இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/india-arasum-kalvik-kolkaikalum 
முன்னுரை

கல்வி பற்றி நான் கடந்த முப்பதாண்டுகளில் எழுதியவற்றில் நான்கு குறுநூல்கள் மற்றும் சில கட்டுரைகள் மட்டும் இங்கே தொகுக்கப் பட்டுள்ளன.

கல்விப் பிரச்சினைகள் குறித்து நான் எழுதியுள்ள வேறு பல கட்டுரைகள் எனது பல்வேறு தொகுப்புகளில் சிதறிக் கிடக்கின்றன. மாற்றுக் கல்வி குறித்த இரு கட்டுரைகள் எனது பின் நவீனத்துவ நிலை பெருந்தொகுப்பில் உள்ளன. பாவ்லோ ஃப்ரெய்ரேயின் கல்விமுறை குறித்த விரிவான கட்டுரையும் பாடநூல்கள் மற்றும் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் பாஜக அரசு செய்த மிக ஆபத்தான மாற்றங்கள் குறித்த விரிவான கட்டுரையும் தனிக் குறுநூல்களாக வெளியிடப் பட்டு நீண்ட நாட்களுக்குப்பின் இப்போது மீண்டும் மறுபதிப்புக் காண்கின்றன. இந்துத்துவம் பற்றிய என் பெருந்தொகுப்பிலும் இது தொடர்பாக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இவை தவிர கல்லூரி ஆசிரியர் சங்க இதழ்களிலும் அரங்குகளிலும் நான் எழுதியவையும் வாசித்தவையும் என சில கட்டுரைகள் எந்தத் தொகுப்பிலும் இல்லாமல் என்னுடைய சேகரங்களிலும் இல்லாமல் போய்விட்டன. அவற்றிலும் சில முக்கிய கட்டுரைகள் உண்டு. எடுத்துக்காட்டாக, கலைத்துறைப் பாடங்களை (humanities) அரசு கல்லூரிகளில் நீக்குகிற முயற்சி ஒன்று பொன்னையன் கல்வி அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் ஊடாக நாங்கள் அம்முயற்சியை எதிர்த்தோம். அப்போது கலைத்துறைப் பாடங்களின் முக்கியத்துவம் குறித்துக் கருத்தரங்கு ஒன்றில் வாசித்துப்பின் ஒரு இதழிலும் வெளிவந்த ஒரு முக்கியக் கட்டுரை இப்போது என் கைவசம் இல்லை.

இருக்கிற எல்லாவற்றையும் ஒரே நூலாகத் தொகுத்தால் உறுதியாக அது ஒரு முக்கிய ஆவணமாக யாருக்கும் உதவக்கூடும். என் கருத்துகளை ஏற்காதோருக்குக்கூட அது ஒரு தகவல் பெட்டகமாக இருக்கக்கூடும். எனினும் அது இன்னும் பெரிய தொகுப்பாக அமைந்து பதிப்பாளருக்கு மட்டுமின்றி வாங்குவோருக்கும் ஒரு சுமையாக அமைந்துவிடும் என்பதால் இப்போதைக்கு கடந்த 30 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட முக்கிய கல்விக் கொள்கைகளைப் பற்றிய எனது நான்கு குறுநூல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது.

கல்விக் கொள்கைகள் என்பன வெறுமனே கல்வி குறித்த ஆவணங்கள் மட்டுமல்ல; சமூக உருவாக்கம் குறித்த ஓர் ஆட்சியின் அல்லது ஒரு காலகட்டத்தின் பார்வை மற்றும் அணுகல் முறைகளைப் புரிந்துகொள்வதற்கான மிக அடிப்படையான கருவிகளும்கூட. சுதந்திரத்தை ஒட்டி ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த தொடக்க அறிக்கை, பிறகு 1966இல் பேரா. கோத்தாரி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த விரிவான அறிக்கை ஆகியவற்றிற்கும் அதற்குப்பின் உருவாக்கப்பட்டவையான இந்த நூலில் பேசப்படுகிற அறிக்கைகளுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடுகள் இந்த உண்மையை உணர்த்தும். இந்தியத் துணைக் கண்டத்திற்குள்ளும் உலக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தக் கல்விக் கொள்கை மாற்றங்களிலும் அப்படியே பிரதிபலிக்கின்றன.

அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாடு இது; ஒரு தேச உருவாக்கப் பெரும் பொறுப்பு நம் கையில் உள்ளது என்கிற பொறுப்புணர்வுடன் புகழ்பெற்ற கல்வியாளர்களால் உருவாக்கப் பட்டவை முதல் இரு அறிக்கைகள். அதற்குப்பின் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் இந்தத் தேச நிர்மாணப் பொறுப்பு குறித்துச் சிறிதும் கவனம் கொள்ளவில்லை; உலகளாவிய மாற்றங்களில் இந்தியா தன்னை இணைத்துக்கொள்ளும் துடிப்பின் வெளிப்பாடாகவே இவை அமைகின்றன.

அதிலென்ன பிரச்சினை? உலகத்தோடு ஒட்ட ஒழுகித்தானே ஆக வேண்டும் என்கிற கேள்வி இயல்புதான். எல்லாவற்றிலும் உலகம் சமநிலையில் இருந்தால் இதில் பிரச்சினை இல்லைதான். ஆனால் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வுகள் சகல மட்டங்களிலும் நிலவும் நிலையில் இது எத்தகைய பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும்? இது குறித்த கரிசனம்தான் இந்தத் தொகுப்பின் ஆய்வுக் களம்.

சில நேரங்களில் நாம் முன்வைக்கும் சில ஐயங்கள் கொஞ்சம் ஓவர்' என சிலருக்குத் தோன்றலாம். எதிர்மறையான மாற்றங்களால் பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலையில் (vulnerable) உள்ளவர்கள் நாம். நமக்கு ஐயங்கள் வருவது இயல்பு. இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு உள்ளது. இந்தத் தொகுப்பின் முதல் இரு நூல் களையும் நீங்கள் அவை எழுதப்பட்ட முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கிறீர்கள். அப்போது முன்வைக்கப்பட்ட ஐயங்களில் நியாயம் உள்ளனவா இல்லையா என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உங்களால் மதிப்பிட முடியும். அன்று கொண்ட ஐயங்கள் எத்தனை அர்த்தமுள்ளவை என்பதை யாரும் இன்று உணர இயலும்.

ராஜீவ் கால (1986) கல்விக்கொள்கையை விமர்சிக்குமிடத்து இப்போது உயர்கல்வி பொதுவாக இருக்கிறது. தொடக்கக் கல்வியில் தான் ஏழை பணக்காரர் என வித்தியாசம் இருக்கிறது' என ஒரு கருத்து முன்வைக்கப்படுவதைப் பார்ப்பீர்கள். அதாவது தொடக்கக் கல்வியில் வசதியான பள்ளிகள், எளிய வசதிகளற்ற (அரசு) பள்ளிகள் என வேறுபாடுகள் உள்ளன; ஆனால் உயர்கல்வியைப் பொறுத்த மட்டில் எல்லாமே அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகள் தான். இவை கிட்டத்தட்ட பெரிய வர்க்க சாதி வேறுபாடுகள் இல்லாமல் உள்ளன என்கிற பொருளில் அப்படிக் குறிப்பிடப்படுகிறது..... அப்போது இன்றுள்ளது போல சுயநிதிக் கல்லூரிகளின் பெருக்கம் ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது. அந்த அடிப்படையில் அந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த 32 ஆண்டுகளில் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை அப்படியே தான் இருக்கின்றன; ஆனால் சுயநிதிக் கல்லூரிகள் எத்தனை மடங்கு பெருகியுள்ளன!

இதே நூலில் பிறிதோரிடத்தில் இப்படிச் சுயநிதிக் கல்லூரிகள் பெருகுவது குறித்த அச்சம் வெளியிடப்படுவதையும் காணலாம்; இது முரணல்ல; அதுதான் அப்போதைய நிலை. மாற்றங்கள் தொடங்கி இருந்த காலம் அது. ஒரு மருத்துவக் கல்லூரி இடம் இரண்டு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறதே என இன்னொரு இடத்தில் வியந் துள்ளேன். ஆனால் இன்றோ மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக விற்கப்படுகின்றன. இப்படியான மாற்றங்களுக்குத் தக்கவாறு நமது கல்வி அமைப்பைத் தகவமைக்கும் முயற்சிகளாகத்தான் இந்தக் கல்விக் கொள்கைகள் அமைகின்றன. அதனால் தான் சமூகம் செல்லும் திசையை அடையாளம் காட்டக் கூடியவையாக இந்தக் கல்விக் கொள்கைகள் உள்ளன எனச் சொன்னேன்.

இந்தத் தொகுப்பின் கடைசிப் பகுதி நரேந்திர மோடி தலைமை யிலான இன்றைய பாஜக அரசு உருவாக்கியுள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கையை விரிவாக ஆராய்கிறது. பொருள் வணிகம் மட்டுமின்றிச் சேவை வணிகங்களும் (service trades) உலகச் சந்தைக்குத் திறந்துவிடப்படும் காலகட்டத்திற்கான கல்விக் கொள்கை இது என இந்நூலின் இறுதிப் பகுதி நிறுவுகிறது. மாணவர்களை உயர் கல்விக்குரியவர்கள் எனவும், உயர்கல்விக்குத் தகுதியற்றவர்கள் எனவும் இரு கூறாகப் பிரிக்கும் உள் நோக்கத்தை இன்றைய கல்விக் கொள்கை எவ்வாறு முன்வைக்கிறது என்பதைக் கவனிக்கும் போது நமக்கு அச்சத்தால் நா வறள்கிறது.

கல்வி அதிகாரங்களை மத்தியப்படுத்தல், வளாகங்களில் அரசியலகற்றுதல், ஒருசாராரைத் தொழிற்பயிற்சியை நோக்கித் தள்ளுதல், மேலும் மேலும் உலகமய முயற்சிகளுக்குப் பணிதல் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சிக்கும் பாஜக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையும் இந்த நூலின் ஊடே யாரும் புரிந்து கொள்ள இயலும். கூடுதலாக பாஜக அரசின் ஆபத்து என்பது கல்வியை இந்துத்துவக் கருத்தியலுக்குத் தக மாற்றி குழந்தைகளின் மனத்தில் வெறுப்பு விஷத்தைப் பதிப்பதில் அடங்கியுள்ளது. அது குறித்து எனது இதர நூல்கள் விரிவாகப் பேசுவதால் இங்கு அதிகம் கவனம் குவிக்கப்படவில்லை.

இந்தத் தொகுப்பில் உள்ள முதல் தொகுதி 1985 இல் ராஜீவ் அரசு முன்வைத்த புதிய கல்விக் கொள்கை' நகல் அறிக்கையை அலசுகிறது. இரண்டாம் தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் அதே கால கட்டத்தில் எழுதப்பட்டவைதாம். அவை அரசுகளுக்கும் பாசிசத் திற்கும் கல்விக் கொள்கைகளுக்கும் உள்ள தொடர்புகளைக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்குகின்றன. கல்வி எப்படி ஒரு 'கருத்தியல் அரசு கருவியாக' (ideologicalstateapparatus) விளங்குகிறது என விளக்கும் இப்பகுதி கோட்பாட்டாளர்களுக்குப் பெரிய அளவில் உதவும். அல்து சரிய மார்க்சியப் பார்வையின் ஊடாகக் கல்விக் கொள்கை எனும் கருத்தாக்கம் இப்பகுதியில் ஆய்வுசெய்யப்படுகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள மூன்றாம் பகுதி முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு இயற்றிய கல்வி உரிமைச் சட்டம்',’ உணவு உரிமைச் சட்டம்' எனும் இரு முக்கிய சட்டங்களை விமர்சிக்கிறது. 2009 இல் கல்வி உரிமைச்சட்டம் இயற்றப்பட்டது. அதே ஆண்டு உணவு உரிமைச் சட்டத்திற்கான நகல் முன்வைக்கப்பட்டது.

அப்போது எழுதப்பட்டுக் குறுநூலாக வெளிவந்த கட்டுரைகள்தாம் இப்பகுதியில் உள்ளன. உணவு உரிமைச் சட்ட நகல் பின்னர் 2013இல் சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டங்களும் தகவல் உரிமைச் சட்டம், நிலக் கையகப்படுத்தல் திருத்தச் சட்டம் முதலியனவும் குறைபாடுகள் உடையவையாயினும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இயற்றிய வரவேற்கத்தக்க சட்டங்கள் இவை என்பதில் ஐயம் இல்லை. எனினும் அவற்றில் உள்ள குறைபாடுகளை மிகக் கடுமையாக நாம் விமர்சிக்கவும் செய்தோம். அப்படியான விமர்சனக் கட்டுரைகளை இப்பகுதியில் காணலாம்.

நூலின் நான்காம் பகுதி இன்றைய பாஜக அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைப் பகுப்பாய்வு செய்கிறது. தொடக்கத்தில் சொன்னது போல இவை அனைத்தையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் போது தனித்தனியாகப் பார்க்கும் போது கிடைப்பதைக் காட்டிலும் சமூகம் இயங்கும் திசை குறித்த கூடுதல் பரிமாணம் ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இவற்றிற்கு முன்னதாக ஜவஹர்லால் நேரு காலத்தில் வெளிவந்த இரு கல்விக் கொள்கைகளையும் இத்தொகுப்பு பேசாவிட்டாலும் ஆங்காங்கு ஒப்பீட்டிற்காக அவையும் விரிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதானால் உலகமயக் காலத்தில் நமது கல்வி முறை அடைந்த மாற்றங்களின் விமர்சனபூர்வமான வரலாறாக இந்நூல் அமைகிறது எனலாம்.

இந்நூலிலுள்ள கட்டுரைகளை வெளியிட்ட இதழாசிரியர்கள், பொதியவெற்பன், புலம் லோகநாதன், பாரதி புத்தகாலயத் தோழர்கள், அறிமுகவுரை ஒன்றை எழுதிய பேராசிரியர் ப. சிவகுமார், இப்போது இத்தொகுப்பை வெளியிடும் அடையாளம் பதிப்புக்குழு, எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

கல்விக் கொள்கை என்பது வெறும் கல்வி குறித்த ஓர் அணுகுமுறை மட்டுமல்ல, சமூக உருவாக்கம் குறித்த ஓர் ஆட்சியின் அல்லது ஒரு காலகட்டத்தின் அணுகல் முறையைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படைக் கருவியாகவும் இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, நேரு காலத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு, பேராசிரியர் கோத்தாரி குழு ஆகியவை அளித்த அறிக்கைகள் தேச நிர்மாணம் குறித்த பொறுப்புடன் உருவாக்கப்பட்டன. இவை கல்விப் பரவலில் அரசின் பங்கை வலியுறுத்தின; அருகமைப் பள்ளிகளையும் இலவசக் கல்வியையும் பரிந்துரைத்தன.

இந்த நூலில் கல்வியாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ், 1986-2016 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக்கொண்டு, 1980களின் பிற்பகுதியில் இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்விதம் இந்தியக் கல்விக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை விவரிக்கிறார்.

இதை, சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான 'ஒரு துருவ உலகம்', கல்வியை அரசின் பொறுப்பில் செயல்படும் 'மக்கள் சேவை' எனும் நிலையிலிருந்து தனியார்களும் கார்பொரேட்களும் இலாபம் ஈட்டும் பண்டம்' என்கிற நிலைக்கு எவ்வாறு தாழ்த்தின என்பதினூடாக உலகளாவிய பொருள் வணிகத்திற்கான - 'காட்' ஒப்பந்தத்தை அடுத்து இப்போது உலகளாவிய சேவை வணிகத்திற்கான - 'காட்ஸ்' ஒப்பந்தம் எப்படி உருவாகியிருக்கிறது போன்றவற்றுடன் விளக்குகிறார்.

அத்துடன் கல்விக் கொள்கைகளைப் புகழ்மிக்க கல்வியாளர்கள் உருவாக்கிய நிலைபோய் இன்று அம்பானி, பிர்லா போன்றவர்களின் தலைமையில் என் உருவாக்கப்படுகின்றன, பல்கலைக்கழகம் எனும் கருத்தாக்கமே இன்று மாற்றமடைகிறதா, இன்றைய பாடத்திட்டங்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குப் பதிலாக பயிற்சிபெற்ற ரொபோட்களைப் போல மாணவர்களை உருவாக்குகிறதா, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரம் பிரிக்கப்பட்டு, மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வோர், வெறும் தொழில் பயிற்சிபெறுவோர் என ஏன் பிரிக்கப்படுகிறார்கள், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் உருவாக்கப்படுவதன் பின்னணி போன்றவற்றையும் இந்த நூல், விவரிக்கிறது.

இதன் மூலம், அரசின் கல்விக் கொள்கை குறித்த மாற்றங்களை நாம் தெரிந்து கொள்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் அதிக வாய்ப்பைத் தருகிறது இந்த நூல்.

 

 

அ. மார்க்ஸ்

பிப்ரவரி 2, 2017

சென்னை

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog