்கு பாவமன்னிப்பைக் காட்டாமல் பார்ப்பன எதிர்ப்பை ஊட்டியது.

குப்பன்களும் சுப்பன்களும் குப்புசாமிகளாகவும் சுப்பிரமணிகளாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றனர். முதுகுத்தண்டுவடம் நேரானது. இன்று மீண்டும் வளைப்பதற்கான வேலைகள் தூய்மை பாரதத்தில் ஜரூராக நடக்கின்றன. இந்தச் சூழலில் திராவிடம் மீண்டும் உயிர்த்தெழத் தொடங்குகிறது. என்னதான் செய்துவிடும் திராவிடம்? இல்லை என்னதான் செய்தது திராவிடம்?

இந்தக் கேள்விகளுக்கு ஒரு வரியில் விடையிறுக்க இயலாது. இதற்கான பதிலை நானூற்றுச் சொச்சம் பக்கங்களாகத் தந்திருக்கிறார், முனைவர் ப.கமலக்கண்ணன். பெரியாரின் இலக்கியம், மொழி, கலை ஆகியன குறித்த ஆய்வுப் பார்வையை இந்த நூல் பிசிறின்றி முன்வைக்கிறது. இதன்மூலம் திராவிட இயக்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் தெரிகிறது. ஏனெனில் பெரியார் வேறு திராவிடம் வேறல்ல. இரண்டும் செம்புலப் பெயல்நீர்.

நூலின் ஒன்பது பகுதிகளும் கடின உழைப்பின் சான்றாதாரங்கள். நூலாசிரியர் தான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதற்காக எல்லா இடங்களிலும் பெரியார்புராணம் பாடவில்லை. சான்றாக ஓரிடத்தில் ''தனது இயக்கக் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் உடன்பாடான கருத்துக்களை எடுத்துக் கூறும் இலக்கியங்களைத் தனது இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பப் பயன்படும் கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்களை உயர்த்தியும் எதிரான கருத்துக்களை உள்ளடக்கிய இலக்கியங்களைக் குறை கூறியும் உள்ளார்” என்கிறார் - இதுதான் பெரியாரின் தாக்கம். ''என்மீது தவறு இருந்தால் என்னை வினவு!'' என்ற பெரியார் கூற்றின் அடிப்படையை மேற்கண்ட விமர்சனத்தில் அறிய முடியும். ஆய்வு முடிவில் மட்டுமல்ல. நடைமுறை வாழ்விலும் அவரால் கொள்கைப் பிடிப்புள்ள திராவிடவாதியாக இருக்க முடிந்தது.

2003 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள், சலசலத்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள் மெலிந்த கருத்த உருவம் ஒன்று நுழைந்தது. அந்த உருவம் திராவிடத்தின் குறியீடு என்று புரிய ஆறேழு மாதங்கள் ஆயிற்று. 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்கிற அந்தத் தாளுக்குரிய வகுப்பு முழுமையும் பேராசிரியர் கமலக்கண்ணன் அவர்களால் புதிய வாசல் கண்டது. வகுப்பு முழுவதும் இனம், மானம், தன்மானம், ஈனம், அடக்குமுறை, பெரியார் போன்ற வார்த்தைகளால் நிறைந்திருந்தது. பேராசிரியரின் இந்த முறையியல் எம் போன்ற வயிற்றுப்பாட்டிற்கு வழியற்ற - கல்லூரியை வெறுமனே கட்டிடங்களாக மட்டுமே பார்க்கத் தெரிந்த மாணவர்களுக்குச் சில வேதியியல் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கிற்று. அந்த மாற்றங்கள், எதனையும் சிந்தித்துச் செயல்படல், வினைக்கான காரணங்களைத் தேடல் என்று கிளைபரப்பின. இது எனக்கு மட்டும் நிகழ்ந்ததன்று. எனக்கு முன்னும் பின்னும் பல மாணவர்கள் தீட்சை பெற்றனர். பிறகு அவர் கற்றுக்கொடுத்த தூண்டில் முறைமையைக் கொண்டு - தூண்டில் செய்து நாங்கள் மீன்பிடிக்கக் கற்றுக் கொண்டோம்.

வகுப்பறை மட்டுமல்ல. சிற்றுண்டிச்சாலை, நூலக வாசகர் வட்டம், கல்வி விழிப்புணர்வு இயக்கம், நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் என்று எந்தப் பொறுப்பில் அமைந்தாலும் - அமர்ந்தாலும் அவரது வீரியம் மிக்க செயல்பாடு வியக்கத்தக்கது. குறிப்பாக இந்த அமைப்புகளால் நடத்தப்படும் முகாம்களில் தனக்கு வசதி வாய்ப்பிருந்தும் எங்களோடு கொசுக்கடியில் படுத்துறங்கியதும் சுமார்ரக உணவு உண்டதும் தான் ஆய்வில் மட்டுமல்ல - வாழ்விலும் பகுத்தறிவாளன் என்று அவர் நிரூபித்த கடந்தகாலத் தருணங்கள். ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்தியது, அதில் மாணவர்களைத் தலைமையயேற்கச் செய்தது, சில்லரைக் காசுகள் மட்டுமே புழங்கிய வறுமை சூழ்ந்த கரங்களில் முதன்முறையாக நூறு, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் திணித்தது, பணத்தின் மீது இருந்த உயர்மதிப்பை அழித்தது இவையெல்லாம் ஒரு ஆசிரியர் தன் கல்விப்புலத்தின் எல்லைக்குட்பட்டு நிகழ்த்திய சமூகப் புரட்சி. பேராசிரியரின் இந்த எல்லாச் செயல்பாடுகளுக்கும் மையச் சரடு - திராவிடம். திராவிடப் பற்றும் பெரியாரன்பும் பேராசிரியரைப் பீடித்திருக்காவிட்டால் அவர் சாதாரண ஆசிரியர் மட்டுமே. ஆனால் ஒரு விரிவுரையாளராக - நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக - திராவிட ஆய்வாளராக - இணைப் பேராசிரியராக - துறையின் தலைவராக - ஆட்சிப்பேரவைக் குழு உறுப்பினராக - ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக - பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழுவராக அவர் உச்சம் தொட்டதற்குக் கல்வியும் முயற்சியும் மட்டுமே காரணமன்று. அதையும் தாண்டி உள்ளுக்குள் உறைந்திருக்கும் பெரியார்... பெரியார்... பெரியார்.

அதனால்தான் தன் ஆய்வுநூலுக்கு அறிவுஜீவிகளிடம் அல்லாமல் என்னைப் போன்ற மாணவரிடம் அவரால் மதிப்புரை எழுதச் சொல்ல முடிகிறது. இதன் பெயரும் கட்டுடைப்புதான். இதன் பெயரும் மரபுமீறல்தான். மீறிப் பழக்கப்பட்டவர்தான் பேராசிரியர் கமலக்கண்ணன். திராவிடமானாலும் மார்க்சியமானாலும் லெனினியமானாலும் கல்விப் புலங்களில் அவற்றை அளவோடுதான் பேச - எழுத - செயல்படுத்த இயலும், பேராசிரியர் தன் 25 ஆண்டு காலத்தில் எந்தவிதத் தயக்கமுமில்லாமல் தன் திராவிடப் பேரிகையை முழக்கியிருக்கிறார். உரத்த குரலில் முழங்கியிருக்கிறார்.

மதரீதியான கட்டுமானங்கள் வலுப்பெற்றுவரும் சமகாலத்தில் அவர் திராவிடப் பண்பாட்டு மையத்தை நிறுவியிருக்கிறார். அவரது எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஆக்கம் தரும் எழுத்துப் பணியாக இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள

திராவிடச் சாதனைகள் குறித்த எழுத்தியல் நமது இன்றயை வாழ்வியலுக்கான வரைபடம். பேராசிரியர் தனக்குப் பின்னால் திராவிட ஆய்வினையும் உணர்வார்ந்த மாணவர்களையும் இணைத்துச் செயல்பட வேண்டும். அது ஒரு பெரியாரிஸ்டாக அவர் பெரியாருக்குச் செய்யும் மரியாதை. நம் போன்ற மாணவர்கள் எந்தவிதச் சார்புமின்றித் திராவிடத்தை - பெரியாரை ஆராய வேண்டும். அது பேராசிரியருக்கு நாம் செய்யும் மரியாதை.

Back to blog